அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
18 ஏப்ரல், 2012
தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை வேதனை தருகிறது: தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்!
சென்னை:தமிழகத்தின் சில கிராமங்களில் ஜாதியின் பெயரால் இரட்டை டம்ளர் முறை நீடிப்பது வேதனை தருவதாக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 121-வது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியது:
மும்பையில் உள்ள தனது வீட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை அம்பேத்கர் வைத்திருந்தார். அவர் ஒரு தீவிர வாசிப்பாளராக இருந்ததையே இது காட்டுகிறது. இத்தகைய வாசிப்பு பழக்கம்தான் அவரை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றது.
அம்பேத்கரைப் போலவே இன்றைய வழக்குரைஞர்களும் கடின உழைப்பு, நேர்மை ஆகியவற்றின் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். குறிப்பாக வாசிப்பு பழக்கத்தை வழக்குரைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்துக்கு வெளியே எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர்களாகவும் வழக்குரைஞர்கள் இருப்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நீதிமன்ற வளாகத்தினுள் அரசியல் கட்சி சார்பற்றவர்களாக வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளின் அடிப்படையில் வழக்குரைஞர்களிடையே பல்வேறு பிரிவுகள் இருக்குமானால், அது வழக்குரைஞர்களுக்கும் நல்லதல்ல; இந்த நீதிமன்றத்துக்கும் நல்லதல்ல.
தான் படித்த வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இணையாக குடிநீர் அருந்தக்கூட இயலாத அளவுக்கு தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டவர் அம்பேத்கர். ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தக் கூடாது என்ற கருத்தை சமூகம் சகித்துக் கொள்ளாத காலம் அது. இந்திய வரலாற்றில் அவையெல்லாம் கறுப்பு நாள்கள்.
அந்த சூழ்நிலை இன்று எவ்வளவோ மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அம்பேத்கர் பல போராட்டங்களை நடத்தினார்.
அம்பேத்கரைப் போலவே தமிழ்நாட்டில் தந்தை பெரியார் நடத்திய தொடர்ச்சியான பல போராட்டங்கள் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஜாதி பாகுபாடு ஒழிக்கப்பட்டுள்ளன. எனினும், இங்கு இன்னும் சில கிராமங்களில் இரட்டைக் குவளை முறை தொடர்வது வேதனை அளிக்கிறது. இந்த பாகுபாடுகள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றார் இக்பால்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக