#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

06 ஜனவரி, 2013

எறும்பு மூளையின் சிறந்த முடிவு!



‘மனிதன்’ வரிசையை அடுத்துக் கொஞ்சம் பூச்சி பிடிக்கலாம். பூச்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமாக, கூட்டாகச் சேர்ந்து முடிவுகள் எடுப்பது எப்படி ?

ஒரு எறும்புப் புற்றை எடுத்துக்கொண்டால் சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு சிற்றெறும்புக்கும் ஒரு சிற்றறிவு. கால்   மிமீ. அகலத்தில் மூளை. அதிகமில்லைதான்; ஆனால் புற்றில் வசிக்கும் அத்தனை எறும்புகளும் சேர்ந்து செய்யும் சமுதாயச் செயல்கள்
ஆச்சரியமானவை. உதாரணமாக, புற்று சேதமடைந்து விட்டாலோ, ஜனத்தொகை பெருத்துவிட்டாலோ வேறு வீடு தேடவேண்டும். இதை எறும்புகள் எப்படிச் செய்கின்றன என்பதில் ஒரு நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.


எறும்புக் கூட்டத்திற்கும் நம் மூளையின் நியூரான் கூட்டத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. ஒரு ஒற்றை நியூரானுக்கு அதிகம் தகவல் நினைவு கிடையாது. ஆனால் நம்முடைய பத்தாயிரம் கோடி நியூரான்களின் தொகுப்புக்கு எத்தனை விஷயம் தெரிந்திருக்கிறது… என்னுடைய ஒரு நியூரானில் ‘சீ’, மற்றொன்றில் ‘னி’, இன்னொன்றில் ‘வா’ என்றெல்லாம் செய்தி பதிந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் சீனிவாசன் எனக்கு ஐம்பது ரூபாய் தர வேண்டும் என்பது மட்டும் மறக்க முடியாமல் நினைவிருக்கிறது.

அதே போல் ஒரு எறும்புக்கு மூளை சின்னதாக இருந்தாலும் எறும்புக் கூட்டத்துக்கு அறிவு அதிகம். ஒவ்வொரு எறும்பும், ஒவ்வொரு நியூரானும் ஒரு தனித்த பிறவி என்றும் சொல்லலாம்; அல்லது ஒரு தொகுப்பைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் என்றும் சொல்லலாம். மத்திய கட்டுப்பாடு இல்லாமலேயே கூட்டாகச் சேர்ந்து அவை எடுக்கும் முடிவுகள், ஒற்றை மனம் எடுத்த முடிவுகள் போல ஒருமித்துத் தெளிவாக இருக்கின்றன.

எனவே, நம் மூளையைப் பற்றின ரகசியங்களை அகழ்ந்தெடுக்க விஞ்ஞானிகள் கைக்கொள்ளும் புதிய கருவி - எறும்புப் புற்று! பிரிட்டனின் பயோ விஞ்ஞானிகளும் கம்ப்யூட்டர் வல்லுனர்களும், இப்போது எறும்புகள், நியூரான்கள் இவை கூட்டாகச் சேர்ந்து எப்படி முடிவெடுக்கின்றன என்பதைத்தான் கூட்டாகச் சேர்ந்து ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

புதுசாகக் கல்யாணமானவர்கள் மட்டுமில்லாது, எறும்புக் கூட்டமும் தீர்மானிக்க வேண்டிய மிகச் சிக்கலான பிரச்னை, புது வீடு தேடுவது. முதலில் ஒரு ஸ்கவுட் படை போய், புற்று கட்டப் பொருத்தமான இடத்தைத் தேடும். தனித் தனியே அவைகள் கொண்டு வரும் சிபாரிசுகள் சபையில் பரிசீலிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு இடத்திற்கு ஓட்டு கிடைத்தால் அந்த இடம்தான் தேர்ந்தெடுக்கப்படும்.

நமது மூளையின் தனித் தனி நியூரான்கள் சேர்ந்து எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றன என்பதும் இதைப் போன்றதே. நம் கண் காணும் காட்சியைப் பற்றி மூளை ஒரு தீர்மானத்துக்கு வருவதை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். இதை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள் ஒரு குரங்கைப் பிடித்து வந்து தாஜா செய்து அதன் விஷுவல் கார்ட்டெக்ஸ் என்ற பார்வை உணரும் பகுதியைக் கவனித்தார்கள். கண் முன்னால் கம்ப்யூட்டர் திரையில் பல புள்ளிகள் பல திசைகளில் அலைந்துகொண்டிருக்கும். அதிக பட்ச புள்ளிகள் எந்தத் திசையில் நகர்கின்றன என்பதைக் குரங்கு சரியாகக் கணித்தால் ஒரு வாழைப்பழம்.

விஷுவல் கார்ட்டெக்ஸில் உள்ள நியூரான்கள் தனித்தனிப் புள்ளிகளைப் பற்றிய தகவல் துணுக்குகளைப் பெறுகின்றன. அதிகமான புள்ளிகளைச் சேகரித்த நியூரான்கள் உற்சாகமாக நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ரசாயன குண்டுகளைச் சுட ஆரம்பிக்கின்றன. சரியான விடையைக் கண்டுபிடித்துவிட்ட நியூரான்களின் வேகம் மெல்ல அதிகரித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சுடும் ரேட் அதிகரித்தவுடன் குரங்கு ஒரு முடிவுக்கு வருகிறது.

எனவே, முடிவு எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்ட எறும்புகளோ நியூரான்களோ சம்மதம் தர வேண்டும். இந்த threshold - கடவு ரேகையின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். சூழ்நிலையைப் பொருத்து, சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டுமா, அல்லது துல்லியமான முடிவுகள் தேவையா என்பதைப் பொருத்து இந்தக் கடவு ரேகையை முன்னோ பின்னோ தள்ளி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் நாளைக்கு அதே போல் சிந்தித்து முடிவு எடுக்கும் இயந்திரங்களைத் தயாரிக்க முடியும்.
கார்னெல் பல்கலையின் தாமஸ் சீலி, சமுதாயமாகச் சேர்ந்து வாழும் பூச்சியினங்கள் (social insects) என்ற ஐடியாவை மேலும் விரிவு படுத்தி, அரசாங்கங்கள் செயல்படும் விதம் வரையில் கொண்டுபோகலாம் என்கிறார். ‘தேனீக்களின் ஜனநாயகம்’ என்று அவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் அடுத்த வருடம் வெளிவருகிறது.

தேனீக்களிலிருந்து காப்பி அடித்தால் நம்முடைய கூட்டு முடிவுகளும் அரசாங்க நிர்வாகமும் கூட மேம்படும் என்கிறார் சீலி. தேனீயும் எறும்பு போலவே சமுதாயப் பூச்சிதான். பல லட்சம் வருடமாக இந்தப் பூச்சிகள், கூட்டு முடிவுகள் எடுப்பதை வெற்றிகரமாகச் செய்து வருகின்றன. எனவேதான் இந்தக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டன.

தேனீயுடன் ஒப்பிட்டால் பண்டைய கிரீஸ், ஏதென்ஸ் என்று மனித ஜனநாயகத்துக்கு வெறும் 2500 வயதுதான் சொல்லலாம். இன்னும் நாம் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கத் திணறுவதிலும், மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொள்வதிலும் ஆச்சரியமே இல்லை.

எறும்பும் தேனீயும் நல்ல முடிவுகளை விரைவாக எடுப்பதற்குக் காரணம், அதன் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும் மிக எளிமையானவர்கள். பரோபகாரிகள். நம்மைப் போல மறைமுக அஜெண்டா, கோஷ்டிப் பூசல் போன்றவை அவற்றுக்குக் கிடையாது. சுயநலம் இல்லாமல் பொது நலம் எது என்பதை மட்டுமே பார்த்து, சரியான தீர்மானத்தை நோக்கி விரைவில் வந்து குவிந்துவிடும்.  நம் ஜனநாயகத்தில், உடனடிப் பிரச்னைகளில் சிக்கி நீண்ட கால முடிவுகள் தாமதமாகின்றன.

நியூரான்களையும் எறும்புகளையும் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது : தனித்தனியாகப் பார்த்தால் இருப்பதிலேயே புத்திசாலிகளை விட அறிவுத் திறன் அதிகம் கொண்ட குழுக்கள் அமைப்பது எப்படி என்பதுதான் அது.  ஆக, எறும்புப் புற்றைக் கவனித்து அரசாங்க இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இரண்டுக்குமே எறும்பு மூளைதான் என்று சொல்ல வருகிறார்களோ ?

Reference :ராமன் ராஜா அறிவியல் கட்டுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக