நிறைய பணம் இருந்தால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடைந்துவிட முடியும் என்று நிறைய பேர்கள் தப்புக்கணக்கு போட்டு வருகிறார்கள்.
பணத்தைக் கொண்டு அடைய முடியாதவைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன.
பணம் ஒருவனுடைய அறிவை வளர்க்காது. பணக்காரன் பணத்தை அள்ளி வீசி இந்த உலகத்தில் இருக்கும் நல்ல புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி தன் வீட்டில் அடுக்கி வைக்க முடியும். எண்ணற்ற புத்தகங்களின் சொந்தக்காரன் என்பதற்காக அவனுடைய அறிவு கூடிவிடுவதில்லை..
ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, எவன் நிறைய நல்ல நூல்களை ஆர்வத்துடன் ஆழ்ந்து நிறைய நேரம் படித்து அவைகளில் இருக்கும் கருத்துக்களைப் புரிந்துகொள்கிறானோ, அவன்தான் அறிவு நிறைந்தவனாக உருவெடுக்க முடியும்.
பணத்தைக் கொண்டு இந்த உலகத்தில் இருக்கும் அழகு சாதனங்கள், விலையுயர்ந்த உடைகள் போன்றவைகளை வாங்கி உபயோகப்படுத்துவதினால் மட்டும் ஒருவன் கம்பீரமான தோற்றத்தைப் பெற்றுவிட முடியாது. நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற குணங்களை வளர்த்துக்கொண்டு, சுயநலம் கலக்காத சேவை மனப்பான்மையோடு, மனித குல முன்னேற்றத்திற்காக உழைப்பவன்தான், மற்றவர்களைக் கவரும் கம்பீரமான தோற்றத்தைப் பெற முடியும்.
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமென்று வெறிகொண்டு, சரியாக ஓய்வெடுத்துக் கொள்ளாமலும், குறித்த நேரங்களில் நல்ல உணவை உட்கொள்ளாமலும் பலர் அங்கும் இங்கும் சுற்றி கடினமாக உழைத்து வருகிறார்கள். 'இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும்' என்ற ஏக்கம் கரையானைப் போன்று இவர்களுடைய உள்ளங்களை அழித்து வருவதை காலம் கடந்த பின்தான் உணருகிறார்கள்..
நிவாரணமே காண முடியாத பல பயங்கரமான வியாதிகள் அட்டைகளைப் போன்று பீடித்துக்கொண்டு இவர்களை பயங்கரமாக உலுக்க ஆரம்பித்துவிடுகின்றன. பணத்தைக் கொண்டு ஒருவன் பெரிய மருத்துவ இல்லங்களில் தங்கி பெரிய மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற முடியும். உலகத்தில் இருக்கும் விலையுயர்ந்த மருந்துகள் அனைத்தையும் வாங்கி உட்கொள்ள முடியும்.
ஆனால் பணப் பேராசை பிடித்து அலைபவன் சரியான வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றாத காரணத்தினால், அவன் சாப்பிட்டு வரும் மருந்துகளுக்கு அவன் இழந்த ஆரோக்கியத்தை மீட்டுக்கொடுக்கும் சக்தி இல்லாமல் போய்விடுகிறது.
பணத்தை அள்ளி அள்ளி தந்து மற்றவர்களுடைய மதிப்பையும், விசுவாசத்தையும் விலைக்கு வாங்க முடியாது. அனைவரையும் உள்ளன்புடன் நேசித்து மனித்த் தன்மையுடன் நடந்துகொள்ளும் போதுதான், நாம் அவர்களுடைய மதிப்பையும், விசுவாசத்தையும் பெற முடியும்.
பணத்தின் உதவியைக்கொண்டு, மற்றவர்களிடமிருந்து மரியாதையைப் பெற முடியாது. சுயநலத்தின் கலப்படம் சிறிதுகூட இல்லாமல், மனித இனத்திற்கு சேவை செய்து வருபவனுக்குத்தான், மக்கள் மரியாதையைத் தருவார்கள்..
என்பது என்னுடைய எண்ணம். என்னுடைய எண்ணம் மட்டுமல்ல உண்மையுங்கூட..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக