ராமநாதபுரம் : "" சிறுபான்மை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்.,-தி.மு.க., என இரண்டு கட்சிகளும் நிறைவேற்றாமல் துரோகம் செய்ததற்கு பாடம் கற்பிக்க வேண்டும்,'' என ,ராமநாதபுரம் ம.ம.க., வேட்பாளர் ஜவாஹிருல்லா கூறினார். கீழக்கரை ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஓட்டு சேகரித்த அவர் ,கீழக்கரை மற்றும் சுற்றுபகுதிகளில் பிரசாரத்தின் போது பேசியதாவது: சிறுபான்மை மக்களுக்கு காங்., தி.மு.க., துரோகம் இழைத்துவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்ற இரு கட்சிகளும் தவறிவிட்டன. 2004 லோக்சபா தேர்தலின்போது சிறுபான்மை மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, காங்.,- தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறின. ஆட்சி அமைத்தபின் சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க , நீதிபதி ரெங்கநாத்மிஸ்ரா தலைமையில் தேசிய கமிஷன் அமைக்கப்பட்டது. மிஸ்ரா கமிஷன் ஆய்வு நடத்தி பரிந்துரையை 2007ல் சமர்பித்தது. ஆனால் அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்ய அரசு தவறிவிட்டது.
2009ல் மீண்டும் லோக்சபா தேர்தல் நடைபெற்றபோது அனைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென காங்., -தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின் மிஸ்ரா அறிக்கையை பார்லி.,யில் தாக்கல் செய்ய தி.மு.க.,-காங்., மறுத்துவிட்டது. கடைசியாக 2009 டிசம்பரில் தான் பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டது. மிஸ்ரா கமிஷன் மதவழி சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பரிந்துரை செய்தது. மிஸ்ரா கமிஷன் அறிக்கையை பார்லி.,யில் தாக்கல் செய்து ஒராண்டுக்கு மேலாகியும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த தி.மு.க., மற்றும் காங்., தலைவர்களிடம் பலமுறை முறையிட்டும் ,யார் காதிலோ ஊதிய சங்கு போல் ஆகிவிட்டது. சிறுபான்மை மக்களுக்கு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ,தி.மு.க.,- காங்.,க்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும் , என்றார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் முனியசாமி, நகர் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முனியாண்டி, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா,நகர் செயலாளர் மதிவாணன், மார்க்சிஸ்ட் மகாலிங்கம், இந்திய கம்யூ.,ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி நகர் செயலாளர் கஜேந்திரன், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் முசமில், ம.ம.க., மாவட்ட தலைவர் சலிமுல்லாகான், மாவட்டசெயலாளர் அன்வர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி.தினமலர்