அமெரிக்க கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு அற்ப இழப்பீட்டை பெற்று வழங்கிய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜவாஹிருல்லா வெளியிடுட்டுள்ள அறிக்கையில்…
துபாயில் கடந்த ஜுலை 16 அன்று அமெரிக்கப் போர் கப்பலான ரேப்பஹன்னோக் சுட்டதில் பலியான எனது தொகுதியைச் சேர்ந்த மீனவர் சேகர்
எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் துபாயில் ஜபல் அலி துறைமுகம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அமெரிக்க கடற்படையினரால் மனிதாபிமானமில்லாமல் சுடப்பட்டுள்ளார்கள். அமெரிக்க கடற்படையினர் இந்த சம்பவத்திற்கு நியாயம் கற்பிப்பதுப் போல் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களின் படகுகள் தங்களை நோக்கி வேகமாக வந்ததாகவும் தாங்கள் எச்சரித்தாகவும் இதன் காரணமாக தான் தாங்கள் சுட்டதாகவும் கூறியது முற்றிலும் தவறானது என்று துபாய் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் தலைமை அதிகாரி தாஹி கல்பான் தமீம் தமிழக மீனவர்கள் இருந்த படகு அமெரிக்க கடற்படை கப்பலை நோக்கி வேகமாக செல்லவில்லை என்றும் எவ்வித எச்சரிக்கையையும் இந்த படகிற்கு அமெரிக்க கடற்படை செய்யவில்லை என்றும் தங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மிக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே தமிழக மீனவர் சேகர் திட்டமிட்டே அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள்.
கடந்த பிப்ரவரி 15 அன்று கேரளா கடல் பகுதியில் இத்தாலியின் வர்த்தக கப்பலான என்ரிக லக்சியில் இருந்து பாய்ந்த குண்டுகள் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களின் உயிரை மாய்த்தது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் கேரளா அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இத்தாலி அரசிடமிருந்து தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக பெற்று தந்ததுடன் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கையும் மேற்கொண்டது.
இதற்கு நேர்மாற்றமாக அமெரிக்க அரசின் எடுபிடியாக மாறி அற்ப தொகையாக இறந்த சேகர் குடும்பத்திற்கு ரூ5 இலட்சமும் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ50 ஆயிரமும் அமெரிக்காவின் சார்பாக தமிழக அரசு நேற்று ரகசியமாக வழங்கியுள்ளது வேதனைக்குரியது, வெட்க கேடானது. கேரளா அரசு இத்தாலி கொலையாளிகள் விவகாரத்தில் நடந்துக் கொண்டதுப் போல் நடக்காமல் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு தமிழக அரசு வெஞ்சாமரம் வீசியுள்ளது ஏற்புடையது அல்ல.
துபாய் அரசே இந்த விவகாரத்தில் அமெரிக்க கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் சொந்த மாநில அரசு அமெரிக்காவிற்கு அடிபணிந்து இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தோப்பு வலசை சேகர் குடும்பத்திற்கு ரூ 5 கோடியும் காயமடைந்த மூன்று மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ1 கோடியும் பெற்று தர தமிழக முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக