புதுடில்லி : "இதர பிற்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து, மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும்' என, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
பார்லிமென்டிற்கு வெளியே, நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டில், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும். இருந்தாலும், எவ்வளவு காலத்திற்குள் எடுக்கப்படும் என, உறுதியாகக் கூற முடியாது. தற்போதைய பார்லிமென்டின் பதவிக்காலத்தில், இரண்டரை ஆண்டுகாலம் முடிந்து விட்டது. எனவே, மீதமுள்ள காலத்திற்குள், நாங்கள் அளித்த உறுதிமொழிகளை காப்பாற்ற வேண்டும். அதனால், விரைவில் இடஒதுக்கீடு தொடர்பான முடிவு, மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக