பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கக் கூடாது என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மறைமுகமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டில் மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக
முன்னிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், இப்போதே நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள நிதீஷ் குமார், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பின்மையில் மிகுந்த நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும். இந்தியா பல்வேறு மதம், மொழி, கலாசாரத்தை உள்ளடக்கியது. அதன் தலைவராக வருபவர், மேற்கண்ட விஷயங்களில் தனிப்பட்டமுறையில் மோசமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவராக இருக்ககூடாது.
மக்கள் நம்பிக்கையைப் பெற... கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். வளர்ந்த மாநிலத்தில் இருந்து வந்தவராக இல்லாமல், வளர்ச்சி குறைந்த மாநிலங்களின் நிலை குறித்து எண்ணிப் பார்க்கும் நபராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
பிரதமர் பதவி ஆசையில்லை: பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்ற விருப்பமோ, அந்தப் பதவியை அடைய வேண்டுமென்ற ஆசையோ எனக்கு இல்லை. கூட்டணியில் உள்ள பெரிய கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமராக வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சி என்ற முறையில் வெற்றிக்காகப் பாடுபடுவேன்.' என்று நிதீஷ் கூறியுள்ளார்.
ஏற்கெனவே பல்வேறு விஷயங்களில் நரேந்திர மோடிக்கு நிதீஷ் தனது எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளார். இதனால் கடந்த மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தலில் பிகாரில் மோடி பாஜகவுக்காக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
துணை முதல்வரின் கருத்து: நிதீஷின் இந்தக் கருத்தை பிகார் துணை முதல்வரும், பாஜகவைச் சேர்ந்தவருமான சுஷில் குமார் மோடி ஆதரித்துள்ளார்.
"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை போன்ற தூய்மையான நபராக இருக்க வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி பதில்
ஆமதாபாத், ஜூன் 19: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கக் கூடாது என்ற நிதீஷ் குமாரின் கருத்துக்கு நரேந்திர மோடி நேரடியாக பதிலளிக்கவில்லை. எனினும் ஒருவரது கருத்தை தவறான அர்த்தத்தில் வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை மேற்கொள்காட்டி மோடி விளக்கமளித்துள்ளார். "உறுதி என்பது குணநலனால் ஏற்படுகிறது. குணநலன் கர்மாவால் உருவாகிறது. எனவே, கர்மா என்பதே உறுதியின் ஓர் அம்சம்தான்' என்று கூறியுள்ளார். இதுவே நிதீஷின் கருத்துக்கு அவரது பதிலாக அமைந்துள்ளது. மாலையில் மீண்டும் டுவிட்டரில் கருத்தைப் பகிர்ந்து கொண்ட மோடி, "நாள்தோறும் விவேகானந்தரின் பொன்மொழிகளை இணையதளத்தில் பகிர்ந்து கொள்வது வழக்கம். பரபரப்பு செய்திகளை வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தகவல்களை தவறாக அர்த்தம் கற்பித்து வெளியிடக் கூடாது என்று ஊடகத் துறை நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்த விஷயத்தில் இப்போதைக்கு கருத்துத் தெரிவிக்காமல் இருப்பதே நல்லது என்று மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக