பொதுவாக பெண்களின் கர்ப்ப காலங்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்-. முதல் மூன்று மாதங்கள், நடு மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள்.
இதில் முதல் மூன்று மாதங்கள் கஷ்டமான நாட்களாகும். வாந்தி, மயக்கம், குமட்டல் போன்றவை அதிகமாக இருக்கும். இந்நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று எண்ணினால் அவர்கள் சில தற்காப்புகளை கடைபிடிக்க வேண்டும்.
பகல் நேரங்களில் அதிகமாக ஓய்வெடுக்க வேண்டும். து£க்கத்தின் மூலமாகவோ, அமைதியாக இருப்பதன் மூலமாகவோ ஓய்வினை மேற்கொள்ள வேண்டும்.
வேலைகளுக்குச் செல்பவர்களாக இருந்தால், ஒரு பக்கம் வேலைக்கு சென்று கொண்டு, ஒரு பக்கம் வாந்தியும் எடுத்துக் கொண்டு, ஒருபக்கம் நோன்பு வைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான காரியமாகும். அதனால் இது போன்ற சமயங்களில் அவர்கள் அதிகளவு ஓய்வெடுக்க முயற்சிக்க வேண்டும். நோன்பு துறந்தவுடன் எண்ணெய் பலகாரங்களை சாப்பிடக் கூடாது. அதற்கு பதிலாக பால், தண்ணீர், ஜூஸ் போன்றவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோன்பு துறந்ததில் இருந்து ஸஹர் நேரம் வரை அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர், பால் போன்றவற்றை குடிக்க முடியாமல் அந்த நேரத்தில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தால் நோன்பினைத் தொடர்வது கடினமானதாகும்.
கொழுப்புச் சத்துள்ள பொருட்களை உட்கொள்வதை கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லதாகும். கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நோன்பு துறந்தவுடன் அந்த இடைப்பட்ட நேரங்களில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகமாகக் குடிக்காமல் இருந்தால் ‘கான்ஸ்டிபேஷன்’ அதாவது சிறுநீரகம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படலாம்.
சிலர் காலையில் எழுந்தவுடன் எதுவும் சாப்பிடாமல் ஸஹர் வைத்து நோன்பைத் தொடருவார்கள். இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்புடையதல்ல. ஏனென்றால் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கர்ப்பிணிப் பெண்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமென் றால் அதற்கவர்கள் ஈடுசெய்யும் விதமாக நோன்பு துறந்த தில் இருந்து ஸஹர் வரை தண்ணீர், உணவு போன்றவற்றை சாப்பிட்டு சரி செய்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இதுவரை கூறியவை சாதாரணமாக வேறு எந்தப் பிரச்சினையும் இல்லாத கர்ப்பிணிப் பெண்கள் நோன்பு சமயங்களில் பின்பற்றக்கூடியவைகளாகும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சர்க்கரை நோய் அல்லது முந்தைய நாட்களில் வளர்ச்சி குறைவாகவோ அலலது எடை குறைவாகவோ குழந்தைகள் பிறந்திருக்கலாம். இத்தகைய தாய்மார்கள் கருவுற்றிருந்தால் அவர்களுடைய மருத்துவ ஆவணங்களை கொண்டு சென்று அவர்களின் மருத்துவரிடம் அணுகி நோன்பு வைப்பதைப் பற்றி ஆலோசனை பெறுவது நல்லது.
நோன்பு வைப்பதற்கு உடல் ரீதியான காரணங்களை விட மன ரீதியான காரணங் களே மிகுந்த பங்காற்றுகின்றன. நாம் நோன்பு வைக்க வேண்டும் என்று துஆ செய்து மனரீதியாக நம்மை நாமே தயார்படுத்திக் கொண்டால் (இன்ஷா அல்லாஹ்) நாம் வாந்தி, மயக்கங்கள் நமக்குக் குறைந்து முழுமையாக நோன்பினை நிறைவேற்ற முடியும்.
அடுத்ததாக, கர்ப்ப காலங்களில் நடுவில் உள்ள நான்கு & ஐந்து & ஆறாவது மாதங்கள்-… இந்த காலங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி, மயக்கம் போன்றவை குறைய ஆரம்பிக்கும். வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவினை கர்ப்பிணிப் பெண்கள் உணர ஆரம்பிப்பார்கள். இவை அனைத்தும் மகிழ்ச்சியான சூழ்நிலையினை உருவாக்கித் தரக்கூடிய நிலைகளாகும். இந்த நிலையில் உள்ள கர்ப்பினிப் பெண்கள் தாராளமாக நோன்பினை வைக்கலாம். நோன்பு துறக்கும் பொழுது மட்டும் அதிகளவில் தண்ணீர் மற்றும் பழ வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடைசி காலங்களாக இருக்கக்கூடிய ஏழு & எட்டு & ஒன்பது ஆகிய மாதங்களில் கர்ப்பிணிப் பெண்கள் நோன்பு வைப்பதில் எந்தவொரு பெரிய கஷ்டமும் ஏற்படாது. இவர்கள் நோன்பு திறந்தவுடன் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எட்டு மாதக் குழந்தை வயிற்றில் இருப்பதால் சிறிது சாப்பிட்டாலும் கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டுக் கொண்டு ஜீரணிக்க முடியாமலும், படுக்க முடியாமலும் கர்ப்பிணிகள் கஷ்டப்படுவார்கள். எனவே இந்த மாதங்களில் சிறிது, சிறிதாக உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸஹர் நேரங்களில் 5 நிமிடத்திற்கு முன்னும், 10 நிமிடத்திற்கு முன்னும் எழுந்து அவசர அவசரமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுந்து முதலில் சிறிய அளவிலான உணவையும், சிறிது இடைவெளி விட்டு மறுபடியும் சாப்பிடுவதன் மூலம் மூச்சுத் திணறல் போன்றவற்றை தவிர்க்கலாம். இவர்கள் அதிகமான தண்ணீர் பருக வேண்டும்.
Urinary Tract Infection என்பது எந்தக் காலங்களிலும் ஏற்படலாம். அதாவது முதல் மூன்று, நடு மூன்று அல்லது இறுதி மூன்று மாதங்களில் எந்த மாதங்களில் வேண்டு மானாலும் ஏற்படலாம். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு Urinary Tract Infection அடிக்கடி ஏற்படுகிறது என்றால் அவருக்கு குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக நோன்பு வைக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக தண்ணீர் மற்றும் பழ வகைகளை உட்கொள்ளுவதே சிறந்ததாகும்.
-டாக்டர். ஜுலைஹா அஜ்மல் (பெண்கள் சிறப்பு மருத்துவர்)
தகவல் : மஸுதா ஆலிமா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக