அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
10 மார்ச், 2012
முஸ்லிம் லீக் கட்சி அங்கீகாரம், ஏணி சின்னம் விவகாரம் சர்ச்சையாகிறது:தேர்தல் கமிஷன் உத்தரவை எதிர்த்து வழக்கு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, கேரள மாநிலத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அக்கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான "மத்தாப்பூ' தகவலை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார்.இத்தகவலை வெளியிட்ட சில மணி நேரத்திற்குள், "தேர்தல் கமிஷன் தீர்ப்பை தவறாக பயன்படுத்தி மோசடி பிரசாரத்தில் காதர்மொய்தீன் ஈடுபட்டுள்ளார் என்றும், அகில இந்திய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட வில்லை' என்ற, "அணு குண்டை' மறைந்த முஸ்லிம் சமுதாய தலைவர் அப்துல்சமதுவின் மகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலருமான பாத்திமா முசப்பர் வீசினார். கட்சி அங்கீகாரம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரு தரப்பினரும் கருத்து கேட்டோம். அவர்கள் அளித்த விவரம் வருமாறு:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச்செயலர் காதர்மொய்தீன்:கடந்த 1948ம் ஆண்டு இந்திய தேர்தல் கமிஷனிடம் பதிவு பெற்று தேசிய அரசியலில் கட்சியாக செயல்பட்டு வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில பெயர்களில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்தது.கேரளத்தில் முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி என்னும் பெயரில் பதிவு பெற்றதோடு, ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் செயல்பட்டு வந்தது.தேசிய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஒரே பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, உரிய ஆவணங்களுடன் தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டன. தற்போது இணைப்பு ஏற்பட்டு விட்டதால் முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி என்னும் பெயர் தேர்தல் கமிஷனிலிருந்து நீக்கப்படுகிறது. ஒன்றாகியுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை பெறுகிறது.முஸ்லிம் லீக் கேரள மாநில கமிட்டி எனும் அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஏணி சின்னம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்படுகிறது என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் இந்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். தேர்தல் கமிஷனின் விதிப்படி, ஒரு மாநிலத்தில் எட்டு சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ள ஒரு கட்சி குறைந்தபட்சம் இரண்டு எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருக்க வேண்டும். கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, 20 எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர்.ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை அதே கட்சி எந்த மாநிலத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று மாநிலங்களில் 8 சதவீதம் ஓட்டுகளும், இரண்டு எம்.எல். ஏ.,க்களும் பெற்று விட்டால் இந்தியா முழுவதும் அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்து விடும். மற்ற மாநிலங்களில் நாங்கள் போட்டியிடும் போது கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடிதத்தில் சின்னம் ஒதுக்கீடு பெற்று போட்டியிடுவோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலர் பாத்திமா முசப்பர்:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள ஸ்டேட் கமிட்டி பெயர் மாற்றப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் கேரள மாநிலத்தில் செயல்படும். கேரள மாநிலத்தில் ஏணி சின்னத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயன்படுத்தலாம் என, தேர்தல் கமிஷன் கூறுகிறது.இந்த கமிஷனில் அகில இந்திய அங்கீகாரம் பற்றியோ, அல்லது வேறு எந்த மாநிலங்களின் அங்கீகாரம் பற்றியோ கூறப்படாத பட்சத்தில், மக்களையும் மீடியாவையும் ஏமாற்றும் விதத்தில் காதர்மொய்தீன் பிரசாரம் செய்தது கண்டனத்துக்குரியது. தேர்தல் கமிஷன் அளித்துள்ள உத்தரவை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.- எஸ்.சிந்தாஞானராஜ் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக