நாம் தற்போது ரமழான் இற்கு முந்திய மாதமான ஷஃபானில் இருந்து கொண்டிருக்கிறோம் . இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பை அறிந்து அதன் நன்மைகளை அடைவோம். நபி(ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள், மேலும் (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள். ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஃபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றத்தை நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. மேலும் உங்களால் இயன்றளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் நமைகளை வழங்குவதை நிறுத்தமாட்டான் என்று கூறுவார்கள்.
மேலும் தொடர்ந்து தொழும் தொழுகையே நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதை தொடர்ந்து தொழுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத் நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும் அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவூத் நஸயீ) மேற்கண்ட இரு ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகமான (உபரியான) நோன்பு நோற்றிருந்ததர்கள் என்பது தெளிவாகிறது. இதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு முப்பது நாளும் நோன்பு நோற்கக் கூடிய கண்ணியமிக்க மாதம் தான் ரமலான், இந்த மாதத்திற்கு முந்திய மாதம் தான் ஷஃபான். மற்ற மாதங்களில் சாதாரணமாக நோன்பு நோற்பதை போல் நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் சற்று அதிகமாகவே நோற்றுள்ளார்கள், காரணத்தை கூறும்பொழுது அம்மாதத்தில் தான் நற்காரியங்கள் இறைவன் பால் உயர்த்தி காட்டப்படுகின்றன என்றார்கள். அதேபோல நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்க ஷஃபான் மாதம் மற்ற மாதங்களை விட மிகவும் விருப்பமானதாக இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
இந்த மாதத்தின் மகிமையை பற்றி மக்கள் பாராமுகமாகவே உள்ளனர். இதில் தான் நற்செயல்கள் அனைத்தும் இறைவனின் பால் உயர்த்தபடுகின்றன. எனவே நான் நோன்பாளியாகவே இருக்கும் நிலையில் என்னுடைய நற்செயல்கள் உயர்த்தபடவேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். நூல்: நஸயீ மேற்கண்ட ஹதீஸ் மூலம் மற்றைய மாதங்களை விட இந்த மாதத்தில் (உபரியான) நோன்புகளை) அதிகமாகவே நோற்கலாம் என்பது தெளிவாகிறது.
ரமலானின் விடுபட்ட நோன்பை மற்ற மாதங்களில் வைக்க முடியவில்லையென்றால் அதை ஷஃபான் மாதத்தில் பூர்த்தி செய்யலாம். மேலும் ரமலான் மாதத்தில் பயணம் மற்று நோய், போன்ற காரணங்களினால் நோன்பு விடுபடுமாயின், அதை ஷஃபான் மாதத்தில் நிறைவேற்றலாம். இதுபற்றி அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும் அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார்கள். நூல்: புகாரி
நன்றி. ரிட் இஸ்லாம்
By: Ilmul Islam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக