குஜராத் 2002 என்றால் உங்கள் அனைவருக்கும் தெரியும். குஜராத்தைக் குதறிய கொலைக்கூட்டம் ஏறக்குறைய 3 ஆயிரம் சிறுபான்மையினரைப் படுகொலை செய்தது. கொலைப் படைக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியே தலைமை தாங்கினார் என்பது நீதியை நாடும் நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டு. குஜராத் இனப்படுகொலை 2002 என அது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஒரு
சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2012ஆம் ஆண்டில் குஜராத்தை நினைவுபடுத்துவதைப் போன்ற ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் ஜூலை 18ஆம் தேதி வெடித்தது. 28ஆம் தேதி வரை தொடர்ந்தது. முஸ்லிம் தச்சுத் தொழிலாளி ஒருவரை போடோ சமூகத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் கொலை செய்ததாகவும், அதனைத் தொடர்ந்துபதிலடியாக நான்கு போடோக்கள் கொலை செய்யப்பட்டதாக பரப்பப்பட்ட தகவலைத் தொடர்ந்து போடோக்களின் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள். ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்த வன்முறை வெறியாட்டம் மத்திய மாநில அரசு இயந்திரங்கள் மொத்தமாக செயலிழந்து விட்டதை நிரூபித்தது.
அஸ்ஸாம் வன்முறைச் சம்பவங்களை குஜராத் இனப்படுகொலையோடு ஒப்பிட்ட சமூகநல ஆர்வலர்களை காங்கிரஸ் பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இரண்டு சம்பவங்களிலும் அரசுகளின் பொறுப்பற்றத்தனமும், கொடூரமும் வெளிப்பட்டதால் இரண்டும் ஒன்றே. குஜராத் இனப்படுகொலையால் பாடம்பெற்ற நாடு உடனடியாக விழிப்படைந்ததாலும் அஸ்ஸாமிய முஸ்லிம் சமூகம் ஓரளவு சுதாரிப்படைந்ததாலும் படுகொலைகளின் எண்ணிக்கை உயரவில்லை. எனினும், வீடிழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் சிறுபான்மையின மக்களின் எண்ணிக்கை உலகையே உலுக்குகிறது.
முதல்வர் தருண்கோகய் அவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை, இவை அனைத்தையும் கண்காணித்து அசம்பாவிதங் களைத் தவிர்க்க வேண்டிய மத்திய அரசு என அனைத்துமே ஒட்டுமொத்தமாக தோல்வியை சந்தித்தன.
2002ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலைக் குப் பிறகு நாட்டில் நிகழ்ந்த மோசமான வன்முறைச் செயலாக இது கருதப்படுகிறது. இடைப்பட்ட காலங்களில் கர்நாடகாவில் கிறித்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரங் களைத் தவிர பெரிய வன்முறைகள் நிகழவில்லை.
அஸ்ஸாம் 2012 வன்முறைகள் காங்கிரஸ் அரசு மீது தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையன்று. மத்திய அரசு இந்த அவமானகரமான குற்றச்சாட்டில் இருந்து நிச்சயமாக தப்பமுடியாது. முதல்வர் தருண் கோகயால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டவுடன் அவர் உடனடியாக ராணுவத்தை வரவழைத்திருக்க வேண்டும். ஆனால் கோகய் கைகளைப் பிசைந்தபடி நின்றுகொண்டு காலம் கடந்தபின் ராணுவத்தை அழைத்திருக்கிறார். இந்த வன்முறைப் பழியில் இருந்து மத்திய அரசும் தப்பித்துக்கொள்ள முடியாது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்துதான் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது சொந்த மாநிலம் போல் கருதப்பட வேண்டிய அஸ்ஸாமில் இவ்வளவு பெரிய படுகொலைகளும், வன்முறை வெறியாட்டமும், சொத்துக்கள் சூறையாடுதலும், சொந்த நாட்டிலேயே லட்சக்கணக்கான மக்கள் அகதிகளான அவலநிலையும் கண்டு நாட்டுமக்கள் கொந்தளிக்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்கள் என்றால் வன்முறைகளில் வரலாறு படைக்கும் பகுதிகள் என்ற அவப்பெயரைப் பெற்று பல பத்தாண்டு களாகின்றன. தங்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் பல்வேறு பழங்குடியின மக்கள் அவ்வப்போது முஸ்லிம்களோடு மோதுவதுண்டு. எனினும் அது செயற்கையானதாகவும் தூண்டிவிடப் பட்டதாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளது. அன்றாடங் காய்ச்சிகளாக வறுமைச் சூழலில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களை கிள்ளுக்கீரைகளாக எண்ணி துன்புறுத்தினர் அஸ்ஸாம் பழங்குடி இன குழுக்களின் தலைவர்கள்.
இந்தியாவில் ஓடும் மிகப்பெரிய நதியான பிரம்மபுத்திரா நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நதிக்கரைகளில் லட்சக்கணக்கான முஸ்லிம் விவசாயிகளின் வாழ்வு துவம்சமாவது வாடிக்கையான ஒன்று. பிரம்மபுத்திரா வெள்ளப்பெருக்கினால் தங்கள் வாழ்விடங்களை வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் இடம்பெயரும் அவலமான சூழ்நிலை ஏற்படுகிறது. இதில் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப்படுவதால் அவர்கள் மாநிலம் முழுவதும் தங்கள் உறைவிடங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பரிதாபப்பட வேண்டிய இந்த ஜீவன்களை பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கொச்சைப்படுத்தி வேதனைப்படுத்தின அஸ்ஸாமின் அரசியல் அமைப்புகளும் மீடியாக்களும். அஸ்ஸாமிய பழங்குடி இன அமைப்புகளின் அரசியல் நிர்பந்தத்தினால் அஸ்ஸாமில் வாழும் ஏராளமான வங்காள முஸ்லிம்களுக்கு இன்றும் நிலம் வாங்கும் உரிமை உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்படும் பரிதாப நிலையில் வங்காள முஸ்லிம்கள் உள்ளனர். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே சட்டவிரோத குடியேறிகள் என கொச்சைப்படுத்தியதன் விளைவே முஸ்லிம் தச்சுத் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதும் அதனைத் தொடர்ந்து பரப்பப்பட்ட வதந்திகளும் வன்முறைகளுமாகும்.
1983ல் நெல்லியில் நிகழ்ந்த இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். உள்ளூர் இனவாத பழங்குடியினர் இதனை நடத்தினர். இந்த சோகம் ஆறாத வடுவாக அஸ்ஸாமிய முஸ்லிம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது. 1971ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் கொடும் தாக்குதலை நடத்தியது. அப்போது பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்தனர்.
ஏனென்று கேட்க நாதியற்ற நிலையில் பாதிக்கப்பட்ட அந்த மக்களை அரசியல் உள்நோக்கத்துடன் அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியைப் பரப்பியபடியே வந்தனர். மேலும் அவர்களது வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கினர். பங்களாதேஷ் அகதிகளின் மீதான பகைமைத்தீயை அனைத்து அஸ்ஸாமிய முஸ்லிம்களின் மீதும் பரப்பி, அந்தத் தீயில் அஸ்ஸாமிய அரசியல்வாதிகள் குளிர்காய்கின்றனர்.
இதன்விளைவாக கிழக்கு இந்தியா கொந்தளிக் கிறது. அவலநிலையில் ஆழ்ந்திருந்த அஸ்ஸாமிய முஸ்லிம்களின் அல்லலை அகற்ற ‘அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி’ உருவானது. மவ்லவி பத்ருதீன் அஜ்மல் தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று 10 இடங்களைப் பெற்றது. நாடாளுமன்றத்தில் இரு இடங்களைப் பெற்றது. பல்சமய நல்லிணக்க அமைப்பாக விளங்கிய அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆக்கப்பூர்வப் பணிகளுக்கு தற்போது நிகழ்ந்துள்ள வன்முறைகள் நிச்சயம் ஒரு சவால்தான்.
நடைபெற்ற வன்முறைகளுக்கு போடோ தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front of Bodoland) பொறுப்பேற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. 50 கிராமங்களை நெருப்பிட்டுக் கொளுத்திய கூட்டம் நான்கு மாவட்டங்களை ஆட்சி செய்வது எவ்வளவு அவமானகரமானது. இதனிடையே பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் அஸ்ஸாமில் வன்முறை பாதித்த பகுதிகளுக்குச் சென்றதோடு நிவாரணத் தொகையையும் அறிவித்தனர்.
கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில் இத்தகவலை வெளியிட்ட பிரதமர் மன்மோகன்சிங் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். கடுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும், ஓரளவு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக அறிவித்தார். குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளித்திருக்கிறார் மன்மோகன்சிங். முஸ்லிம் பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். ஜமியத்தே உலமாயே ஹிந்தின் பொதுச்செயலாளர் மஹ்மூத் மதானி தலைமையில் அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைசி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்ற குழு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டறிந்தது.
மத்திய மாநில அரசுகள் எடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்ல மன உறுதியை வழங்கும் என குழுவினர் தெரிவித்தனர். இதுவரை 3 லட்சத்து 78 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் காவல்துறைத் தலைவர் ஜெ.என். சவுத்ரி தெரிவிக்கிறார். இதில் பெருமளவு அதாவது 2,66,700 பேர் முஸ்லிம்கள் ஆவர். மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் 235 நிவாரண முகாம்கள் உள்ளன.
அஸ்ஸாமில் இருந்து ஆதரவு தேடிவரும் வங்காள மொழிபேசும் மக்கள் அனைவரும் எங்கள் சகோதரர்கள் ஆவர். இவர்களை யாராவது பிரிவுபடுத்தி களங்கப்படுத்தினால் சும்மா விடமாட்டோம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். அந்த மக்கள் விரும்பும் வரை மேற்கு வங்காளத்தில் வாழலாம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
ஆனால் இங்கு அவசியம் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று உள்ளது. அஸ்ஸாமின் வங்காள மொழி பேசும் மக்களின் பிரச்சனை இன்றுவரை முழுவதுமாக தீர்க்கப்படாமல் இருப்பதற்கு போடோ இனவாதக் குழுக்கள் மட்டும் காரணம் அல்ல. பல ஆண்டுகளாக அஸ்ஸாமையும், மத்தியையும் ஆண்டுவந்த காங்கிரசும், கால்நூற்றாண்டுகளாக மேற்கு வங்காளத்தை நிர்வகித்த இடதுசாரிகளும் முக்கியக் காரணிகளாக உள்ளனர். இவர்கள் உண்மையான அக்கறையுடன் எப்போதோ தீர்வு கண்டிருக்க முடியும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும். அஸ்ஸாமில் நான்கு பிராந்தியங்களில் செயல்படும் போடோலேண்ட் டெரிடோரியல் கவுன்சிலை உடனடியாகக் கலைக்க வேண்டும், செயல்திறன் இல்லாத உள்நோக்கம் கொண்ட முதல்வர் தருண் கோகயை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும், நடுநிலையான நீதிவிசாரணை ஆணையம் ஏற்படுத்தி மூன்று மாதத்திற்குள் அறிக்கை வெளியிடப்பட வேண்டும். பந்தாடப்படும் வங்காள முஸ்லிம்களின் துயரம் துடைக்கப்பட வேண்டும் அதற்கு எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவோம்.
--- அபுசாலிஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக