ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் 160 மீட்டர் உயரமுடைய கட்டிடம் ஒன்று, உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கட்டிடம் என்ற பெருமையை அடைந்துள்ளது.
இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான் உலகின் முதல் சாய்கோபுரம் என்ற பெருமையை பெற்றது. இந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் "அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன்" என்ற நிறுவனம் சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி தொடங்கியது.
'கேபிட்டல் கேட்' என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் 160 மீட்டர் உயரமும் 35 மாடிகளையும் கொண்டது. இந்த கட்டடம் 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும். பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி மட்டுமே ஆகும்.
12 மாடிகள் செங்குத்தாகவும், மீதம் உள்ள மாடிகள் சிறிய அளவில் சாய்ந்தும் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
ஐந்து நட்சத்திர ஓட்டல்களும், அலுவலகங்களும் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்க்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக