அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.
நல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் இடத்துக்கு வருபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், “ நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.
இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தன்னிடம் மீதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், “அம்மா, நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையச்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயாக நேசித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், “இதனை நீ தான் சமைத்தாயா?” என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். “ அப்படியானால் யார் சமைத்தது” இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணர்சிகளால் இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, “இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்”. கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது. துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளுக்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.
காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்றி மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தியரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலுக்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயாருக்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி அம்மா என கத்தி அழும் அளவுக்கு அவனுக்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.
ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். “உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் இருக்கிறாள்” என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. உயிர் போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது “அம்மா” என கதறினான். கண்ணீர் விட்டான். இறந்த தனது தாயை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவதாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தாயார் கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது. அதில் இருந்த வரிகள் இதுதான்………….
“அன்பின் மகனே!..
சாந்தியும் சமாதானமும நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!
எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ
வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனுக்கு
மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு
குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது. உனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே
மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன்
கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை
வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான்
வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன்
என்று. அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ
விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன்
கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது.
வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே
உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.
அதனால்….
என் ஒரு கண்ணை உடனடியாக தானம் செய்து உனக்கு
பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று
உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை
பார்ப்பதும் அந்த கண்களாளேயே!…
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை
பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா?
இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்.”
இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள, உன் குருட்டு அம்மா.
by: Abu Maslama
நன்றி: கைபர் தளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக