அளவற்ற அருளாளன்... நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2 : 196) அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல் குர்ஆன் 3 : 96, 97)
ஹஜ், உம்ராவின் அவசியத்தையும் சிறப்புகளையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பணம் மற்றும் உடலால் நாம் செய்யும் தியாகம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இப்புனித வழிபாட்டை குர்ஆன் மற்றும் நபி வழி முறைப்படி நிறைவேற்ற வேண்டும். எனவே ஹஜ், உம்ராவின் முறைகளை எளிதாகவும் சுருக்கமாகவும் இதில் கூறியுள்ளோம். இதனைப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். அல்லாஹ் நம் அனைத்து வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!
உம்ரா செய்யும் முறை:-
எல்லையிலிருந்து இஹ்ராம் அணிந்து கொள்ளவேண்டும்.
தவாஃப் செய்ய வேண்டும்.
ஸயீ செய்ய வேண்டும்.
மொட்டையடிக்க வேண்டும்.
பெண்கள் ஆண் துணை அதாவது மஹ்ரம் (மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள்) இல்லாமல் ஹஜ், உம்ரா செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இஹ்ராம் அணியும் முறை:-
இஹ்ராம் அணிவதற்கென எல்லைகள் உள்ளன. அந்த இடம் வந்தவுடன் குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.
விமானத்தில் வருபவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பே குளித்து, நறுமணம் பூசி இஹ்ராம் ஆடையை அணிந்து கொள்ளவேண்டும்.
ஆண்களுக்கு இஹ்ராமுடைய ஆடை, தைக்கப்படாத இரு வெள்ளை துணிகள் ஆகும். அதில் ஒன்றை வேட்டியைப்போல் உடுத்திக்கொள்வது, மற்றொன்றை மேனியில் போர்த்திக்கொள்வது.
இஹ்ராமின்போது பெண்கள் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் உடலை சரியாக மறைக்காமலோ, அழகை வெளிக்காட்டும் விதமாகவோ இருக்கக்கூடாது. மேலும் முகத்தையும் முன்னங்கைகளையும் மறைக்கக் கூடாது.
தல்பிய்யா:-
எல்லை வந்ததும் உம்ராச் செய்பவர், லப்பைக்க உம்ரதன் என்று நிய்யத் சொல்லி உம்ராவை துவக்கிவிட்டு தல்பிய்யாவை தொடர்ந்து கூறவேண்டும்.
லப்பைக், அல்லாஹ§ம்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல் முல்க் லாஷரீக லக்.
பொருள் : உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். அல்லாஹ்! உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். இணை துணையற்ற உன்னுடைய அழைப்பை ஏற்று வந்தேன். நிச்சயமாக புகழனைத்தும் உனக்கே உரித்தாகும்! மேலும் அருட்கொடையும், அரசாட்சியும் உன்னுடையதே! உனக்கு எவ்வித இணை துணையில்லை.
தல்பியாவை இஹ்ராம் அணிந்ததிலிருந்து கஃபாவிற்குள் நுழையும் வரை சொல்ல வேண்டும். ஆண்கள் தல்பியாவை சத்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் கூறவேண்டும். இஹ்ராமின் எல்லைக்கு உட்பகுதியில் இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ள வேண்டும்.
இஹ்ராம் அணிந்துள்ளவர் செய்யக் கூடாதவைகள்:-
- திருமண ஒப்பந்தம் மற்றும் அது சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபடுவது.
- மனைவியுடன் கூடுவது. (உடலுறவு கொள்வது).
- வேட்டையாடுவது.
- உடலுக்கோ, ஆடைக்கோ நறுமணம் பூசுவது.
- தலையில் படக்கூடிய தொப்பி, தலைப்பாகை போன்றவற்றைக் கொண்டு தலையை மறைப்பது.
- முடி, நகம் வெட்டுவது.
- கெட்டவார்த்தைகள், வீண் பேச்சுக்களில் ஈடுபடுவது.
- தைக்கப்பட்ட ஆடை மற்றும் காலுறை அணிவது.
கஃபத்துல்லாவை அடைந்தவுடன்...
பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ் அல்லாஹீம்மஃப்தஹ் லீ அபுவாப ரஹ்மதிக
என்று கூறிய பின்பு தவாஃப் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பிக்கும் முன் தோளில் உள்ள துண்டை வலப்புற அக்குளின் கீழாக விட்டு இடப்புற தோள் மேலாக விட வேண்டும். வலதுபுற தோள் புஜம் திறந்தும், இடப்புற தோள் புஜம் மூடியும் இருக்க வேண்டும்.
தவாஃப் செய்யும் முறை:-
கஃபாவை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும். கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லிலிருந்தோ அல்லது அதற்கு நேராக நின்றோ சுற்ற ஆரம்பித்து மீண்டும் அதனை வந்தடைவது ஒரு சுற்றாகும்.
பிஸ்மில்லாஹி அல்லாஹ§அக்பர் என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் (வாய்ப்பு இருந்தால்) ஹஜ்ருல் அஸ்வத் கல்லைமுத்தமிடவேண்டும். முடியவில்லையெனில் அதனை நோக்கி வலது கையை உயர்த்தி அல்லாஹ§ அக்பர் என்று கூறவேண்டும். ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடாவிட்டால் தவாஃபில் எந்தக் குறையும் ஏற்படாது. எனவே ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதற்காக போட்டிபோட்டு பிறருக்குத் துன்பம் தரலாகாது.
முதல் மூன்று சுற்றுக்களில் நடையை நெருக்கமாக வைத்து தோள்களை உலுக்கி (விரைவான நடை போன்று) செல்லவேண்டும். (முதல் மூன்று சுற்றுகள் முடிந்ததும் விரும்பினால் தோள்களை மறைத்துக்கொள்ளலாம்) ஏனைய நான்கு சுற்றுக்களை சாதாரணமாக நடந்து செல்லவேண்டும். தவாஃபின் போது நமக்கு தெரிந்த திக்ர், துஆ மற்றும் நம் தேவைகளை
கேட்டு வரலாம். குர்ஆனை ஓதிக்கொண்டும் வரலாம். ஆனால் ருக்னுல் யமானி மற்றும் ஹஜ்ரத் அஸ்வத் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில்...
ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரத்தி வஹஸனதன் வகினா அதாபன்னார்
பொருள் : 'எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்ற துஆவை மட்டும் ஓத வேண்டும்.இவ்வாறாக ஏறு சுற்றுக்களை முடித்துக்கொண்டு எட்டாவது முறையும் ஹஜ்ரத் அஸ்வத்தை முத்தமிட முடிந்தால் முத்தமிட்டுவிட்டு, முடியாவிட்டால்
வத்தஃகிதூ மிம்மகாமி இப்றாஹீம முஸல்லாஹ்
என்று ஓதியவாறு மகாமே இப்ராஹீமிற்கு நேர் பின்னே நின்று தொழ வேண்டும். அதாவது நமக்கும் கஃபத்துல்லாவிற்கும் இடையில் மகாமே இப்ராஹீம் இருக்குமாறு தொழ வேண்டும். இந்த முதல் ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல் யாஅய்யுஹல் காபிரூன் -அத்தியாயம் 109 ஐயும், இரண்டாவது ரக்அத்தில் அல்ஹம்து சூராவிற்கு பின் குல்ஹ§வல்லாஹ§ அஹது
(இஃக்லாஸ்) அத்தியாயம் 112 ஐயும் ஓத வேண்டும்.
ஸூரத்துல் காபிரூன்
ஸூரத்துல் இஃக்லாஸ்
இவ்வாறாக தொழுகையை முடித்துக்கொண்டு ஸம் ஸம் தண்ணீரை அருந்த வேண்டும். இதன் பின்னர் ஸயீ (தொங்கோட்டம்) செய்வதற்காக ஸஃபா வாயில் வழியாக உள்ளே பிரவேசிக்க வேண்டும்.
ஸஃபா வாயில் வழியாக பிரவேசிக்கும்போது...
இன்னஸ்ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்
பொருள் : ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.
என்ற மறைவசனத்தை ஓதிவிட்டு ஸஃபாவின் மீது கொஞ்சம் உயர்ந்து கிப்லாவை முன்நோக்கி அல்லாஹ்வை ஒருமைபடுத்தி
அல்லாஹ§ அக்பர் - அல்லாஹ§ அக்பர் - அல்லாஹ§ அக்பர்
லாயிலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹ§ லாஷரிகலஹ§ லஹ§ல் முல்கு வலஹ§ல் ஹம்து வஹ§வ அலா குல்லி ஷையின் கதீர், லாயிலாஹ
இல்லல்லாஹ§ வஹ்தஹ§, அன்ஜ(ண)ஸ வஃதஹ், வனஸர அப்தஹ், வஹஜமல் அஹ்(ண)ஸாப வஹ்தஹ்
என்ற திக்ரை ஓத வேண்டும். பின்பு இரு கைகளையும் உயர்த்தி இயன்ற அளவு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இவ்வாறு மும்முறை செய்ய வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மேலே பச்சை நிற விளக்குகளை அடைகின்ற போது ஆண்கள் விரைந்து செல்ல வேண்டும். யாருக்கும் சிரமத்தை ஏற்படுத்த கூடாது.
அடுத்த பச்சை நிற விளக்குகளை அடைந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். மர்வாவை அடைந்தவுடன் சற்று உயர்ந்து நின்று கஃபாவை முன்னோக்கி இரு கைகளையும் ஏந்தி லாயிலாஹ... என்ற முன்னர் ஓதிய துஆவை மும்முறை ஓதிவிட்டு ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைந்து செல்ல வேண்டும். அடுத்த பச்சை நிற விளக்கு வந்தவுடன் விரைவை நிறுத்தி நடக்க வேண்டும். இவ்வாறாக ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடிவது ஒரு சுற்று, மர்வாவில் ஆரம்பித்து ஸஃபாவில் முடிவது இரண்டாவது சுற்று, இவ்வாறாக ஏழாவது சுற்று மர்வாவில் முடிவடையும். ஸஃபா, மர்வா அனைத்து சுற்றுக்களிலும் நமக்கு விருப்பமான துஆக்களை கேட்கவேண்டும். திருமறை வசனங்களையும் ஓதலாம்.
ஸயீயை முடித்துக் கொண்ட பின் ஆண்கள் மொட்டையிட்டுக் கொண்டும், பெண்கள் தங்கள் தலைமுடியிலிருந்து ஒரு அங்குலம் அளவிற்கு குறைத்து கொண்டும் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
(இஹ்ராமிலிருந்து விடுபட) மொட்டையிட்டுக் கொண்டவருக்கு மும்முறை பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மொட்டையிடாமல் முடியை குறைத்து கொண்டவருக்கு ஒரு முறை மட்டுமே துஆ செய்துள்ளார்கள். எனவே ஆண்கள் மொட்டையிட்டு இஹ்ராமிலிருந்து விடுபடுவதே சிறந்ததாகும்.
இத்துடன் உங்கள் உம்ரா இனிதே நிறைவு பெறுகிறது (இன்ஷா அல்லாஹ்)