மத இழிவு கூடாது
உணர்வுகளில் மிக மென்மையானது சமய உணர்வு. எளிதில் தூண்டப்படுவது; உணர்ச்சிகளை விரைவாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கலவரங்களைத் தூண்டும் சக்தி படைத்தது.எனவே சமயங்களைப் பழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.(பார்க்க குர்ஆன் 6:108)..
மறுப்பதும் மதிப்பதும்
சமயங்களுக்கு இடையில் கருத்து ஒற்றுமைகளும் உண்டு’ வேற்றுமைகளும் உண்டு. கருத்து வேறுபாடு கொள்வதற்கும், கருத்துகளை ஏற்க மறுப்பதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு. எம்மதமும் சம்மதம் என்று ஒரு கருத்து பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தைச் சொல்பவர்களின் நோக்கம் தூய்மையானது.ஒற்றுமை, நல்லிணக்கம்,மனித நேயம் ஆகியவற்றை மலரச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கருத்தைக் கூறி வருகிறார்கள். ஆனால் அடிப்படை விடயங்களிலேயே சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.
இறைக்கோட்பாடு, மனிதன் பற்றிய கோட்பாடு, நன்மை-தீமை பற்றிய விளக்கங்கள், இறப்புக்கு பின்னுள்ள நிலை ஆகியவை பற்றி சமயங்களுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. அதே வேளையில் ஒழுக்கம்,மனிதநேயம் போன்ற விடயங்களில் ஒத்த கருத்துகளும் காணப்படுகின்றன. எனவே எம்மதமும் சம்மதம் எனக் கூறுவதை விட. ‘எம்மதமும் மரியாதைக்குரியது ‘Respect For all religions’ எனக் கூறுவதே உண்மைக்கு நெருக்கமானது எவராலும் பின்பற்றக் கூடியது. எனவே எல்லா சமயங்களையும் மதிப்போம் என்ற உணர்வே அமைதிக்கு வழிவகுக்க கூடியது.
விமர்சனம் வேறு; இழிவுபடுத்துவது வேறு!
சமயங்களை பழிப்பது தவறு; விமர்சனம் செய்வது தவறல்ல. உணர்வுகளைத் தூண்டாத வகையில், இழிவுபடுத்தும் நோக்கமின்றி அறிவுப் பூர்வமான விமர்சனங்களைச் செய்வது தடை செய்யப்பட்டதல்லஎந்த கொள்கையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.
“நபியே! விவேகத்துடனும் அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும் மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக!” (குர்ஆன் 16: 125)
சமயங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை; எனவே விமர்ச்னமே கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். இது அறிவுத் தேக்கத்திற்கும், சமயங்களின் பெயரால் செய்யப்படும் அநீதிகள் நீடிக்கவுமே துணைபுரியும். இன்னொரு பிரிவினரோ ‘ என் கடவுளை இழிவுபடுத்துவதே’என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றனர். மக்களை மோதவிட்டு, பிரிவினைகளை ஏற்படுத்தி வகுப்புவாதத்தை வளர்ப்பதே இவர்களின் நோக்கம்.
தாம் சார்ந்திருக்கும் சமயத்தின் சிறப்புகளைச் சொல்லி, மக்களை நேர்வழிப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை இல்லாத இவர்கள்,எதிர்மறையாகச் சிந்தித்து செயல்பட்டுப் பழகிப் போனவர்கள்.இவ்விரண்டு நிலைகளுமே ஆபத்தானவை.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதையும் எழுதுவது, பேசுவது சமூக அமைதியைக் குலைக்கும். எல்லாவகைச் சுதந்திரங்களும் வரையறைக்கு உட்பட்டவையே! உடையின்றி உலா வருவதை மனித உரிமை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கனவன் மனைவியாக இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் செய்யும் காரியத்தை நடுத்தெருவில் செய்வதை எந்தச் சட்டமும் அனுமதிக்காது. சாலையில் விரும்பியபடி வாகனம் ஓட்ட சாலை விதிகள் அனுமதிக்காது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசாங்க இரகசியத்தை வெளியிட மாட்டார்கள். நாட்டின் நலன் கருதி இராணுவ இரகசியங்கள் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும்.
‘பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் தம் மனசாட்சிப்படி சுதந்திரம் உடையவர்கள், என்றே இந்திய அரசியல் சாசனம் 25(1) பிரிவு கூறுகிறது. எனவே முழுமையான சுதந்திரம் என ஒன்று கிடையாது. ஆகவே கருத்துச் சுதந்திரம் எனும் ஆயுதத்தை கவனமாகவும் பொறுப்பு உணர்வோடும் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சீர்திர்த்தம் ஏற்படுவதற்குப் பதிலாக சீர்குலைவே ஏற்படும்.
. தன்னுடைய மதத்தை இழிவுபடுத்தி எழுதப்பட்ட நூலைத் தடை செய்ய வேண்டும் என்கிறான்; ஆனால் பிற மதங்களைத் தாக்கி எழுதப்பட்ட நூல்களை தடை செய்யாதே-அது கருத்துச் சுதந்திரத்தில் கை வைக்காதே என்கிறான்.
. தன்னுடைய சமுதாயம் கொடுமைக்கு உள்ளானால் வன்முறை, கொடூரம், மனித உரிமை மீறல் எனக் கூக்குரல் இடுகிறான். ஆனால் பிற சமூகங்கள் அநீதிக்கு உள்ளானால் மெளனமாக இருக்கின்றான். அல்லது ஒரு படி மேலே போய், இது அவர்களுக்குத் தேவைதான்; நல்ல பாடம் என்கிறான்.
. தன்னுடைய மதத்தில் பிடிப்புள்ளவர்களை ‘ஆன்மீகவாதி’ என்கிறான். ஆனால் பிற மதப் பற்றாளர்களை அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள்,பத்தாம் பசலிகள் என்கிறான்.
. தன்னுடைய மதம் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்யப்பட்டால் ‘ஆன்மீகம் தழைக்கிறது’ என்கிறான். வெளிநாட்டில் தோன்றி மதம் தன் நாட்டில் வந்தாலோ ‘அந்நியமதம் அந்நியக் கலாச்சாரம், என்கிறான்.
. தன்னுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை போராளிகள், விடுதலை வீரர்கள் என்கிறான். ஆனால் மற்றவர் செய்தால் ‘பிரிவினைவாதி, பயங்கரவாதி’ என்கிறான்.
. ஒரே வகையான குற்றம்! ஆனால் ஓர் இனத்தவருக்கு அதிக தண்டனை; இன்னோர் இனத்தவருக்கு குறைந்த தண்டனை மூன்றாவது இனத்தவர்க்கோ விடுதலை!
. ஒரே மாதிரியான வேலை. ஒருவருக்கு அதிக கூலி; மற்றவர்க்கு குறைந்த கூலி
இத்தகைய இரட்டை நிலைகள் சமூகத்தின் அமைதியைக் குலைக்கும். மதம்,மொழி,இனம்,நாடு,பால் ஆகியவற்றின் அடிபப்டையிலும், உறவு, நட்பு, விருப்பு வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் வேறுபாடுகளை காட்டுவது அமைதியை ஆழமாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும். இன்று உலகில் (பதிவுலகில்) நிலவும் பல குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் முக்கிய காரணமாகும்.
எங்கே அமைதி என்கிற புத்தகத்திலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதியிலிருந்து இந்த கட்டுரையை எடுத்திருக்கிறேன் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் குறிப்பாக பதிவுலகில் உள்ள நண்பர்கள் படிக்க வேண்டிய நூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக