அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
ஆம் - 80%
முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.
1. இனப் பின்னணி:
அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.
அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.
28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.
அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..
2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:
முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.
சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.
இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.
அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.
அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.
ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் அமெரிக்க முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.
அமெரிக்க முஸ்லிம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.
80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.
3. பெண்கள்
யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.
அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.
முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.
4. மற்றவைகள்:
- 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
- அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.
- மது அருந்துவோரின் சதவிதம், மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
- அமெரிக்க முஸ்லிம் பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
- கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%), வெள்ளையர்களும் (72%) வருகின்றனர்.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
My Sincere Thanks to:
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.
Reference:
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.
One can download the complete document from:
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக