சென்னையின் மிகப் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். பின்னர் உரிமையாளர்களான சகோதரர்களுக்குள் பிளவு வந்தது. இதையடுத்து புதிதாக சரவணா செல்வரத்தினம் என்ற பெயரில் தனிக் கடையும் முளைத்தது. தி.நகர் வர்த்தகத்தில் இவர்களின் பங்குதான் மிகப் பெரியது என்று கூறும் அளவுக்கு விஸ்வரூப வளர்ச்சியைக் கண்டனர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்.
சென்னைக்கு வரும் பிற மாவட்டத்தினர், வெளிமாநிலத்தவர் பீச்சைப் பார்க்கிறார்களோ இல்லையோ, சரவணா ஸ்டோர்ஸுக்குப் போவதை வாடிக்கையாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு பிரபலமானது இந்த நிறுவனத்தின் கடைகள்.
இந்த நிறுவனம் தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலை கிட்டத்தட்ட 500 வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா கடைகளின் அனைத்துக் கிளைகளையும் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர். அன்று காலை தொடங்கிய ரெய்டு கிட்டத்தட்ட 48 மணி நேரம் நீடித்தது. 2 நாட்கள் நடந்த இந்த அதிரடி சோதனையால் இரு நாடுகளும் சரவணா ஸ்டோர் கடைகள் அனைத்தும் விற்பனையை நிறுத்தின. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த அதிரடி ரெய்டு.
இந்த ரெய்டு குறித்து வருமானவரித்துறை தற்போது விவரங்கள் தெரிவித்துள்ளது. 2 நாட்கள், 27 இடங்களில், 500 அதிகாரிகள் சேர்ந்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. நிறுவனங்களில் உள்ள இருப்புகள் குறித்த கணக்கெடுப்பு மட்டும் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் ரூ. 150 கோடி மதிப்பிலான நகை, பணம் சிக்கியுள்ளது. இவற்றை ரகசியமாக பதுக்கி வைத்திருந்தனர். இதற்குக் கணக்குகள் இல்லை. இவை குறித்து கணக்கு கேட்டபோது கடை உரிமையாளர்களால் சரியான ஆவணங்களையோ அல்லது விளக்கத்தையோ தர முடியவில்லை.
ஒரே இடத்தில் மட்டும் ரூ. 15 கோடி பணத்தையும், ரூ. .3.5 கோடி மதிப்புள்ள நகைகளையும் பதுக்கி வைத்திருந்தனர்.
சோதனைக்குப் பின்னர் நிறுவனத்தின் 15 குடோன்களை மூடி சீல் வைத்துள்ளோம். கடைகள் குறித்த முழுமையான ஆய்வை முடிக்க ஒரு மாத காலமாகும். அதற்குப் பின்னர் எந்த அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்பது தெரியும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
கடை உரிமையாளர்களின் 7 வீடுகளையும் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அடுத்து கடை உரிமையாளர்கள், கடைகளின் வங்கிக் கணக்குகளை சோதனையிடவும், வங்கி லாக்கர்களைத் திறந்து ஆய்வு செய்யவும் வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது.
நன்றி. யுஎம்என் சர்வதேச செய்திப்பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக