வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் சனிக்கிழமை காலை 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்தது.இந்நிலையில் வழக்கமாக சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும் இடத்திலும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் சாலையின் இருபுறமும் கடைகளை அமைத்து வியாபாரம் செய்தனர்.
வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டதால் காட்டுமன்னார்கோவில் அருகே 25 கிராமங்களை நீர் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.வீராணம் ஏரிக்கு அதிகளவு நீர்வரத்து: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் பெய்து வரும் மழை நீர் சுமார் 6 ஆயிரம் கன அடி அளவுக்கு செங்கால்ஓடை, கருவாட்டுஓடை, பாபாக்குடி ஓடை உள்ளிட்ட காட்டாறுகள் மூலம் வீராணம் ஏரிக்கு வருகிறது.அதிகளவு நீர் வருவதால் வீராணம் ஏரியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வெள்ளியங்கால் ஓடையில் 5 ஆயிரம் கனஅடி நீரும், சேத்தியாத்தோப்பு விஎன்எஸ் அணைக்கட்டுக்கு ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியில் 45.5 அடி நீர் தேக்கிவைக்கப்பட்டு உபரியாக வரும் மழைநீர் 6 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இவையல்லாமல் காட்டாறுகள் மூலம் வரும் மழைநீர் மணவாய்க்கால் மற்றும் வெள்ளியங்கால்ஓடையில் சுமார் 12 ஆயிரம் கனஅடி அளவுக்கு கலக்கிறது. இதனால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், தொரக்குழி, எடையார், நந்திமங்கலம், பிள்ளையார்தங்கல், அதங்குடி உள்ளிட்ட கிராமங்களை நீர் சூழ்ந்தது. திருநாரையூர் செல்லும் சாலையை கடந்து வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் படகுமூலம் ஊருக்குள் செல்கின்றனர்.திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு: காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி செல்லும் சாலையில் வெண்ணங்குழி ஓடை உடைப்பெடுத்ததால் வீராணந்தபுரம் எனுமிடத்தில் சாலை துண்டித்தது. இதனால் காட்டுமன்னார்கோவிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று நாரைக்கால் ஏரி உடைப்பெடுத்ததால் காட்டுமன்னார்கோவிலிருந்து பாப்பாக்குடி வழியாக திருச்சி செல்லும் சாலையிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 25 கிராமங்களில் நீர் சூழ்ந்தது: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் பாபாக்குடிஓடை, வெண்ணங்குழிஓடை வழியாக வடவாற்றில் கலப்பதால் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், வெங்கடேசபுரம், மடப்புரம், மணிக்குழி, அறந்தாங்கி, சித்தமல்லி, வா.புத்தூர், மணவெளி, அகரபுத்தூர், கண்டமங்கலம், வீராணந்தபுரம், வில்வகுளம், சப்பாணிக்கோட்டை உள்ளிட்ட சுமார் 25 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது.மேலும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதில் 5 ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர் பூ பருவத்தில் மூழ்கியுள்ளதால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும் நிலங்களில் உடனடியாக தண்ணீர் வடியாமல் 3 நாளுக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தால் மீதமுள்ள பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.
நன்றி.நஸ்ருல்லா,அஹ்மத் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக