அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
23 மார்ச், 2012
உத்தரப்பிரதேசம்: சாதனைப் படைத்தது பீஸ் பார்ட்டி
முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கென ஒரு கட்சி தேவை என்பதற்காக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் பீஸ் பார்ட்டி. இந்தக் கட்சியின் தலைவராக டாக்டர் முஹம்மது அய்யூப் உள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தக் கட்சியில் அனைத்து சமுதாய மக்களும் உறுப்பினராகவும், நிர்வாகிகளாகவும் உள்ளனர்.
முதன்முறையாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பீஸ் பார்ட்டி போட்டியிட்டது. பீஸ் பார்ட்டியின் வேட்பாளராக முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து சாதிய சமுதாய சகோதர, சகோதரிகளும் களம் கண்டனர்.உத்தரப்பிரதேசத்தில்
பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட்ட பீஸ் பார்ட்டி, நான்கு இடங்களில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவரான டாக்டர் முஹம்மது அய்யூப், கலீலாபாத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். டூமரியாகன்ஜ் தொகுதியில் கமால் யூசுப் மாலிக்கும், காந்த் தொகுதியில் அனீசுர் ரஹ்மானும், ரேபரேலி தொகுதியில் அகிலேஷ் குமார் சிங்கும் பீஸ் பார்ட்டி கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.பீஸ் பார்ட்டி வேட்பாளர்கள் தோல்வியடைந்த தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து தோல்வி அடைந்துள்ளனர். மேலும் பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். 20 தொகுதிகளில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றுள்ளனர்.
தனித்து நின்று அதிகார பலத்தையும், பணபலத்தையும் எதிர்த்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பீஸ் பார்ட்டி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்தபடியாக ஐந்தாவது பெரிய கட்சியாக உத்தரப்பிரதேசத்தில் பீஸ் பார்ட்டி உருவாகியிருக்கிறது. மேலும் இக்கட்சியோடு 16 முஸ்லிம் அமைப்புகளும், கட்சிகளும் தோழமை கொண்டு களப்பணியாற்றினர். அக்கட்சிகளிலும் சிலர் வெற்றிப்பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் தனது அரசியல் பயணத்தை சரியான முறையில் செயல்படுத்தினால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை பீஸ் பார்ட்டி கைப்பற்ற முடியும். கேரளா, அஸ்ஸாம், தமிழகம், ஆந்திராவைத் தொடர்ந்து உ.பி.யிலும் முஸ்லிம்கள் தனி அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் களத்திலேயே சிறப்பான வெற்றிகளைப் பெற்று ள்ளனர்.
வடஇந்தியாவில் பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களின் சிந்தனைகளை பீஸ் கட்சியின் வெற்றி தன்பால் ஈர்த்திருக்கிறது. மாநில ரீதியாக வட்டாரச் சூழலுக்கு ஏற்ப கட்சிகளைத் தொடங்கி தேசிய அளவில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது எதிர்கால இந்திய முஸ்லிம்களுக்கு நன்மையைப் பெற்றுத்தரும். முஸ்லிம்களால் தேசிய அளவில் கட்சிகளை நிறுவி வெற்றிபெற இயலாது என்பது களத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் சில இடங்களில் போட்டியிட்ட தேசியக் கட்சிகளான முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ.கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் சில நூறு வாக்குகளையே பெற்றுள்ளதன் மூலம் இக்கருத்து வலுப்பெற்றுள்ளது.
பீஸ்பார்ட்டி வெற்றிபெற்ற ஓட்டு நிலவரங்கள்
கலீலாபாத் தொகுதி:
டாக்டர் முஹம்மது அய்யூப் (பீஸ் பார்ட்டி) 55841
மஷ்ஹுர் ஆலம் (பிஎஸ்பி) 50449
திக்விஜய நாராயணன் (பிஜேபி) 43552
அப்துல் கலாம் (எஸ்பி) 27795
டூமரியகன்ஜ் தொகுதி:
கமால் யூசுப் மாலிக் (பீஸ் பார்ட்டி) 44428
சாயிதா காத்தூன் (பிஎஸ்பி) 42839
ராம்குமார் (எஸ்பி) 41517
காந்த் தொகுதி:
அனீசுர் ரஹ்மான் (பீஸ் பார்ட்டி) 37092
ரிஸ்வான் அஹமது கான் (பிஎஸ்பி) 35558
ஃபிஜாவுல்லாஹ் (எஸ்பி) 30690
ரேபரேலி தொகுதி:
அகிலேஷ் குமார் சிங் (பீஸ் பார்ட்டி) 75588
ராம்பிரதாப் யாதவ் (எஸ்பி) 46094
பஹதூர்சிங் (காங்கிரஸ்) 35660
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக