அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
17 ஏப்ரல், 2012
மனித நேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்றது தேர்தல்கமிஷன்
இந்தியத் தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவு கிடைத்துள்ளது. 50 ஆயிரம் ஓட்டு வாங்கிய ஒருவர் வெற்றி பெற்றதாகவும், 49,900 வாக்குகள் வாங்கியவர் தோல்வி அடைந்ததாகவும் கூறும் ‘பிரிட்டிஷ் மாதிரி’ தேர்தல் முறை, சமத்துவ ஜனநாயகத்துக்கு எதிரானது. நூறு வாக்குகளில் தோல்வியடைந்த ஒருவருக்கு 49,900 பேர் அளித்த வாக்குகள் பயனற்றவை எனக் கருதுவது எந்தவகையில் நியாயம்? என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் நீண்ட விவாதத்தைத் தூண்டின.
இந்நிலையில் இந்தியத் தேர்தல் சீர்திருத்தத்திற்கான அமைப்பு (CERI) Campaign for Electoral Reforms in India ஒன்று சில அரசியல் அறிஞர்களால் 2008 அக்டோபர் 10 அன்று உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பில் நாடு முழுவதும் உள்ள அரசியல் வல்லுநர்களும், சமூக சேவகர்களும் பங்கு பெற்றனர்.
அதன்படி செரி அமைப்பின் நிறுவனர் திரு.எம்.சி.ராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட அகில இந்திய குழு அமைக்கப்பட்டது. அதில் மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியும் இடம்பெற்றிருந்தார்.
இக்குழு காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொருளாளர் மோதிலால் வோரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் பிருந்தா காரத், முஸ்லிம் லீக் தலைவர் இ.அஹமது, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுல்தான் அன்வர் உள்ளிட்ட பிரமுகர்களையும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களையும் சந்தித்து விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் அவசியம் குறித்து விளக்கினர்.
கருத்துருவாக்கத்தின் முக்கிய நிகழ்வாக தலைமைத் தேர்தல் ஆணையர்களை இக்குழு வினர் சந்தித்தனர். ஏப்ரல் 13 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரம்மா ஆகிய மூவரும் இக்குழுவினரை வரவேற்று கருத்துக்களைக் கேட்டனர். இக்கோரிக்கை குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையர் சுதீர் திரிபாதி தலைமையில் அதிகாரப்பூர்வ கமிட்டியைப் போடுவதாக அறிவித்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் குரேஷி. ஏற்கனவே ‘செரி’ அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தை அவர் வெளியிட்டு, அதுகுறித்து முழு விபரங்களையும் அவர் அறிந்திருந்ததால் இம்முடிவை அவர் துரிதமாக எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாளைய மக்கள் குரலை உரிய வகையில் வெளிப்படுத்தி ஒரு கமிட்டியைப் பெற்ற மகிழ்வோடு ‘செரி’ குழுவினர் விடைபெற்றனர்.
அன்று மாலையே செரி அமைப்பு கையளித்த தேர்தல் சீர்த்திருத்த கொள்கைப் பிரகடனங்களை பிரதமரை சந்தித்து குரைஷி விளக்கியது மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. அடுத்த வாரம் செரி அமைப்பினரை கருத்துக்களைப் பதிவு செய்ய டெல்லி வருமாறு தேர்தல் ஆணைய பரிந்துரைக் குழு அழைப்பு விடுத்துள்ளது. மமகவுக்கு தனி சின்னம் வழங்க கோரும் கடிதம் ஒன்றையும் மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தேர்தல் ஆணையரிடம் கையளித்தார்.
நன்றி.மக்கள் மனசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக