கோபம் ஒரு வியாதி. சற்று நேரும் உங்களைப் பலம் கொண்டவர் போல் காட்டும். ஆனால், நேரம் ஆக ஆக நீங்கள் சோர்ந்து போவீர்கள். அதன் பின் உடலும் உள்ளமும் சோர்ந்து போகும்.
கோபமடையும் போது நமது உடலில் ஏற்படும் பல்வேறு உயிரியல் மாற்றங்களினால் நரம்பு மண்டலமும், தசை மண்டலமும் தூண்டப்பட்டு நமக்கு அதிகப்படியான ஆற்றல் கிடைக்கிறது. இந்த ஆற்றலை பயன்படுத்தி சில நேரங்களில் கொலையும் செய்யத் துணிபவர்களும் உண்டு. ஆனால் நாம் பெறும் இந்த அதிகப்படியான ஆற்றல் தற்காலிகமானதே. சுpறிது நேரம் கழித்து கோபம் தணியும் போது உடல் வலிமை முழவதையும் இழந்ததுபோல் நாம் உணர்கிறோம்.
இப்படி தொடர்ந்து கோபப்படுபவர்கள் தலைவலி, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண், வயிற்றுப்போக்கு மற்றும் சர்க்கரை வியாதியாலும் பாதிப்படைய வாய்ப்புண்டு.
ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது, அது ஆழ்மனதில் ஒரு மாறாத வடுவை ஏற்படுத்திவிடும். மேலும் மேலும் கோபப்படும்போது அந்த வடு வலுவடைந்து, தெளிவான மனதில் குழப்ப நிலையை ஏற்படுத்தி ஒருவனை மனநோயாளியாகக் கூட மாற்றி விடும்.
தீ என்ன செய்கிறது?
ஏரியக்கூடிய பொருளை எரித்துவிட்டுத்தான் அணைந்து போகும். அது மாதிரி கோபமும், மனிதனை அழித்துவிட்டுத்தான் அணையும் என்று சிலர் கூறுவதுண்டு. கோபத்தை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். பயபக்தியுடையவர்கள் கோபத்தை அடக்கி விடுவார்கள்.
…கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள் என்று இறைவன் கூறுகிறான். (திருக்குர்ஆன் 3:134)
கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே வீரன். உங்களில் ஒருவருக்கு கோபம் வந்து விடுமானால் அவர் நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து கொள்ளவும். கோபம் அடங்கி விட்டால் நல்லது. இல்லாவிடில் படுத்து கொள்ளவும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) தம் தோழர்களோடு அமர்ந்திருக்கும்போது, ஒரு மனிதர் நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கெதிராக, அவமானம் தரும் வார்த்தைகளை உபயோகித்தார். இது அபூபக்கர் (ரலி) அவர்களை பெரிதும் புண்படுத்தியது. ஆனால், அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுமை காத்தார்கள். இரண்டாவது முறையும் அம்மனிதர் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு எதிராக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தினார். ஆனாலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுமை காத்தார். மூன்றாவது முறையும் அம்மனிதர் நாவால் அபூபக்கர் (ரலி) அவர்களைப் புண்படுத்திய போது அபூபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து பதில் சொல்ல முற்பட்டார்கள். உடனேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து விட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் அவர்களே! தாங்கள் என்மீது அதிருப்தி கொள்கின்றீர்களா? என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை என பதிலளித்துவிட்டு ஆனால் வானத்தில் இருந்து ஒரு வானவர் வந்தார். அவர் அந்த மனிதரின் வார்த்தைகளை மறுத்துரைக்க முயன்றார். நீங்கள் அந்த மனிதரின் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முற்படவே அந்த வானவர் திரும்பிச் சென்று விட்டார். அந்த இடத்தில் ஷைத்தான் அமர்ந்து கொண்டான். ஷைத்தான் அமர்ந்திருக்கும் இடத்தில் என்னால் இருக்க முடியாது. ஆகவேதான் நான் எழுந்தேன். என்று கூறினார்கள்.
கோபம் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குக் காரணமான சூழ்நிலையை மாற்றி பேச்சைத் திசை திருப்பலாம்.
உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் கோபமான சூழ்நிலையில் தொடர்ந்து விவாதிப்பதை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் அப்படித் தொடரும் விவாதம் அறிவுப்பூர்வமாக இருக்காது என்பதுடன் நீதிக்குப் புறம்பான செயல்களையும் செய்யத் தூண்டும்.
கோபத்தைச் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை இருக்குமானால் அவ்விடத்திலிருந்து அகன்று விடுவது நல்லது.
பொறாமை உணர்வு கொண்டவர்களுடனும், முன் கோபிகளிடமும். கர்வம் உள்ளவர்களிடமும் அதிகமாக விவாதிக்காமலும், வாதம் செய்யாமலும் இருப்பதும் நல்லதாகும்.
மன அமைதியே எல்லாவற்றினும் முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டால் கோபம் கட்டுப்படும்!
ரஹ்மானுடைய (நன்றி மிக்க) அடியார்கள் (யாரென்றால்) பூமியில் (அடக்கமாகவும்) பணிவாகவும் நடப்பார்கள். மூடர்கள் அவர்களிடம் தர்கிக்க நேரிட்டால் ‘ஸலாமுன்” என்று கூறிவிடுவார்கள். (திருக்குர்ஆன் : 25:63)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக