நன்றி;தினமணி
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
26 செப்டம்பர், 2010
அயோத்தி முஸ்லிம்களின் பிரார்த்தனை...
அயோத்தி,செப்.26:அயோத்தியில் ஜன்மஸ்தான் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பு எப்போது வரும், எப்படி இருக்கும் என்ற கவலையைவிட ஹிந்துக்களுடனான தங்களுடைய உறவு இப்போதிருப்பதைப் போலவே சுமுகமாக இருக்க வேண்டும், எங்கும் அமைதி நிலவ வேண்டும், மதக் கலவரங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே அயோத்தி வாழ் முஸ்லிம்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.ராம ஜென்ம பூமி பற்றித்தான் வழக்கு என்றாலும் அங்குள்ள ராமர் சிலைக்கு அன்றாடம் வழிபாடுகளும் உரிய காலங்களில் உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அழகழகான மாலைகளைக் கட்டித்தரும் பணியை அயோத்தி மாநகர முஸ்லிம்கள்தான் காலம்காலமாகச் செய்து வருகின்றனர். அத்துடன் முகலாயர் கால கட்டடக் கலையையும் கைவேலைகளையும் கற்றுத் தேர்ந்த முஸ்லிம் கைவினைக் கலைஞர்கள்தான் வட இந்தியாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு தங்களுடைய கைத்திறமையால் பல்வேறு வாகனங்களையும் படங்களையும் இதர பொருள்களையும் உருவாக்கித் தருகின்றனர். ஐந்து வேளைத் தொழுகை, அல்லாவிடத்தினில் அகலாத பக்தி ஆகியவற்றுடன் தங்களுடைய ஹிந்துச் சகோதரர்கள் வழிபடும் ஸ்ரீ ராமரிடத்திலும் அன்பு என்று அயோத்தி மாநகர முஸ்லிம்கள் உறவாடி வருகின்றனர்.முஸ்லிம்களின் பண்டிகைகளிலும் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளிலும் ஹிந்துக்களும் கலந்து கொண்டு வாழ்த்துவதுடன் விருந்துண்டு மகிழ்கின்றனர். ஒரே ஊரில் பிறந்து, ஒன்றாகப் படித்து, ஒன்றாக வளர்ந்து தொழில், வியாபாரம் செய்யும் இரு தரப்பினரிடையேயும் அன்பும் தோழமையும்தான் நிலவுகின்றன. மும்பை, தில்லி, மீரட், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மதக் கலவரங்கள் மூளுகின்ற சமயங்களில்கூட அயோத்தி அமைதிப் பூங்காவாகவே காட்சி தருகிறது.ஹிந்துக் கோயில்களின் திருவிழாக் காலம் முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வழக்கமான ஊதியத்தைப் போல இரண்டு மடங்கு அவர்களுக்குக் கிடைக்கிறது. முஸ்லிம்கள் தயாரிக்கும் வளையல்கள், சம்கி வேலைப்பாடு மிகுந்த துணிகள், காலணிகள் என்று அனைத்தையும் வாங்கிப் பயன்படுத்துகின்றனர் ஹிந்துக்கள். எனவே இந்த உறவு அறுபடாமல், ஊறு நேராமல், நீதிமன்றத் தீர்ப்பு சுமுகமாக இருக்க வேண்டும் என்றே அயோத்தி மாநகர முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.அவர்கள் மட்டுமா, நாடு முழுவதுமே உள்ள அனைத்து இந்தியர்களின் மதம் கடந்த பிரார்த்தனை இதுவே. இந்த நாட்டில் மதங்களின் பெயரால் கலவரம் நடந்து ரத்த ஆறு ஓடியது போதும், இனியாவது மதமும் வழிபடும் விதமும் வேறானாலும் நாம் அனைவரும் ஒரே உதிரத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் என்ற உணர்வு வலுப்பெறட்டும், நிலைபெறட்டும்.
நன்றி;தினமணி
நன்றி;தினமணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக