அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
31 அக்டோபர், 2011
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அங்கீகாரம் காலவதியகிவிட்டதா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் தமிழகத்தில், இரண்டு கட்சிகள் உள்ளன. ஒரு கட்சிக்கு, முன்னாள் எம்.பி., காதர்மொய்தீனும், மற்றொன்றுக்கு, மறைந்த அரசியல் தலைவர் காயிதேமில்லத்தின் பேரன் தாவூத் மியாகானும் மாநிலத் தலைவராக உள்ளனர். இரு கட்சிகளும், ஒவ்வொரு தேர்தலிலும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அணிகளில், தனித்தனியே கூட்டணியில் இடம் பெறும். கடந்த 10 ஆண்டுகளாக, எதிரெதிர் அணிகளில் தான் செயல்படுகின்றன.
தற்போது உண்மையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யார் என்பதற்கு, அதிக போட்டி ஏற்பட்டுள்ளது. தாவூத் மியாகான் ஒரு பக்கமும், மறைந்த அப்துல் சமதுவின் மகள் பாத்திமா முசபர் மற்றொரு புறமும், தேர்தல் கமிஷனுக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர். தாவூத்மியாகான் புகார் அடிப்படையில், தேர்தல் கமிஷன் கடந்த ஜூலை மாதம், காதர்மொய்தீனுக்கும், மத்திய அமைச்சர் இ. அகமதுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டிருந்ததாவது: காதர்மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலும், தி.மு.க.,விலும் உறுப்பினராக பதிவு செய்துள்ளார் என்றும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி என்ற கட்சியிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியிலும் உறுப்பினராக பதிவு செய்துள்ளார். இந்திய தேர்தல் கமிஷன் விதிப்படி, ஒருவர் ஒரு கட்சியில் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் உறுப்பினராக இருப்பதை, தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காது. எனவே, இதுகுறித்து பதில் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது.
அடுத்த மாதத்தில் நாங்கள் தான் முஸ்லிம் லீக்: இப்பிரச்னை குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் கூறியதாவது: காயிதே மில்லத் காலம் முதல் முஸ்லிம் லீக் கட்சிகள், மாநில வாரியாக தனித்தனி பெயர்களில் செயல்படுகின்றன. தமிழக மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை, 1984ம் ஆண்டு முதல், தி.மு.க., – அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணியிட்டு, உதயசூரியன், இரட்டை இலை மற்றும் கை சின்னங்களில் நின்று வெற்றி பெற்றது.
தற்போது, இந்திய தேர்தல் ஆணைய புதிய நிபந்தனைகளால், பல மாநிலங்களில் பல பெயர்களிலுள்ள எங்கள் கட்சியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற ஒரே பெயரில் இணைக்க உள்ளோம். முதல்கட்டமாக, கேரளாவில் இ.அகமதுவை தலைவராக கொண்ட, முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி கட்சியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இணைக்கும் பணி முடிந்துள்ளது. தமிழகத்தில், அடுத்த மாதம் 30ம் தேதிக்குள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன், தமிழக மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை இணைத்து விடுவோம். இதனால், கேரளா, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின், முஸ்லிம் லீக் கட்சிகளும் ஒரே தலைமையின் கீழ் வரும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற அளவுக்கு கட்சியில், பலமுனைப்போட்டி வலுத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை பதவி நீக்கம் செய்ய ஒரு அணி கோரிக்கை விடுத்துள்ளது.
தாவூத் மியாகானை பொறுத்தவரை, எங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எங்களுக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்குகள், சுப்ரீம்கோர்ட் வரை தள்ளுபடியாகி விட்டன. தற்போது, புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தேர்தல் கமிஷன் “செக்’ : உள்ளாட்சி தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தோர், 117 இடங்களில் வென்றுள்ளனர். இதில், 39 பேர் கட்சியிலிருந்து கேட்கப்பட்ட நாற்காலி சின்னத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்க்கக்கூடாது என்று, தாவூத்மியாகான் கொடுத்த புகாரின் பேரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை வெற்றி பட்டியலில் சேர்க்க, தமிழக தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷனுக்கு முஸ்லிம் லீக் கட்சி கடிதம் எழுதியது. அதற்கு,”இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில அளவில் பதிவு செய்யப்படவில்லை. அதை பதிவு செய்த பின்னர், பட்டியலில் சேர்ப்போம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்சி பெயரில் தேர்தலில் நிற்காததால், உங்களுக்கான அங்கீகாரம் காலாவதியாகிவிட்டது. எனவே உங்கள் வேட்பாளர்கள் சுயேச்சை பட்டியலில் உள்ளனர்’ என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இப்படி பலமுனை பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை யார் கைப்பற்ற போகின்றனர். சட்டரீதியாக யாருக்கு சொந்தமாக போகிறது என, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நான் தி.மு.க., எம்.பி., தான் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி.,யாக அறியப்பட்ட, வேலூர் லோக்சபா தொகுதி எம்.பி., அப்துல்ரஹ்மான் மீதான புகார் குறித்து, அவரிடமே கேட்டபோது, கூறியதாவது: தாவூத் மியாகான் ஏதாவது புதிய பிரச்னைகளை எழுப்பி கொண்டிருப்பார். என்னை பதவி நீக்கம் செய்ய, சபாநாயகர் மீராகுமாரிடம் அவர் மனு அளித்திருந்தாலும், அதன்பேரில் என்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால், நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி யில், எந்த பதவியிலும் கிடையாது; ஏன், நான் அதில் உறுப்பினர் கூட கிடையாது. என்னை பொறுத்தளவில், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தி.மு.க., எம்.பி., எனவே, தாவூத்மியாகானின் புகார் ஆதாரமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக