“கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.“இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.
1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர்.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.
“30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.
“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு.
3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன.
“திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை.
புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, “குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார்.
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன.விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்” என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன்.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார்.அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை.
கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார்.
முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.
திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது.
“விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள்.
அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
“சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.” இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
“விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு.
இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய்.
செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள்.
‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.
காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு.
அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
‘உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை.
1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.
இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.
“மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள்.
“முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்!
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது.
அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
“நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக