19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.كُن فَيَكُونُ குன்பயகூன் என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் 'ஆகு' என்று சொன்னால் உடன் ஆகி விடும். இங்கு தனது வல்லமையை மனிதர்களுக்கு இறைவன் விளக்குகிறான். இன்றைய அறிவியல் இந்த வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று பார்ப்போம்.
சிங்குலாரிட்டி என்பது என்ன?
'வினோதத் தன்மை' (SINGULARITY) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப் படும் அல்லது பயன்படாத நிலையை அடையும் இடமே 'சிங்குலாரிட்டி' (வினோதத் தன்மை) ஆகும். பெரு வெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்த கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெரு வெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே 'பெரு வெடிப்பு வினோதம்' (BIG BANG SINGULARITY) ஆகும்.
-'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்'(A BRIEF HISTORY OF TIME) பக்கம் 9
-அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.
இந்த இடத்தில் அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் கூற்றை சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகின் காலம் தொடங்குவதே பெரு வெடிப்பில் இருந்துதான். பெரு வெடிப்பு என்று நிகழ்ந்ததோ அன்றிலிருந்துதான் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெரு வெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பது தெளிவாகிறது. பெரு வெடிப்புக்கு முன் அதை துல்லியமாக நிகழ்த்திக்காட்டியது யார்? என்ற கேள்வி இங்கு இயல்பாக நமக்குள் எழும்.
முன்பு 'பேரண்டம் என்றும் நிலையானது: மாற்றமில்லாதது: ஆதியோ அந்தமோ இல்லாதது: அது என்றென்றும் நிலைத்திருப்பது: அதற்கு ஒரு படைப்பாளன் தேவையில்லை:' என்றுதான் பல அறிஞர்களும் சொல்லி வந்தனர். 'மாறா நிலைக் கோட்பாடு' என்பதோடு இந்த கருத்து ஏறத்தாழ ஒத்து வரும். நாத்திகத்திற்கும் இந்த கருத்து வலு சேர்க்கும் விதமாக இருந்ததால் பலரும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அறிஞர் அரிஸ்டாட்டிலும் இந்தக் கருத்தை ஆதரித்தார்.
ஆனால் அறிஞர் ஐசக் நியூட்டன்(1672-1727) பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பேரண்டம் இறைவன் என்ற ஒருவனின் துணையில்லாமல் உண்டாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 'பிரின்ஸிப்பியர்' (Matthematical Principles Of Natural Philosophy) என்ற புகழ் பெற்ற நூலில் நியூட்டன் இந்த தகவலைத் தெரிவிக்கிறார். ஆனால் இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு அவரால் விடை காண முடியவில்லை.
இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கால கட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு 'ஒரு முழு முதல் அணு' இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின்போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரம்மாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.
பெரு வெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும கன ஹைட்ரஜன் வாயுவின் மையக் கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக் கரு உருவாகி இருக்கலாம். அவைகளிலிருந்து 'லிதியம்' மற்றும் 'பெரில்லியம்' போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும். என்று அறிஞர் ஹாக்கிங் மேற்கண்ட புத்தகம் பக்கம் 124ல் கூறுகிறார்.
மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நடசத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்த பொருட்களுமே இல்லாத ஒரு சூன்ய நிலையிலேயே இருந்துள்ளதாக நாம் அறிகிறோம். பெரு வெடிப்புக்கு முன் மேற் கூறிய பொருட்கள் யாவும் முன்னரே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை எனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் 'பெரு வெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிணாமம் பூஜ்யமாகும். அதன் வெப்பம் எல்லையற்றதுமாகும்' என்கிறார்.
-A Brief History of Time பக்கம் 123
பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை படைத்தது உருவாக்கியது யார்?
'விண்ணகத்தை நாம் வல்லமையைக் கொண்டு படைத்தோம்'
-குர்ஆன் 51:47
ஆம் இன்றைய அறிவியல் பெரு வெடிப்புக்கு முன்னால் திடீரென்று புறப்பட்ட ஒரு ஆற்றலின் மூலமே பெரு வெடிப்பு சாத்தியமானது என்பதை குர்ஆனும் மெய்ப்பிப்பதைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை எண்ணி வியக்கிறோம். ஆற்றலின் வரைவிலக்கணம் கூட தெரியாத அன்றைய அரபுலகில் பிறந்த முகமது நபிக்கு இந்த உண்மைகள் எவ்வாறு தெரிய வந்தது?
-----------------------------------------------------------
குர்ஆனின் இந்த அருமையான வசனங்கள் இவ்வளவு அழகிய அறிவியல் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்க நமது சூஃபி பிரியர்களில் சிலர் இதனை கவிதையாக வடிக்க அதை நம் ஏ.ஆர்.ரஹ்மானும் அருமையான பாடலாக கொடுத்துள்ளார். இசையும் பாடலும் சேரும்பொது அங்கு சிந்தனை அகன்று விடுவதைப் பார்க்கிறோம். 'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.
//ஓ துறவிகளின் அரசரே;
வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;
உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்
எல்லைகளைத் தாண்டி வாருங்கள்
உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //
இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.
குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.
'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.
============================================================
பதிவர் மலர் மன்னனைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். தமிழ் ஹிந்து மற்றும் திண்ணை வாசகர்களுக்கு அவர் நல்ல பரிச்சயம். இந்துத்வாவை தனது நரம்புகளிலெல்லாம் ஓட விட்டுக் கொண்டிருப்பவர். வர்ணாசிரமக் கொள்கையை இன்றும் ஆதரிப்பவர். இப்படிப்பட்டவர் முன்பு திண்ணையில் எழுதிய ஒரு வரியைப் படிப்போம்.
//‘கிருத்துவத்திலும் இசுலாத்திலும் ஆன்மிகம் என்பதே கிடையாது. அதாவது அம்மதங்கள் வெறும் வெத்துவேட்டுகள் என்றும் அம்மதங்களில் சேர்ந்தோர் நல்லவராகமாட்டார்கள்//
இது போன்ற ரீதியில்தான் அவரது பல கருத்துகளும் பின்னூட்டங்களும் இருக்கும். தற்போது இஸ்லாமியரிடத்தில் தவ்ஹீது பிரசாரம் அதிகமானதால் தர்ஹா வணக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் ஒழிய ஆரம்பித்துள்ளன. இந்து மதத்துக்கு பெருத்த அச்சுறத்தலாக உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம். மற்ற அனைத்தையும் இந்துத்வாக்குள் அடக்கி விட்டனர். மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தையும் பத்தோடு பதினொன்றாக ஆக்க தர்ஹா வணக்கத்தை ஊக்கப்படுத்த தற்போது இந்துத்வா அதிக ஆர்வம் காட்டுகிறது. அதன் ஒரு வெளிப்பாடாக சமீபத்தில் மலர் மன்னன் வெளியிட்ட ஒரு பதிவின் ஒரு பக்கத்தைப் பார்ப்போம்.
//முகமதியம் ஸூஃபிகளை அங்கீகரிப்பதில்லை என்பதோடு அவர்களைச் சித்ரவதை செய்து கொல்லவும் செய்யும். எனது அனல் ஹக் கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே எழுதுகிறேன். ஸூஃபிகளைப் போற்றி வணங்கியது ஹிந்து சமூகம். ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாதிப்பாலேயே முகமதியத்தைப் பரப்ப வந்த கரீப் நவாஸ் என்று பின்னர் அழைக்கப்பட்ட குவாஜா மொய்னுதீன் சிஸ்தி கூட ஒரு ஸூஃபி ஆகிவிட்டார். ஹிந்துக்கள் அவரைத் தம்மவராக வரித்துக் கொண்டனர். ராஜஸ்தான் அஜ்மீரில் உள்ள அவரது அடக்கத்தலம் சென்று வணங்கியுள்ளேன். ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துப் பாடிய ஜாவேத் அக்தர் எழுதிய க்வாஜா மேரே க்வாஜா என்ற பாடலை நான் கேட்டு உருகாத நாளே இல்லை.
ஸூஃபிகளை வணங்குதல் நமது சம்பிரதாயம். அவர்களை இழித்துப் பேசுவதும் கொடுமைப்படுத்துவதும் அடிப்படை வாத வஹாபிய முகமதியர் வழக்கம். ஸூஃபிகளும் சித்தர்களே. ஆனால் முகமதிய சட்டதிட்டங்கள் உள்ள இடங்களில் ஸூஃபிகளுக்கு இடமோ மரியாதையோ இல்லை.//
இந்துத்வாவாதி மலர் மன்னன் தர்ஹாவுக்காகவும் சூஃபி களுக்காகவும் எந்த அளவு வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள். அதாவது தர்ஹா வணக்கத்தை பிரபல்யப்படுத்தி குர்ஆனின் சட்டங்களை புறந்தள்ள வேண்டும் என்பதே இவர்களின் தற்போதய முக்கிய பணி. ஏனெனில் அந்த அளவு இஸ்லாமியரிடத்தில் தற்காலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது இந்துத்வாவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வர்ணாசிரமக் கொள்கை நொறுங்கி விழுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். ஆனால் முடிவில் அவர்கள் அடையப் போவது தோல்வியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக