எதிரியையும் நண்பனாக்க |
முதலில் எதிரி என்றால் யார் என்று பார்ப்போமா!
நமது முகம் கண்ணாடி இல்லாமல் நமக்குத்தெரியாது . அதுபோலவே நமது முதுகும் நமக்குத் தெரியாது. ஆனால் நம் எதிரில் உள்ளவர்களுக்கு நம்முடைய முதுகும் முகமும் நன்கு தெரியும்(எதிரியாக இருந்தாலும் ) .
அவர்தான் நமது முகத்தில் "ஓ எண்ணை ஒட்டியுள்ளது! அதை துடையுங்களேன்" என்பார். "முதுகில் பூச்சி இருக்கிறது அதை தட்டி விடுங்களேன்" என்பார்.
எனவே, நமது ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி முழுமையாக அறிய இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது. நண்பனும் எதிரியும் ஒரேமாதிரிதான். இருவருமே நம்மைப் பற்றி நன்கு அறிந்தவர்களே..!!
இருவருக்கும் உள்ள வித்தியாசம் - நண்பன் என்றால் நமது நல்ல குணங்களைப் பெரிதுப்படுத்தியும், தீய எண்ணங்களை குறைவுப்படுத்தியும், நம்முடன் உறவாடுவான்.
ஆனால் எதிரியோ, நமது நல்லகுணங்களை குறைவுபடுத்தி அல்லது ஒதுக்கி விட்டுவிட்டு, தீய குணங்களை மிகைப்படுத்தி, நம்மை வாழ்க்கைப் போராட்டத்திற்கு தூண்டுபவன்.
எதிரியை கண்ணாடியாக்க் கொண்டு, நமது குறைகளையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.
நமது உடம்புக்கு ஆரோக்யம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று நோயும் அவசியம். நோய் என்றால் என்ன? நமது உடம்பில் இந்த இடம், உறுபு பழுதடைந்துள்ளது. அதை உடனே நிவர்த்தி செய்து கொள்க! என்று நமது உடல் கஒடுக்கும் ஒரு SIGNAL தானே.
நோய் மட்டும் இல்லையென்றால் என்னவாகும்? உடலின் உறுப்புகள் (கண், கால், போன்றவை) தாமே தேய்ந்து, புதுப்பிக்க முடியாமல் காலப்போக்கில் அந்த உறுப்பிற்கே ஆபத்து வந்துவிடுமல்லவா
அதே போன்று நம்மை நன்றாக அறிந்தவன் நமது எதிரியே! நமது பலவீனங்களை, நம்மைவிட அறிந்தவன் அவனே! எதிரி மூலம்தான், நமது பலவீனங்களை அறிந்துகொண்டு, மாற்று ஏற்பாடுகள் செய்து, நமது பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்!
நம்மைத் துருப்பிடிக்காமல் வைக்காமல், தூண்டிவிடுபவன் நமது எதிரியே.. என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
எட்மண்ட் பர்க் என்னும் அறிஞர் கூறுவதைக் கேளுங்கள்..
"யார் நம்முடன் போராடுகிறானோ, அவனோ நம்முடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுகிறான். நம்முடைய திறமையைக் கூர்மைப்படுத்துகிறான். ஆதலின் நமது எதிரியே நமக்கு மிகவும் உதவி செய்பவன். " என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
எதிரி ஒவ்வொருமுறை நம்மைத் தாக்கும்போதும், நாம் நம்மை அவனை விட பலப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்குவது அவசியமல்லவா! எனவே, நம்மை பலப்படுத்திக்கொள்கிறோம். ! எதிரி சாமான்யனாக இருந்தால், நாமும் அலட்சியமாக இருந்துவிடுகிறோம். ஆனால் அவன் பெரியவனாக இருக்கும்பட்சத்தில், அவனை விட நம்மை வளர்த்துக் கொண்டு, அவனை வென்றே தீரவேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
இதனையே 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்று கொச்சையாக சொல்வார்கள். பேராசையும், சுயநலமும், பொறாமையும் நிறைந்த இவ்வுலகத்தில், ஒன்று நாம் ஜெஎயிக்க வேண்டும் அல்லது ஜெயிக்கப்பட வேண்டும். எனவே உறுதியும், பலமும், நம்பிக்கையும் இல்லாத மனிதனுக்கு வெற்றி ஏது?
எங்கும் போட்டிகளே நிறைந்த இந்த உலகத்தில் உறுதியுடன், தயக்கமின்றி எதிரிகளை வெற்றிக் கொண்டு, செயலாற்றுபவனே முன்னுக்கு வர முடியும்.
நெப்போலியன் ஒரு மாவீரன்தான். அவனை வெல்ல வேண்டும் என்று வெல்லிங்க்டன்பிரபு தனது சிறு வயதிலேயே சபதம் ஏற்றுக்கொண்டார். நெப்போலியனின் ஒவ்வொரு அசைவையும், ஆற்றலையும் கண்டு வியந்தார்! இருப்பினும் தான் எடுத்துக்கொண்ட சபதத்திற்காக, நெப்போலியனைவிட அதிக போர்த்திறமைகளையும், யுக்திகளையும் பல வருஷங்களாக நமக்குள் வளர்த்துக் கொண்டார்.
தன்னுடைய காலம் வந்தபோது, நெப்போலியன் என்ற மாவீரனை வென்று உலகப்புகழ் பெற்றார்.
எதிரி பலமாக இருந்தால்தான், வெல்லிங்டன் பிரபு, உலகப்புகழ் பெற முடிந்தது! உலகத்தின் ஒரு சிறந்த தளபதியாக கருதப்படுகிறார்.
எனவே, எதிரிகளை வெறுக்காதீர்கள். அவர்கள் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். நமக்கு உண்மையில் நன்மை புரிபவர்கள் அவர்களே என்று உணர்ந்து அவர்களை மன்னித்துவிடுங்கள். இருப்பினும், அவரை வெல்வதற்கு நாம் தாயாரகவும் தகுந்த முன்னேற்பாட்டுடனுன் எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டும்.
சில நாடுகளுக்கும், மக்களுக்கும் இயற்கையே எதிரியாக அமைந்துவிட்டது! ஜப்பான் நாட்டில் வருடத்தில் பல நாள்கள் பூகம்பம்தான். சரியான வீடு கூட கட்டமுடியாது. நம்மைப் போன்று விவசாயமெல்லாம் அங்கு செய்ய முடியாது. போதாததற்கு இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசி நாகசாகி, ஹிரோசிமா என்ற இரண்டு பெரிய நகரங்களையும் அழித்துவிட்டது.
"அய்யோ! ஜப்பானும், ஜப்பானியர்களும் இதோடு தொலைந்துவிட்டார்கள்!" என்றே உலகும், உலகநாடுகளும் நினைத்தன. ஆனால் ஜப்பானிய நாடோ, ஜாப்பானிய மக்களோ வீழ்ந்துவிடவில்லை.
"இயற்கையை வெல்ல வேண்டும், அனைத்து நாடுகளையும்விட அறிவிலும் செல்வத்திலும் சிறந்து விளங்க வேண்டும்" என்று ஊப்பானிய மக்கள் வீர சபதம் எடுத்துக் கொண்டனர். கடுமையாக உழைத்தார்கள். உழைப்பிலேயே இன்பத்தையும், வெற்றியையும் கண்டார்கள்.
தொழில்நுட்பத்திலும், அறிவிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் மகத்தான சாதனை கண்டனர். பணமும், புகழும் தேடி வந்தன. இன்று உலகத்திலேயே ஜப்பானியர்கள்தான் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
அவர்களை அழித்த, அமெரிக்க நாட்டினை (எதிரி நாட்டினையும்) கூட உறவாக மாற்றிக் கொண்டு, இன்று அமெரிக்காவுடன் சம்மாக உலகச் சந்தையில் போட்டி போடுகின்றனர்.
அமெரிக்காவே இன்று ஜப்பானியரைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டனர் என்றால் என்ன காரணம்?
ஜப்பானியர்கள், தங்களது எதிரிகளையும், துணையாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டனர். எனவே, முன்னேறத் துடிக்கும் நீங்களும், அவர்களைப் போன்று எதிரியைத் துணையாகக் கொண்டே வெற்றி பெறுங்கள்.. வெற்றிக்கான சூட்சும்மும் இதுதான் என்று நன்றாக அறிந்துகொள்ளுங்கள் நண்பர்களே..!!!
இனி எதிரியை கூட உங்களுடைய வெற்றிக்கு துணையாக்கிகொள்ளக்கூடிய மனநிலையை வளர்த்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். சரியா? நான் நினைப்பது சரி என்றால் நிச்சயம் நீங்கள் வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்..
இந்த எண்ணம் உங்களிடம் மேலோங்கி இருக்குமானால் இந்த பதிவிற்கு நான் எடுத்துக்கொண்ட நேரமும், சிரத்தையும் வீணாகவில்லை என்று பெருமிதம் கொள்வேன். என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே?!!
உங்களது கருத்துகளை எழுதுங்கள்.. ஆவலோடு காத்திருக்கிறேன்..!! நன்றி நண்பர்களே..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக