அரசின் முன்னாள் உயரதிகாரியும் குழு உறுப்பினர்களுள் ஒருவருமான திரு. ஹர்ஷ் மந்தர் அதே கருத்தரங்கில் பேசியபோது, "காவல் துறை, நீதித் துறைகளினால் முழுமையாகக் கைவிடப் பட்டவர்களாக முஸ்லிம்கள் ஆகிவிட்டனர். ஊடகத் துறையினரும் அரசியல்வாதிகளும் ஏறத்தாழ அதே நிலைபாட்டில்தான் உள்ளனர்" என்று கருத்துத் தெரிவித்தார்.
"எதற்காக நான் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன்?" என்று தெரியாமலேயே சிறைக் கொட்டடிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்றுவரை தங்கள் வாழ்நாளைக் கழித்துவருகின்றனர். அவர்களுள் ஒருவராயிருந்த மாணவர் மக்பூல் ஷா, "14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் இப்போது நிரபராதி என்று என்னை விடுதலை செய்துள்ளார்கள். சரியான நேரத்தில் நீதி கிடைத்திருந்தால், நான் நன்றாகப் படித்து இன்றைக்குப் பெரிய நிலைக்கு வந்திருப்பேன். என் குடும்பம் சீரழிந்திருக்காது. இப்போது, எனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை" என்று வேதனையால் வெந்து போனதை நாம் பதிவு செய்திருந்தோம்.
ஒடிஸ்ஸா மாநிலத்திலுள்ள ஜகன்னாத பூரி ஆலயத்துக்கு, குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்திலிருந்து 1994 ஜூன் மாதம் யாத்திரை புறப்படவிருந்த இந்துக்களிடையே கலவரத்தைத் தூண்டுவதற்காகச் சதித் திட்டம் தீட்டியதாக அஹ்மதாபாத்தைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள் சிலரை அன்றைய குஜராத் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசின் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுள்
- யூஸுஃப்கான்,
- சிராஜ் மியான் தாகூர்,
- ஸாஜித் அலீ,
- இக்பால் (எ) பப்பு சையித்,
- கச்சுகான்,
- அஷ்ரஃப்கான் (எ) பாபு முன்னிகான்,
- சொஹ்ராப்தீன் (எ) சலீம் அன்வர்தீன் ஷேக்,
- அப்துல் சத்தார்,
- அப்துல் ரஊஃப்,
- ஹுஸைன் பாய் (எ) பாஜியா பத்தான்,
- முஜ்ஃபர்கான் (எ) நாஷிர் பத்தான்
குற்றம் சாட்டப்பட்டு, எட்டு ஆண்டுகள் விசாரணை ஏதுமின்றி அப்பாவி முஸ்லிம்கள் கைதிகளாகச் சிறையிலிருந்தனர். காரணம், அவர்கள் அனைவரும் இந்தியக் குற்றவியல் சட்டத்துக்குப் புறம்பான, ஆள் தூக்கிக் கருப்புச் சட்டமான தடா Terrorist and Disruptive Activities (Prevention) Actவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். (தடா வழக்கு எண் 32/1994, 15/1995, 6/1996, 43/1996). மேற்காணும் 11 கைதிகளின் குற்றங்கள் விசாரிக்கப்படாமலும் நிறுவப்படாமலும் அவர்களுக்கு அஹ்மதாபாத் உயர்நீதி மன்றம் கடந்த 31.1.2002இல் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராகி ஒன்றரை ஆண்டு கழிந்திருந்தது. குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
தடாச் சட்டத்தின்கீழ் கைது செய்ததற்குக் காரணம் என்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்து AK-56 துப்பாக்கிகள் 46, தோட்டாக்கள் 40 பெட்டிகள், வெடிகுண்டுகள் 99, ஃப்யூஸ் பின்கள் 110 மற்றும் அச்சு இதழ்கள் 110 ஆகியவற்றைக் கைப்பற்றியதாக குஜராத் காவல்துறை, குற்றப்பத்திரிகையில் கதை விட்டிருந்தது.
ஆம்! காகிதத்தில்தான் கதை விட்டிருந்தது.
மேலும்,
கருப்புச் சட்டமான "தடாவின் கீழ் ஒருவரைக் குற்றம் சுமத்தி வழக்குப் பதிவுசெய்து முதல் தகவல் அறிக்கை (FIR) சமர்ப்பிப்பதற்கு முன்னர் காவல்துறையின் மாவட்டக் கண்காணிப்பாளரின் அனுமதி பெறவேண்டும் எனும் சட்டப் பிரிவை, குஜராத் காவல்துறை தொடுத்த பல வழக்குகளைப் போலவே இவ்வழக்கிலும் கடைப்பிடிக்கவில்லை" என்றும் உச்சநீதி மன்றம் குட்டு வைத்துள்ளது.
அடுத்து,
"சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத்தான் காவல்துறை உள்ளது. அதற்காகவே நியமிக்கப்பட்டுள்ள எந்த அதிகாரியும் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. காந்தி தேசத்தில், 'இந்த மதத்தில் பிறந்ததற்காகக் கொடுமை இழைக்கப்படுகிறோம்' என்ற அச்ச உணர்வு, அப்பாவிகளுள் எவருக்கும் வந்துவிடாமல் சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறையினர் கவனமாக இருக்கவேண்டும்" என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஸீ.கே. பிரசாத் மற்றும் எச். எல். தத் ஆகிய இருவரும் தீர்ப்பில் எச்சரித்துள்ளனர். அதற்கு உதாரணம் கூறும்போது, இந்தி நடிகர் ஷாரூக் கான் நடித்த 'மை நேம் ஈஸ் கான்' எனும் திரைப்படத்தில் இடம்பெறும், 'My name is Khan; but I am not a terrorist’ என்ற வசனத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
பல ஆண்டுகள் சிறையில் அடைபட்டு, குற்றம் ஏதும் செய்யாமல் தண்டனையடைந்தபின் அப்பாவி முஸ்லிம்களின் அர்த்தமுள்ள குரல் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளை நீதிபதிகளும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது சற்றே ஆறுதலான விஷயம்.
நிரபராதிகளாக இருந்தும் ஓரளவு செல்வம் படைத்தவர்களாக இருந்ததால்தான் 18 ஆண்டுகாலம் போராடி, உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று இந்தக் காலங் கடந்தத் தீர்ப்பைப் பெறமுடிந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக