மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற குடும்ப சர்வாதிகார ஆட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் கோப அலைகளோடு வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்ததால் தமிழகமே நேற்றைய தினம் (13-04-2011) எழுச்சியாக இருந்தது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை சந்தையில் விற்ற தீய சக்திகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும்.
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட மூன்று தொகுதிகளின் வெற்றிக்கு தீவிரமாக களப்பணியாற்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், கொங்கு இளைஞர் பேரவை, இயக்குநர் சீமானின் நாம் தமிழர் இயக்கம், நடிகர் விஜய்-யின் மக்கள் இயக்கம், இந்திய தவ்ஹீத் ஜமாத், தாவூத் மியாகான் அவர்களின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள், சமுதாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், பெருமளவில் மோசடிகளையும், வன்முறைகளையும், தில்லுமுல்லுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுத்த தேர்தல் ஆணையத்திற்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக