
திருப்பூர், நல்லூர் சிறுநகர் காலனியில் 107 வயது பாட்டி ஜெஹராவியுடன், ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்த குடும்பத்தினர். (உள்படம்: ஜெஹராவி பாட்டி).
திருப்பூரைச் சேர்ந்த 107 வயது பாட்டி ஜெஹராவி, தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை தனது 189 வாரிசுகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர் எஸ்.ஆர். சையத் அப்துல் லத்தீப். இவரது மனைவி பூமா என்ற ஜெஹராவி (107). கடந்த 1951 ஆம் ஆண்டு குடும்பத்துடன் திருப்பூர் வந்த சையத் அப்துல் லத்தீப், ஜெஹராவி தம்பதி பனியன் நூல் பிரிக்கும் வேலை செய்து, குழந்தைகளை வளர்த்தனர். 40 ஆண்டுகளுக்கு முன் சையத் அப்துல் லத்தீப் இறந்து விட்டார். இப்போது, 107 வயதான ஜெஹராவி தன் வாரிசுகளின்
பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.
ஜெஹராவி பாட்டியின் 1 மகன், 3 மகள்கள், பேரன், பேத்திகள் 39 பேர், கொள்ளுப் பேரன், பேத்திகள் 71 பேர் உள்ளிட்ட 189 பேர் திருப்பூர் அருகேயுள்ள நல்லூர் பகுதியில் ஒரே காலனியில் வசித்து வருகின்றனர்.
பெரும்பாலும் பனியன் தொழிலாளர்களாகப் பணியாற்றி வரும் ஜெஹராவி பாட்டியின் வாரிசுகள், திருப்பூரில் வாடகை வீடுகளில்தான் தனித்தனியாகக் குடியிருந்து வந்தனர். ஆனால், அனைவரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டதால், நல்லூர் பகுதியில் 2005ஆம் ஆண்டு 1 ஏக்கர் நிலம் வாங்கி, வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
சிறு நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இங்கு ஜெஹராவி பாட்டியின் குடும்பத்தினர் அனைவரும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்கு உதா
ரணமாக வாழ்ந்து வருகின்றனர்.
வாரிசுகள் அனைவரும், பக்ரீத் பண்டிகையை "பூமா பெருங்குடும்ப விழா' என்ற பெயரில் பாட்டி ஜெஹராவியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பத்திரிகை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, விழாவை விமரிசையாகக் கொண்டாடினர். ரூ. 40 ஆயிரம் செலவில் தடபுடலாக விருந்து அளிக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அனைவரும், பாட்டி ஜெஹராவியிடம் ஆசி பெற்றது நெகிழ்ச்சியாக இருந்தது.
இதுகுறித்து, ஜெஹராவியின் மகள் வழிப் பேரன் சுபேர் அகமது (44) கூறியது: பாட்டி ஜெஹராவியின் வாரிசுகளாக 189 பேர் ஒரே இடத்தில் வசிக்கிறோம். பாட்டியின் 1 மகனும், 3 மகள்களும் இப்போது உயிருடன் உள்ளனர். கொள்ளு, எள்ளுப் பேரன், பேத்திகள் எடுத்து, 107 வயதிலும் உற்சாகமாக இருக்கும் பாட்டியை தியாகத் தாயாகக் கருதி கொண்டாடுகிறோம். வாரிசுகள் அனைவரும் அவரை நல்ல முறையில் பராமரித்து வருகிறோம் என்றார்.
குடும்பத்தின் புதிய வரவான 2 வயது கடைக்குட்டி லிபான் உள்பட அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்று இறைவனைத் தொழுவதை வழக்கமாகக் கொண்டு மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் வாழ்ந்து வருகிறார் ஜெஹராவி பாட்டி!
நன்றி.தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக