விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் சென்னையிலுள்ள தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.
இந்த நிலையில், இவர் பைக்குகள் திருட்டுப் போவதை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்னணு சாதனத்தை வடிவமைத்துள்ளார். டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் என்று பெயரிட்டுள்ள இந்த சாதனத்தை பைக்குகளில் பொருத்திவிட்டால், கள்ளச்சாவி போட்டோ அல்லது ஒயரை இணைத்தோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது.
மேலும், வண்டியின் உரிமையாளர் ஒரிஜினல் சாவியை போட்டாலும், ஸ்பீடோ மீட்டர் கன்சோலில் பொருத்தப்படும் பட்டன்களில் ரகசிய குறியீட்டு எண்களை (பாஸ் வேர்டு) பதிவு செய்தால் மட்டுமே பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும்.
மேலும், இந்த கருவி ஸ்பார்க் ப்ளக்கையும் கட்டுப்படுத்துவதால் எந்த வகையிலும் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது என்று அடித்து கூறுகிறார் கார்த்திக். மேலும், தவறான பாஸ்வேர்டை பதிவு செய்து வண்டியை எடுக்க முயன்றால் அலாரம் அடித்து உரிமையாளரை இந்த சாதனம் உஷார்படுத்திவிடும்.
தனது கண்டுபிடிப்புக்கு கார்த்திக் காப்புரிமையையும் பெற்றுள்ளார். மேலும், வாகன நிறுவனங்களுக்கு தனது கண்டுபிடிப்பு குறித்து தெரியப்படுத்தியுள்ளார். வர்த்தக ரீதியில் தனது கண்டுபிடிப்பை தயாரித்து வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் கூறுகையில்,"சிறு வயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. இந்த ஆர்வமே டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் கண்டுபிடித்தற்கு முக்கிய காரணம்.
எனது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களை பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளேன். வர்த்தக ரீதியில் இந்த சாதனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.
பைக் திருட்டை தடுப்பதற்கு டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் நிச்சயம் பேரூதவி புரியும். மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பிற சாதனங்களை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாகவும், 100 சதவீதம் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
இருசக்கர வாகனங்களில் இந்த சாதனத்தை பொருத்துவதற்கு ரூ.700ம், கார்களுக்கு பொருத்த ரூ.2,000மும் செலவாகும்.
மேலும், கார்களில் பொருத்தப்படும் சாதனத்தில் கார் திருடப்பட்டால் அதுகுறித்து உரிமையாளருக்கு மொபைல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது," என்று கூறினார்.
தனது கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய இருப்பதாக கார்த்திக் நம்மிடம் தெரிவித்தார். இந்த சாதனத்தை பெறுவது குறித்த விபரங்களுக்கு 09894282845 என்ற மொபைல் எண்ணிலும், kartikplayer@gmail.com என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக