விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. கூடவே காற்றும். சாலை எல்லாம் தண்ணீர். சாலை என்றதும் பெரிய நகரம் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் தெரு என்று சொல்லலாம். சிறு சிறு தெருக்கள் உள்ள, வசதிகள் மிகவும் குறைவான, பங்களாதேஷ் நாட்டின் மைமென்சிங் மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏதோ ஒரு கிராமம்.
மரணத்துடன் இறுதிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் தம் தந்தையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் மகன் ஜெய்னுல் ஆபிதீன்.
கண்ணெல்லாம் நீர் கோர்த்துக் கொண்டு வெளியே பெய்யும் மழைக்கு நிகராய் வழிந்து கொண்டிருந்ததே தவிர, வேறு என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. என்னவாவது சிகிச்சைக்கு முயன்று பார்க்கலாம் என்றால் மருத்துவ வசதி அற்றிருந்த ஊர் அது. அண்மையில் உள்ள மருத்துவமனை என்பதோ 20 கி.மீ. தொலைவு. கொட்டும் மழையில் எந்த வாகனத்தைப் பிடித்து எப்படிப் போய்ச் சேருவது?
தொழில் என்று வயல்களில் கூலி வேலை செய்து, கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஓரளவு வயிற்றையும் வீட்டில் ஏழ்மையையும் நிரப்பி வைத்திருந்த ஜெய்னுல் ஆபிதீனுக்கு வாகனம் அமர்த்தும் வசதியும் கேள்விகுறிதான்.
கன்னத்தில் கைவைத்து கொட்டக் கொட்டப் பார்க்க, மரணத்தைத் தழுவினார் தந்தை. எங்கோ ஓர் இடி இடித்தது. ஜெய்னுல் ஆபிதீன் மனத்தில் இறங்கியது.
“நாம் தாக்காவுக்குச் சென்று விடலாமா?” ஒருநாள் தம் மனைவி லால் பானுவிடம் கேட்டார் ஜெய்னுல் ஆபிதீன். தந்தை இறந்த சோகம் குறைந்திருந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் அவரை விட்டு மறையவில்லை. மனத்தில் விதை ஒன்றைத் தூவியிருந்தது.
கேள்விக்குறியுடன் தம் கணவனைப் பார்த்தார் லால் பானு.
“பெரிய ஊர். ஏதாவது நல்ல வேலை கிடைக்கும். இப்பொழுது வருவதைவிட அதிகமாகவே சம்பாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.“
மறுபேச்சு பேசாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கணவனுடன் கிளம்பினார் மனைவி.
ஏதோ குருட்டு தைரியத்தில் இருவரும் கிளம்பி விட்டார்களே தவிர, சிறிய கிராமத்திலிருந்து வந்து இறங்கிய அவர்களை ஏகப்பட்ட மக்களுடன் பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்த நகரத்தின் பிரம்மாண்டம் பயமுறுத்தியது. எக்கச்சக்க மக்கள் நெருக்கிப்பிடித்து வாழும் தாக்கா பங்களாதேஷின் தலைநகரம். உலகின் ஒன்பதாவது பெரிய நகரம். மற்றொரு உலகப் பெருமையும் தாக்காவுக்கு இருந்தது. ரிக்-ஷாக்களின் உலகத் தலைநகர். சுமார் நாலு இலட்சம் சைக்கிள் ரிக்-ஷாக்கள் அந்நகரில் ஓடிக்கொண்டிருந்தன. சாலையில் மீதமுள்ள பகுதிகளில்தான் கார், பஸ் போன்றவை ஓடும் போலும்.
இங்கு என்ன செய்து எப்படி பிழைக்கப் போகிறோம் என்று ஜெய்னுல் ஆபிதீனுக்குப் புரியவில்லை. நகரின் ஒரு மூலையில் அண்மிக்கொண்டு பிழைப்புத் தேட ஆரம்பித்தார். வந்தாரை வாழ வைக்கும் தாக்காவில் அவரைப் போன்றவர்களுக்கு எளிதில் கிடைத்த வாய்ப்பு ரிக்-ஷா. ஆனால் பிரச்சினை ரிக்-ஷாவை மிதிப்பதைவிட மூச்சுத் திணறும் அந்நகரின் போக்குவரத்தில் அதை ஓட்டுவதுதான். தட்டுத்தடுமாறி பெடலடிக்க ஆரம்பித்தவருக்கு விரைவில் அந்த லாவகம் புலப்பட்டுப் போனது. கார்களுக்கும் லாரிகளுக்கும் இடையில் புகுந்து ‘கட்’ அடித்து வெளிவருவம் சூட்சுமம் வசமானது. ‘கால் தேர்ந்த’ ரிக்-ஷாக்காரர் ஆகிவிட்டார் ஜெய்னுல் ஆபிதீன். எப்படியும் இந்நகரில் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை வலுவானது. கூடவே, கிராமத்திலிருந்து கிளம்பும்முன் மனத்தில் விழுந்திருந்த விதை துளிர்க்க ஆரம்பித்தது.
மக்கள், சரக்கு என்று பாகுபாடில்லாமல் என்ன சவாரி கிடைத்தாலும் சரி என்று ஓட ஆரம்பித்தது ஜெய்னுல் ஆபிதீனின் ரிக்-ஷா. லட்சக்கணக்கான ரிக்-ஷா ஓட்டுனர்களில் ஒருவராகச் சங்கமித்தார். ஆனால் அவர் லட்சத்தில் ஒருவராக உருவாகப்போவதை அப்பொழுது யாரும் அறியவில்லை.
மாங்கு மாங்கென்று பொழுதெல்லாம் ஓட்டினாலும் எவ்வளவு வருமானம் கிடைத்துவிடப் போகிறது? ‘நானும் ஏதாவது செய்கிறேனே’ என்று மனைவி லால் பானு தாமும் ஒரு வேலை தேடினார். கிடைத்தது. அவர்கள் தங்கியிருந்த பகுதியில் தனியார் மருத்துமனை ஒன்றில் உதவியாளர் வேலை. அதிலும் மிகப் பெரும் வருமானம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கிராமத்தில் அவர்கள் கிடந்ததற்கு நிலைமை மோசமில்லை. இந்நிலையில்தான் ஜெய்னுல் ஆபிதீனின் ரகசிய ஆசை மேலும் வலுவடைந்தது. மனைவிக்குத் தெரியாமல் அதைச் செய்வது என்று முடிவெடுத்தார். மிகப் பெரும் முடிவு. ஆனால் அதை ரகசியமாய் செய்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
ஜெய்னுல் ஆபிதீன்
நகரிலுள்ள வங்கி ஒன்றில் நுழைந்து விசாரித்தார். சேமிப்புக் கணக்கு உருவானது. சிறு தொகை சேமிப்பது வழக்கமானது. செலவு செய்தது போக மீதமுள்ளது சேமிப்பு என்பது போலில்லாமல், தமது தினசரி வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை வங்கியில் போடுவதைத் தனக்குத்தானே விதியாக்கிக் கொண்டார்.
எல்லா நாட்களும் ஒன்றே போல் சவாரி கிடைத்து விடுமா என்ன? அதெல்லாம் விதியைத் தளர்த்தவில்லை. வருமானம் குறைந்தாலும் சேமிப்பு போகத்தான் வீட்டிற்கு மீதி. சப்ஜி வாங்கப் பணம் போதவில்லை என்றால் சாப்ஜியைச் சாட ஆரம்பிப்பார் லால் பானு. மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாலும் பரவாயில்லை என்று கல்லுளி மங்கனாய் இருந்தாரே தவிர தமது ரகசிய சேமிப்பைப்பற்றி தவறியும் வாய் திறக்கவில்லை ஜெய்னுல் ஆபிதீன்.
காலம் வஞ்சனையில்லாமல் நகர, முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒருநாள் வங்கிக்குச் சென்று விசாரித்தார்.
“என் சேமிப்பில் எவ்வளவு தொகை இருக்கிறது?”
சிறு துளி மூன்றேகால் இலட்சம் பங்களாதேஷி டாக்காவாகப் பெருகியிருந்தது. அவரது மனத்தில் தோன்றிய மகிழ்வும் புத்துணர்வும், வலிக்க வலிக்க ரிக்-ஷவை மிதித்த கால்களில் பரவி, திணறி நின்றார் அவர். எத்தனை நாள் காத்திருப்பு! எத்தனை ஆண்டு ரகசியம்! உடைக்க நேரம் நெருங்கிவிட்டது என்று இப்பொழுது அவருக்குத் தோன்றியது. போட்டு உடைத்தார்.
o-O-o
பிழைப்புத் தேடி பெருநகரங்களுக்குப் புலம் பெயர்பவர்கள் யாரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதில்லை. தொடர்பு இருக்கும். நல்லது, கெட்டது என்று ஊருக்குச் சென்று வருவது இயல்பாகும். ஆனால் நகர வாழ்க்கையின் வசதிகளுக்குப் பழக்கப்பட்டுப் போன மனம் மீண்டும் சொந்த ஊருக்குப் புலம்பெயர மட்டும் தயாராவதில்லை.
ஆனால் அறுபது வயது தாத்தா, தாக்கா நகருக்கு டாட்டா காட்டிவிட்டு தமது ஊருக்குத் திரும்பினார்.
சிறியதொரு மனையை விலை பேசி வாங்கினார். குருவிபோல் சேமித்து எடுத்து வந்திருந்த பணத்திலிருந்து கூடு கட்டினார். நாலா புறமும் சுவர், கூரையாகத் தகரம். இதுதான் அவரது எளிய வீடு. ஆனால் அவரது அத்தனை ஆண்டு லட்சியம் இதுவல்ல! அவர் மனத்தில் முப்பது ஆண்டுகளாய் பொத்து வளர்த்த ரகசியம் ஒரு பேராச்சரியம்!
தம் வீட்டுடன் சேர்த்து பக்கத்தில் ஒரு ஷெட் கட்டினார். அதன் கூரையும் தகரம்தான். அக்கம் பக்கத்தவர்கள், ஊர்க்காரர்கள் அனைவரையும் அழைத்தார். ‘என் புது வீட்டிற்கு மொய் எழுதுங்கள்’ என்று சொல்லவில்லை. மாறாய், “இதோ பாருங்கள். இது இந்த ஊருக்கு நான் வழங்கும் இலவச க்ளினிக். நாமெல்லாம் இங்கு இலவச சிகிச்சை செய்து கொள்ளலாம்,” என்றார் ஜெய்னுல் ஆபிதீன்.
ஊர்க்காரர்கள் அவரை மேலும் கீழும் பார்த்தார்கள்; தலையாட்டினார்கள்; கலைந்துச் சென்றார்கள். கேலி அவர்களது முகத்தில் அப்பியிருந்தது.
மீதமிருந்த பணத்தில் சில மேசைகள், கட்டில்கள் வாங்கி தமது க்ளினிக்கில் போட்டார். பெயர் வைக்க வேண்டுமே? ‘மும்தாஜ் ஆஸ்பிட்டல்’ என்ற பெயர் பலகை வந்து ஏறியது. மக்கள் வந்து நின்று படித்துப் பார்த்துவிட்டு, இன்னும் கொஞ்சம் சிரித்துவிட்டுச் சென்றனர்.
எல்லாம் சரி! மருத்துவர்கள்? சிலரைச் சந்தித்துப் பேசினார்.
“நீ ரிக்-ஷாக்காரன். இப்பொழுது க்ளினிக் திறந்துள்ளாய்! அப்படியா? மெத்த மகிழ்ச்சி” என்று மருத்தவர்கள் பதில்களிலும் நையாண்டி ஒளிந்திருந்தது.
கால்களைப்போல் மனமும் உரமேறியிருந்த ஜெய்னுல் ஆபிதீன் அதற்கெல்லாம் அசரவில்லை. இவர்களுக்கு நான் அளிக்கும் பரிசை உணரக்கூட இயலாத அப்பாவிகள் இவர்கள் என்றுதான் அவருக்கு அந்த மக்களைப் பற்றித் தோன்றியது.
ஒருநாள் கிராமத்தில் யாருக்கோ அடிபட்டு ஏதோ காயம். அவசரமாய் தேவை என்றதும் இந்த க்ளினிக்கிற்கு அழைத்துவந்து, முதல் உதவி அளிக்கும் தகுதியுடைய நர்ஸ் போன்ற ஒருவரைப் பிடித்துவந்து, காயத்திற்கு மருத்துவ உதவி அளித்திருக்கிறார். அவ்வளவுதான்!
சரசரவென்று காட்டுத் தீயாய் கிராமத்தில் பரவியது செய்தி. ‘அட இந்த மனுசன் அப்ப உண்மையாத்தான் சொல்லியிருக்கிறான்’ என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு, தலையைப் பிடித்துக் கொண்டு, ஆளுக்கொரு என்னத்தையோ பிடித்துக் கொண்டு க்ளினிக்கில் ‘ஜே ஜே’ என்று கூட்டம்.
சிறிய பிரச்சினைகளைக் கவனிக்க தினசரி முதலுதவி மருத்துவர், வாரம் ஒருமுறை பெரிய மருத்துவர் என்று களை கட்ட ஆரம்பித்தது க்ளினிக். சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு இத்தியாதி சிறு வியாதிகளுக்கு அந்த க்ளினிக்கில் இலவச சிகிச்சை. சுகப் பிரசவமும் இலவசம். அந்தச் சிறு கிராமத்தில் தினசரி நூறு நோயாளிகளுக்குச் சிகிச்சை என்று வளர ஆரம்பித்தது சேவை. பெரிய விஷயங்களுக்கு மட்டும் மைமென் சிங்கில் உள்ள பெரிய மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.
நல்ல மனம் கொண்ட சிலரும் இந்தச் செய்தியை அறிந்த சில நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு உதவ அடுத்து இலவச மருந்து கடை உருவானது. விஷயம் பரவ பரவ, உள்ளூர் ஊடகங்களும் செய்தி வெளியிட, நல்லுள்ளம் கொண்ட மக்களின் நன்கொடை தானாய் வர ஆரம்பித்தது. பார்த்தார் ஆபிதீன். அந்தப் பணத்தில் மேலும் இரண்டு ஷெட்டுகள் கட்டி, இது தொடக்கக் கல்வி பிள்ளைகளுக்குப் பயிற்சி மையம் என்று அறிவித்துவிட்டார்.
அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் தொழில் என்பதெல்லாம், விவசாயம், கூலி வேலை. அவர்களின் பிள்ளைகள் ஓடிவந்து அங்கு அமர்ந்துகொள்ள சுமார் 150 மாணவர்களுக்கு பெங்காலி, அரபு மொழி, கணிதம், ஆங்கிலம் என்று அந்தப் பாடசாலையில் கல்விப் பணி துவங்கியது. அவர்களுக்கான புத்தகங்களும் இலவசம்.
61 வயதை நெருங்கிவிட்ட ஜெய்னுல் ஆபிதீனுக்கு க்ளினிக்கைக் கவனிப்பதே முழு நேர அலுவலாகிவிட்டது. ரிக்-ஷா ஓட்டிதானே என்று அவரை அப்பொழுது பெரிதாய்க் கண்டு கொள்ளாத மக்கள் மத்தியில் இப்பொழுது ஏக மரியாதை.
“பாய்! எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு கப் சாயா குடித்துவிட்டுப் போங்களேன்” என்று அன்பு உபசரிப்பு அதிகமாகிவிட்டது. “எங்கள் நாட்டின் முன்னோடி மனிதர்களுள் ஒருவராகி விட்டார் ஜெய்னுல் ஆபிதீன்” என்று அரசு ஊழியர் ஒருவரின் பெருமையான பிபிசி பேட்டி வேறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக