விலையோ குறைவு லாபமோ பெரிது!மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த அப்துல் ஜாபர்: பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். பள் ளிப் படிப்பிற்குப் பின் மோட்டார் மெக்கானிக் கல் தொழிற் கல்வியை படித்தேன். அந்த படிப்பு தான் தண்ணீர் இறைக்கும் இயந்திரம் உருவாக்க உதவியது.பல நீர் இறைக்கும் இயந்திரங்கள் இருக்கலாம், ஆனால் இது வித்தியாசமானது. எந்த விதமான எரிசக்தியையும் உபயோகிக்காமல் மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி மணிக்கு 2,000 லிட்டர் தண்ணீர் இறைக்கலாம்.மூன்று நிமிடத்திற்குள் 500 லிட்டர் தண்ணீர் இறைத்துவிடலாம். அதுவும் சைக்கிள் மிதிப்பதைப் போன்றே மிகவும் எளிதான கால் பெடலிங் மூலம். இந்த இயந்திரத் திற்கு, "ஷீல்டு மார்ஷல் பெடல் பம்ப்' என்று பெயரிட்டுள்ளேன்.நம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தவே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தேன். வீட்டுத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றலாம், இறைக்கலாம். நகரக் கழிவுநீர்க் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பு மற்றும் தேக்கத்தை சரி செய்யலாம், மழைக்காலத்தில் பாலத்தின் கீழ் தேங்கும் மழை நீரை எளிதாக வெளியேற்றலாம், பைப் மூலம் மலையின் உச்சிக்கு நீர் எடுத்துச் செல்லாம்.இந்த இயந்திரம் ஒரு சிறந்த சைக்கிளிங் உடற்பயிற்சி கருவியாக செயல்படுகிறது. ஒருவரின் உடற்கூறுகளை இதை இயக்குவதற்கு முன்னும், பின்னும் ஈ.சி.ஜி., உட்பட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்து பார்த்து விட்டேன். இதன் மருத்துவச் சான்றிதழில் இந்த இயந்திரத்தை இயக்குவதால் எந்த உடல் உபாதைகளும் ஏற்படுவதில்லை. மாறாக, இதை இயக்குபவர் மேலும் புத்துணர்ச்சியடைகிறார் என்பது தெரிய வந்தது.இயந்திர சுழற்சியின் அடிப்படை விதிகளைக் கொண்டு இது இயங்குகிறது. இந்த இயந்திரத்துக்கு இந்திய அரசின் காப்புரிமை கிடைத்துள்ளது. இரும்பினால் செய்யப்பட்டதால், இதன் எடை 70 கிலோவாக உள்ளது. விற்பனைக்கு வரும்போது பைபரில் உருவாவதால் இதன் எடை மிகவும் குறைவதுடன், விலையும் பத்தாயிரம் ரூபாய் அளவில் இருக்கும்.
நன்றி;தினமலர்