
ரிசர்வ் வங்கியில் இருந்து வரும் நாணய பாக்கெட்டில், அரசு முத்திரை இல்லாத ஐந்து ரூபாய் நாணயம் வெளிவந்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நாணய பாக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ரூபாய் நோட்டை செலுத்தினால், அதற்கேற்ப நாணயங்கள் வெளிவரும் வகையில், ஏ.டி.எம்., மிஷின்களும் உள்ளன. சில தினங்களுக்கு முன், ரிசர்வ் வங்கி கவுன்டரில் வியாபாரி ஒருவர் 500 ரூபாய் பணம் செலுத்தி, ஐந்து ரூபாய் நாணயங்கள் கேட்டார். தங்க முலாம் பூசப்பட்ட ஐந்து ரூபாய் நாணயங்கள் 100 எண்ணிக்கை உள்ள பாக்கெட் அவருக்கு வழங்கப்பட்டது.
கடைக்கு சென்று அவர் பார்த்த போது, அதில் உள்ள ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தின் இரண்டு பக்கமும் எந்த அரசு முத்திரையும் இல்லை. பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பே நாணயங்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. இதில், இரண்டு பக்கமும் அரசு முத்திரை எதுவுமே இல்லாமல் எப்படி நாணயங்கள் வெளிவந்தன என, அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது, ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரிசர்வ் வங்கியில் நாணயங்கள் பெற, எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்கு டோக்கன் வழங்கி, வரிசைப்படி அனுப்ப கம்ப்யூட்டர் மற்றும் இருக்கை வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான நாட்களில் வரிசைப்படி அனுப்புவதில்லை. ஏராளமான கவுன்டர்கள் இருந்தாலும், ஒரு சில கவுன்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன.இதனால், வியாபாரிகளும், பொதுமக்களும் முண்டியடித்துக் கொண்டு நாணயங்கள் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு வேறு ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. - மா.சண்முகம் -
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக