கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.
சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார்.
சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.
வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'
நன்றி. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக