நிலையில்லாத உலகமதில்
நிரந்தரமின்றி வாழும் நாம்
நித்திய ஜீவன் அல்லாஹுவை
நித்தம் தொழுதிட வேண்டாமா?
நிம்மதியில்லா உள்ளத்தில்
நிலைதடுமாறும் எண்ணங்களை
நேர்மையாளன் அவனிடத்தில்
கூறி முறையிட வேண்டாமா?
அற்பமான இவ்வுலகில் – மிக
சொற்பகாலம் வாழும் நாம் – வெகு
நுட்பமாய் நற்செயல் புரிந்து – இறை
நட்பைப் பெற்றிட வேண்டாமா?
நாளைய நீதி மன்றத்தில்
நேர்மையாளன் முன்னிலையில் – சற்றும்
நிலைகுலையாமல் பதிலளிக்கும்
நெஞ்சுரம் நமக்கு வேண்டாமா?
அல்லாஹ்-வுக்கும் அவன் தூதர்
அண்ணல் நபிக்கும் வழிபட்டு – புனித
அருள்மறை போற்றும் சுவனத்தை – நாம்
அடைந்திட முயல வேண்டாமா?
பாவமறியா புருஷர்களா? நாம்
தவறே செய்யா மானிடரா?
நிறைமனதோடு முறையிடவே – அவனை
நித்தம் தொழுவோம் வாருங்களேன.
இறையில்ல பாங்கோசை இரவு பகல் கேட்கிறதே
நம் காதில் விழவில்லையா?
முறையாகச் சென்றங்கு நிறைவாகத் தொழுதேற
நல்லெண்ணம் வரவில்லையா?
கந்தூரி பெயராலே கச்சேரி நடக்கின்ற
ஊர்தேடி செல்கின்றோமே
பார்க்கின்ற இடமெல்லாம் பள்ளிகள் பலவிருந்தும்
பாராமல் போகின்றோமே
மரணத்தித்தின் பின்னாலே மறுவாழ்வு உண்டென்ற
நம்பிக்கை எழவில்லையா? – அந்த
மஃஷரின் அதிபதி வழங்கிடும் தீர்ப்புக்கு
பலியாவோம் நாமில்லையா?
உத்தமதிருநபியின் உம்மத்து நாமமென்று
உணர்ச்சிதான் வரவில்லையா? அந்த
சத்திய திருநாதர் காட்டிய வழியிலே
தொழுதிடுவோம் வாருங்களேன்
மரித்த நம் உடலதனை மண்ணறையில் வைத்தபின்
நமது நிலை என்னாகுமோ?
முன்கர்-நகீர் கேட்டும் கேள்வி அனைத்திற்கும்
நமது பதில் எதுவாகுமோ?
நாம் மைய்யித்தாகுமுன் – நம்மைத் தொழவைக்கும் முன்
நாம் தொழுதிடல் வேண்டுமன்றோ?
மறுமையின் தலைவாயில் மண்ணறைப் புகுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்.
முஸ்லிமாய் பிறந்த நாம் முஸ்லிமாய் வாழ்ந்து – பின்
முஸ்லிமாய் மரித்தல் வேண்டும்
முஃமினாய் சுவனமதை அடைகின்ற பாக்கியம்
நமக்கெல்லாம் கிட்ட வேண்டும் – நாம்
இறுதியாய் விடும் மூச்சு லாயிலாஹ இல்லல்லாஹ்
என்று வெளியாக வேண்டும்
கலிமாவோடு கரைசேர கண்ணியமாய் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்
தன்னை மட்டும் வணங்குவதற்காகவே
இறைவன் நம்மை உருவாக்கினான்
மனு – ஜின் இனத்தாரை இதற்காகவல்லாது
வேறேன் படைப்பாக்கினான்?
இறைவனை வணங்காது இறுமாப்பாய் வாழ்வது – இறை
நிராகரிப் பாகுமன்றோ?
நிறைவாக இறையோனை நித்தம் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்
மண்ணினால் படைத்து நம்மை மனிதானாய் உருவாக்கிய
மறையோனை மறக்கலாமா? – அந்த
மண்ணுக்கே இரையாக்கி மறுபடியும் எழுப்பிடும்
இறைவனை வெறுக்கலாமா?
இன்னுயிர் வாழும் நாம் நாளை இருப்போமா?
எண்ணிடல் வேண்டமன்றோ? – இந்த
உடலினை விட்டுயிர் பிரியுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்
மறுமையது உண்மையென முழுமையாய் நம்பிடும்
முஃமின்கள் நாமல்லவா? – அந்த
மஃஷர் மைததானிலே இறைவன் முன் நிலையிலே
நிறுத்தப்படுவதும் நாமல்லவா?
தொழுகையோடு ஏனைய செயல்களுக்கெல்லாம் பதில்
சொல்வதும் நாமல்லவா? – நல்ல
தீர்ப்பினது முடிவதனை தெரிந்திடும் முன்னமே
தொழுதிடுவோம் வாருங்களேன்.
மண்ணறை வேதனையை மறுமைநாள் வரையில் நாம்
அனுபவித்தாக வேண்டும் – இறை
விசாரணைக்காக நாம் மீண்டும் உயிர்பெற்று
எழுந்துதான் ஆக வேண்டும்.
படைத்தவன் கேட்டிடும் கேள்விகளுக்கெல்லாம் பதில்
சொல்லியே தீரவேண்டும் – அந்த
இறுதியுக நாளிலே மோட்சத்தை அடைந்திடவே
தொழுதிடுவோடும் வாருங்களேன்.
சுவனமும், நரகமும் நம்மவர்க்காகவே
படைத்தவன் இறைவனன்றோ?
உலகினில் நாம் செய்த செயல்களின் கூலிகளை
தருவதன் உரிமையன்றோ?
வணக்க வழிபாட்டுடனே மன்னிப்பை கோருவது
மாந்தர்த் கடமையென்றோ? – நல்
சுவனத்தை நாடியே துரிதமாய் ஜமா அத்தாய்
தொழுதிடுவோம் வாருங்களேன்
உலகாசாபாசங்களில் மனதை பறிகொடுத்து – நாம்
மயக்கத்திலாழ்திடாமல்
கேளிக்கை கூத்துகளில் காலத்தை கடத்தியே – நற்
கருமங்கள் செய்திடாமல்
நிலையில்லா வாழ்க்கையில் நிம்மதியிழந்து நாம்
கைசேதமடைந்திடாமல் – உடல்
நலமாயிருக்கையிலே நித்தமும் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்
இறைவன் மேல் விசுவாசம் இதயத்தில் ஏந்தியே
இரவுபகல் தொழுதல் வேண்டும்
இறையச்ச உணர்வோடு இறைத்தூதர் காட்டிய
வழியிலே தொழுதல் வேண்டும்
குறைபாடு இல்லாத நிறைவான தொழுகையாய்
நித்தமும் தொழுதல் வேண்டும்
முறையாக இறைவனை முழுமையாய் ஐவேளைத்
தொழுதிடுவோடும் வாருங்களேன்
தொழுகையை அதனதன் நேரத்தில் தொழுவதே
தொழுகையின் சிறப்பம்சமாம்
தொழுகையை தொழுகின்ற முறையோடு தொழுவதே
தொழுகையின் முழு அம்சமாம்
தொழுகையை இமாமுடன் கூட்டாகத் தொழுவதே
தொழுவோர்க்கு திருப்தி தருமே
தொழுகின்ற மக்களுடன் தோழோட தோள் நின்று
தொழுதிடுவோம் வாருங்களேன்.
பேணுதலில்லாத தொழுகையைத் தொழுவதால்
பயனேதும் கிட்டிடாது
பயபக்தி இல்லாத வணக்க வழிபாடுகளால்
புண்ணியம் கிடைத்திடாது
ஜும்மாஆ -வை மட்டுமே தவறாமல் தொழுவதால் செய்த
பாவங்கள் நீங்கிடாது
படைப்பாளன் அல்லாஹ்வை பயந்து தினம் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்
தொழுகையே இஸ்லாத்தின் தூண் என்று உரைத்த நபி
வாக்கினை மதித்தல் வேண்டும்
நிலைபாடாய் தினம் தொழுது இஸ்லாத்தின் தூணினை
கட்டியவராக வேண்டும்
தொழுகையே இல்லாமல் இஸ்லாத்தின் தூணினை
இடித்தவராகமலே
தொழுகையே சுவனத்தின் திறவு கோல் என்பதால்
தொழுதிடுவோம் வாருங்களேன்
தொழுகையே ஈமானை வலுவாக்கும் ஆயுதம்
தொழுகையே சுவனம் சேர்க்கும்
தொழுகையே மூஃமினை மோட்சத்திலாக்கிடும்
தொழுகையே மூலதனமாம்
தொழுகையே பாவச்சுமைகளைக் களைந்திடும்
தொழுகையே அரணாகுமே
தொழுகையே இருலோக வெற்றியை அடைந்திட
தொழுதிடுவோம் வாருங்களேன்
மறுமை விசாரணையில் இறைவனின் முதல்வினா
நீ தொழுதாயா? என்பதாகும்
தொழுகையே இல்லார்க்கும் அலட்சியம் செய்வோர்க்கும்
இறைத்தண்டனை கடுமையாகும்
மூஃமினை காஃபிரை வித்தியாசம் காட்டுவது
தொழுகை எனும் வணக்கமாகும்
அல்லாஹ்-வின் கிருபையால் அருள் சுவனம் நாடியே
தொழுதிடுவோம் வாருங்களேன்
திருமறை குர்ஆனில் தொழுகையை வலியுறுத்திக்
கூறாத இடங்களில்லை
திருநபியின் போதனையில் திருமறையின் சிறப்புக்களை
சொல்லாதா கிரந்தமில்லை
ஐங்கால தொழுகையின் அழைப்பினைக் கேட்காத
செவிப்புலன் எவர்க்குமில்லை
இறைவனை அஞ்சியே இரவு பகல் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்
இம்மையில் வித்திட்ட மறுமையில் அறுவடை
செய்பவன் புத்திசாலி
பொன்னான நேரங்களில் புண்ணியம் சேர்ப்பவன்
போற்றத்தகு திறமைசாலி
கைவெண்ணெய் இருக்கையில் நெய்ககலைபவன்
கோமாளி ஏமாளியே
காற்றுள் போதே தூற்றிட அழைக்கிறேன்
தொழுதிடுவோம் வாருங்களேன்நன்றி ; ஜாக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக