லைலதுல் கத்ர்
இந்த ரமளான் மாதத்தில் அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலத்துல்கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் அறிவிக்கின்றான்.
(1) திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) கண்ணியமிக்க இரவில் இறக்கிவைத்தோம்.
(2) கண்ணியமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா?
(3) கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.
(4) அதில் மலக்குகளும் ஜிப்ரீலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்து கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகிறார்கள்.
(5) அந்த இரவு முழுவதும் நலம் மிக்கதாகத் திகழும்., விடியற்காலை உதயம் வரையில்!
(அல்குர்ஆன் 97:1,5)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்த பொழுது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் வருகை தந்து குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை இறக்கியருளியது இந்த இரவில்தான்.
யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரதுமுந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்'' ( புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியே வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி, அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
இந்த இரவில் ஒரு மனிதன் வாய்மையுடனும் மன ஓர்மையுடனும் முழு ஈடுபாட்டுடனும் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டால் ஆயிரம் மாதங்களுக்கு ஈடான நற்கூலியை அல்லாஹ் அவனுக்கு வழங்குகிறான்.
மேலும் இந்த இரவில் ஏனைய மலக்குகளுடன் ஜிப்ரீலும் சிறப்பான முறையில் பூமிக்கு வருகை தருகிறார்கள். நன்மை மற்றும் சாந்திக்குரிய விஷயங்களையும் நம்பிக்கையாளர்களுக்கான பிரார்த்தனைகளையும் ஏந்திக்கொண்டு வருகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள்
நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.
லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:
அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள்
اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி
லைலத்துல் கத்ர் இரவுகளில் நம் பிரார்த்தனைகளை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நம்முடைய தேவைகளையும் ,செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும் அதிகமாக இறைவனிடம் கேட்டு அழுது மன்றாட வேண்டும், எல்லாம் வல்ல அருளாளன் நம் அனைவருடைய நல் அமல்களை ஏற்றுக் கொள்வானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக