பாபர் மஸ்ஜித் உரிமை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி நடுநிலையாளர்களுக்கும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின்படி சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள், ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் நிலைநாட்டியுள்ளமை உலக அரங்கில் இந்திய நீதிமுறையின் லட்சணத்தைக் கேலிக்கூத்தாக்கி உள்ளது!
நான்கரை நூற்றாண்டுகள் அனுபவ பாத்தியதையுள்ள பாபர் மசூதியை 1992, டிசம்பர் 6 அன்று சங்பரிவாரங்கள் வன்முறையாக ஆக்கிரமித்து இடித்துத் தகர்த்தனர். ஒருவரின் சொத்தை ஆக்கிரமிப்பதும், அவர் உடமைக்குச் சேதம் விளைவிப்பதும் சட்டவிரோதம். இதனைத்தொடர்ந்து மதக்கலவரங்களால் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் கொன்று குவித்தது அதைவிடக்கொடிய கிரிமினல் குற்றம்.
இதற்கெல்லாம் காரணமானவர்களை விசாரித்துத் தண்டிக்க முயற்சி எடுக்காத நீதிமன்றங்கள், பாபர் மசூதி உரிமை குறித்த வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்கும் என்பதோடு மக்களுக்கு இருக்கும் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும் தகர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. சட்டப்படியல்லாத இத்தீர்ப்பு(கட்டப்பஞ்சாயத்து), ஏற்கனவே ராமர் பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் சேதுக்கால்வாய் திட்டத்தையும் இதே நம்பிக்கையின் அடிப்படையில் நிரந்தரமாக முடக்கி வைக்க வழிகோலும்.
கடந்த 24-09-2010 அன்று வெளியாக இருந்த தீர்ப்பு, உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவின் மீது இடைக்காலத்தடையாணை பெறப்பட்டு 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தால் அப்புகார் மனு தள்ளுபடி செய்யப்பட, கடந்த 30-09-2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் இம்முறையற்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், பாபர் மசூதி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றும் அதில் நீதிமன்றங்களால் தீர்ப்பு கூற இயலாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சங்பரிவாரங்கள் அறிவித்திருந்தன. எனினும் பொதுஅமைதிக்கு ஊறு விளைவிப்பவர்களை முன்கூட்டியே கைது செய்து சிறையிலடைக்கும் "குண்டர் தடுப்புச் சட்டம்", தீர்ப்பு வெளியாகும் சமயம் சங்பரிவாரங்கள் மீது பாயவில்லை. இதனால் சங்பரிவாரங்களில் குண்டர்களே இல்லை என்பது அர்த்தம் அல்ல என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றாகத் தெரியும். சுதந்திர, குடியரசு தினங்களுக்கு முன்னரும் ஒவ்வொரு டிசம்பர் 6 க்கு முன்னரும் சந்தேகத்தின்பேரிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும் முஸ்லிம்களைக் கைது செய்யும் சட்டம், நாட்டில் திட்டமிட்டே கலவரம் உருவாக்கிக் கொண்டிருக்கும் சங்பரிவாரங்களை இத்தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு சந்தேகிக்கவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கூட கைது செய்யவோ முன்வரவில்லை!
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்புக்குத்தான்; உண்மையான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் வழங்குவதுதான் என்றும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்றும் சமாதானம் சொல்லப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத தீர்ப்புக்கு ஏன் 60 ஆண்டுகால தாமதம் என்ற கேள்விக்கு யாரிடம் பதில் பெறுவது? தாமதமாக வழங்கப்படும் நீதிகூட அநீதியே என்று கருதப்படும் போது முஸ்லிம்களின் உடமை விசயத்தில் 60 ஆண்டுகள் தாமதப்படுத்தி அலகாபாத் நீதிமன்றம் அநீதி வழங்கியுள்ளது!
24-09-2010 வரை எந்த நீதிமன்றத் தீர்ப்பும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லிவந்த சங்பரிவாரங்கள் 30-09-2010 தேதியிட்ட தீர்ப்பைத் தலையில் வைத்துக் கொண்டாடுவதிலிருந்தே இதன் லட்சணம் விளங்குகிறது. தீர்ப்பு எப்படி இருப்பினும் "மேல்முறையீடு செய்வது உறுதி" என்ற அத்வானிக்கும் செலக்டிவ் அம்னீஸியா என்று நினைக்குமளவு தீர்ப்பை வரவேற்றுள்ளார். மூன்றில் இருபங்கு உரிமையைப் பெற்றுள்ளபோதும் "இந்துக்கள்" அமைதி காக்க வேண்டும் என்று RSS தலைவர் வேண்டுகோள் வைக்கிறார்! யாரை ஏமாற்ற இந்தக் கபட நாடகங்கள்!
செப்டம்பர் 24 -30 க்கு இடைப்பட்ட ஆறுநாட்களில் என்ன நடந்தது? சட்டம் எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முழங்கிய சங்பரிவாரங்கள் மகுடிப் பாம்பாய் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட அதிசயம் எப்படி நிகழ்ந்தது? என்ற கேள்விகளுக்கு விடைதேட அலைய வேண்டியதில்லை. சட்டமாவது மண்ணாங்கட்டியாவது என்பது சங்பரிவாரங்களின் இயல்பெனில், நீதியாவது மண்ணாங்கட்டியாவது என்று காங்கிரஸும் நடந்து கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும்கூட நியாயமான தீர்ப்பை உடனடியாக எதிர்பார்க்க முடியாதளவுக்கு நம்நாட்டு சட்டத்தின் ஓட்டைகள் பல்லிளிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க முடியாதளவு 'பக்தி'முற்றிப்போன நீதிபதிகளும், லவ் ஜிஹாத், இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் வெளிப்படையாகவே விஷம்கக்கிய காவியுடை தரிக்காத நீதிபதிகளும் நம் நாட்டு நீதிமன்றங்களில் உள்ளதை நினைவில் கொள்ளவும்.
பாபர் மசூதி நடுவில்தான் ராமன் பிறந்தான் என்று இரு நீதிபதிகள் கூறியுள்ளனர். இன்னொரு நீதிபதியோ, பாபர் மசூதி கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்கிறார். இடிக்கப்படாத கோவிலில் முஸ்லிம்கள் தொழமாட்டார்கள் என்று தன் பங்குக்கு இன்னொரு நீதிபதி குழப்புகிறார். 1949 வரை முஸ்லிம்கள் அங்கு தொழுது வந்துள்ளதால் அங்கு கோவில் இருந்திருக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும்!
ராமர் பிறந்ததாக நீதிபதிகளால் சொல்லப்பட்டுள்ள (சங்பரிவாரங்களும் இதையேதான் சொல்லி வருகிறார்கள்) இடம் இந்துக்களுக்கு உரியதாம்! அதாவது சிலைகளை வணங்காத முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் நடுவில் இந்துக்கடவுளின் உருவச்சிலை! என்னே ஒரு வக்கிரம் பாருங்கள்! அயோத்தியில் பிறந்ததாக எவ்வித ஆதாரங்களும் இன்றி 'நம்ப'ப்படும் ராமன், பாபர் மசூதிக்குச் சற்று தள்ளி பிறந்ததாக 'நம்பி'னால் குடியா மூழ்கி விடும்?
பாபர்மசூதி, ராமர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதல்ல என்ற நீதிபதி கான் அவர்களின் தீர்ப்பை கருத்தில் கொண்டாலே போதும், சங்பரிவாரங்களின் ஐம்பதாண்டுகால மோசடிகள் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் இதுவரை ராமன் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதே பரிவாரங்களின் நம்பிக்கை. தீர்ப்பை ஏற்றுக்கொண்ட சங்பரிவாரங்கள் இதையும் ஏற்றுதானே ஆகவேண்டும்! ஆனால் ஏற்பார்களா?
மொத்ததில் மூன்று நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட வில்லை. ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதி, இன்னொரு சாராருக்கான நீதியாகக்கருத முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மென்மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை ஒருபோதும் நீதியான தீர்ப்பாகக் கருத முடியாது. இனிமேல் எந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்று இந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கும்முன்னதாக, சட்டம் கடமையைச் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம்தான்!
நன்றி; இநேரம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக