கீழக்கரை: தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து, மத்திய அரசின் அங்கீகாரம் பெறாத தனியார் டிராவல்ஸ் மூலம் "ஹஜ்' பயணம் புறப்பட்ட ஏராளமானோர், "விசா' கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாக "ஹஜ்' பயணம் உள்ளது. தமிழக "ஹஜ்' கமிட்டி வழியாக விண்ணப்பிப்பவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் இடம் பெற விரும்பாதவர்கள், தனியார் டிராவல்ஸ் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி, "ஹஜ்' பயணம் செல்கின்றனர். மத்திய அரசு அனுமதி பெறாத தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், மும்பையில் உள்ள அங்கீகாரம் பெற்ற டிராவல்ஸ் மூலமாக "விசா' பெற்று, "ஹஜ்' பயணிகளை அழைத்துச் சென்றனர். அவர்கள், அதிக தொகை வசூலிப்பதாக மத்திய அரசிற்கும், சவுதி தூதரகத்திற்கும் புகார்கள் சென்றன.
நடப்பாண்டில் "விசா' வழங்குவதற்கு முன், சவுதி தூதரக அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இதில் திருப்தி ஏற்படாததால், தமிழகத்திலிருந்து "விசா'விற்கு அனுப்பப்பட்ட ஏராளமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் 25க்கும் மேலான தனியார் டிராவல்ஸ்களில் பதிவு செய்த பலர், "விசா' கிடைக்காததால் "ஹஜ்' பயணத்தை தொடர முடியவில்லை.
கீழக்கரையில் இருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் விண்ணப்பித்து, ஏமாற்றமடைந்து திரும்பிய பயணி ஒருவர் கூறியதாவது: "ஹஜ்' பயணத்திற்காக ஏராளமானோர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயண தேதியை உறுதி செய்து, "விசா'வை எதிர்நோக்கி சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தோம். ஆனால், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், "விசா' கிடைக்கவில்லை என கைவிரித்து விட்டனர். இதனால், புனிதப் பயண கனவில் சென்ற பலர், ஏமாற்றத்துடன் ஊர் திரும்பி விட்டோம். சிலர் எப்படியும் "விசா' கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் சென்னையில் தங்கியுள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக