அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
15 டிசம்பர், 2011
மக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம்
இந்தக் காலைநேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்காட்சியைத் திருப்பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்குகின்றன நமது சானல்கள். பொதுவாக, ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை குடும்பத் தலைவிகளுக்கு இருப்பதுண்டு. இந்தக் கவலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அவர்களது அறியாமையையும் நம்பிக்கையையும் காசாக்க முயல்கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீரவேண்டுமா? இந்தக் கல்லை வாங்குங்கள், அந்தக் கவசத்தை வாங்குங்கள் என்று சானல்களில் ஜோராகக்களை கட்டுகிறது இந்த நம்பிக்கை வியாபாரம். காசு ஒன்றே குறி என்கிற உன்னதமான குறிக்கோளோடு, கண்ணை மூடிக்கொண்டு சானல்களும் இதற்குத் துணை போவது கொடுமையிலும் கொடுமை!
விஜய் தொலைக்காட்சியில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்காக வரும் நகைக்கடைக்காரர், போகரின் பாஷாணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்கமாக மாறுவது (தெரிந்தால் இவரே தங்கம் தயாரிக்க வேண்டியதுதானே!) என்பது போன்ற ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்புப்படுத்திப் பேசியும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்யூச்சராலஜி, நியூமராலஜி என்று ஏகப்பட்ட ‘லஜி’களைக் கூறியும், ஏற்கெனவே குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.
உங்கள் ஜாதகத்துடன் நகைக்கடைக்குள் செல்வது, மாஸ்டர் செக்கப்பிற்காக மருத்துவமனைக்குச் செல்வதைப் போன்றது என்று தனது வியாபாரத்திற்கு வலு சேர்க்கும் இவர் சொல்ல வருவது என்னவென்றால், ‘எங்கள் கடையில், நாங்கள் கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணியுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்’ என்பதுதான். கல் ஒன்று, மாங்காய் இரண்டு என்பது பழமொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்துகொண்ட புதுமொழி!
அதிர்ஷ்டக்கல் வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துவிட்டுச் சென்றவுடன் அந்த இடத்தை விரைந்து நிரப்புகிறார் கடவுள் பெயரில் கவச விற்பனை செய்யும் சாமியார் வேடமிட்ட ஒரு வியாபாரி. செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்கிய வாழ்வு ஆகியவற்றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலிருந்து காப்பது, வழக்குகளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப பலன்களையும் நல்குகிறதாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவனிக்க). குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக் கட்ட முடியாத நிலையில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்கிய பின்னர் (கவசம் வாங்க மட்டும் காசு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை!) செல்வச் செழிப்பில் திளைப்பதாகப் பேட்டியும் உண்டு.
இதைத் தொடர்ந்து – கண் திருஷ்டியிலிருந்து காக்கும் மெகா சுரக்ஷா கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளிலும் குரானிலும் கூடக் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்திற்கு வலு சேர்த்தார்கள் இந்நிகழ்ச்சியில். கல்யாணமாகாத பெண்கள் இதை வாங்கினால் உடனே திருமணம் நிச்சயமாகுமாம் (பலனடைந்தவரின் பேட்டியும் உண்டு). இத்தனைக்குப் பிறகும் நீங்கள் ஏமாளியாகாமல் இருந்தால் ஆச்சரியம்தான்!
நிச்சயமாக என்றேனும் ஒருநாள், இவையெல்லாம் மாறக்கூடும்… இந்த தொலைக்காட்சி வியாபாரிகளிடம் சிக்காத நாள் கூட வரலாம்… நம்புங்கள்…!
நன்றி: சின்ன சின்ன ஆசை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக