அதன் மீது பேசிய பல எம்.பி.க்கள், ‘நாலணா’ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்த 25 காசு நாணயத்தை செல்லாது என்று சமீபத்தில் அறிவித்ததற்கு கவலை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘‘பொருளாதார நிலை மாறி விட்டது. நாணய மதிப்பு குறைந்து வருகிறது. அதற்கேற்ப எடுக்கப்பட்ட ஒரு முடிவு இது. எனவே, அதை ஏற்பதை தவிர வழியில்லை’’ என்றார். விவாதத்தில் மேலும் அவர் பேசியதாவது:
நாணயங்கள் அச்சடிப்பதற்கான தொகை உச்சவரம்பு 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.1,000 நாணயம் கூட அச்சடிக்கலாம். எனினும், இப்போதைக்கு அது ஒரு அனுமதியாக மட்டுமே நாணயங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள 10 லட்சம் கரன்சி நோட்டுகளில் 8 வரை கள்ள நோட்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு வெளியிடுவோர், நாணயங்களை உருக்குவோருக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். இவ்வாறு பிரணாப் கூறினார்.
நாணயங்கள் சட்டத்தில் கரன்சி நோட்டு மற்றும் நாணயங்கள் அச்சடிப்பதை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ், பா.ஜ. உட்பட அனைத்து கட்சி எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த பிரணாப், ‘‘கரன்சி அச்சடிப்பு நம்நாட்டின் தேசிய கவுரவம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். 1997&98ல் கரன்சி அச்சடிப்புக்கான இங்க் உலக அளவில் 2, 3 நிறுவனங்களே தயாரித்ததால் வெளிநாடுகளில் அச்சடித்து பெறப்பட்டது. கரன்சி அச்சடிக்க தேவையான தரமான காகித தயாரிப்பில் தன்னிறைவு பெற அரசு முயற்சிக்கும்’’ என்றார்.
இப்போது ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, நொய்டா ஆகிய கரன்சி அச்சடிப்பு மையங்களில் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களை மத்திய அரசு அச்சடித்து வருகிறது. 1,000 ரூபாய் நாணயம் வெளியிட புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள போதிலும், அது எப்போது அறிமுகமாகும் என அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி.தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக