அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
26 ஜூன், 2012
மூன்று விடயங்களில் மிகப் பெரிய பொய்யன்:
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
மஸ்ரூக் இப்னு அஜ்த (ரஹ்) அறிவித்தார், நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் “அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்துவிட்டார்.
முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (திருக்குர்ஆன் 06:103 வது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகிறவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 42:51 வது) வசனத்தையும் ஒதினார்கள்.
“உங்களிடம் முஹம்மது(ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தை ஓதினார்கள்.
“உங்களிடம் முஹம்மத்(ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக) “தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்…” (எனும் 5:67 வது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களையே அவரின் (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக