ஜூன் 10- ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும்; தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும்; விலைவாசியைக் கட்டுப்படுத்தவும்; தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றவும் அயராது பாடுபடு...வேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகள் சொல்லி மாளாது. சட்டம்-ஒழுங்கு சீரழிவு, கடுமையான மின்வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கள்ள லாட்டரிச் சீட்டு விற்பனை, ரேஷன் பொருட்கள் கடத்தல், வேலையில்லாத் திண்டாட்டம், போலி மற்றும் காலாவதியான மருந்து விநியோகம், நில அபகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தமிழக மக்கள் சிக்கித் தவித்தனர். ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழ்நாடு சிக்கித் தவித்தது. அதிமுகவின் மக்களாட்சி மலர்ந்தவுடன் சுதந்திரம் கிடைத்த உணர்வு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஏழு வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. இதுவரையில் இல்லாத அளவிற்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கென்று ஒரு தனி அமைச்சகமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்கள் சந்தித்த மிக முக்கியமான பிரச்சனை சட்டம்-ஒழுங்கு சீரழிவு. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக் காடாக மாற்றியது தான் திரு. கருணாநிதியின் கடந்த ஐந்து ஆண்டு கால சாதனை. இதனை சீர்செய்யும் விதமாக சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், நிருவாகத்தை செம்மையாக்கவும் ஆளுநர் உரையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகக் காவல் துறை இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை என்றும் ஸ்காட்லாண்டு யார்டு போன்ற உலகில் சிறந்து விளங்கும் காவல் துறைக்கு இணையானது என்றும் பெயர் பெற்று விளங்கியது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம், காவலர்கள் தங்கள் பணிகளில் எத்தகைய குறுக்கீடும், இடையூறும் இல்லாமல் தங்கள் கடமையை செவ்வனே செய்வது வாடிக்கை. அப்போதேல்லாம் சமூக விரோதிகள் மீதும், தீவிரவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழும் என்பதும் அனைவரும் அறிந்ததே. எனவே, சட்டம்-ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டி மக்கள் எவ்வித பயமும் இன்றி அமைதியாக தங்களது வாழ்க்கையை நடத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் ஏற்கெனவே எடுத்துள்ளேன். காவல் துறையினர் இழந்த பழம் பெருமை விரைவில் மீட்கப்படும் என்பதையும், தமிழகம் விரைவில் முழு அமைதிப் பூங்காவாக மாறும் என்பதையும் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து, மக்களுக்கு எவ்வளவு நேரம் மின்சாரம் கிடைக்கும் என்பதே தெரியாத ஒரு நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர். சென்னை மாநகரில் ஒரு மணி நேரம், மாநிலத்தின் இதரப் பகுதிகளில், மூன்று மணி நேரம் மின் தடை என முந்தைய தி.மு.க. அரசு அறிவித்தது. ஆனால், உண்மையில், அதற்கு மேலும் அறிவிக்கப்படாத மின் தடையாக மேலும் 2, 3 மணி நேரம் எல்லா பகுதிகளிலும் மின் தடை இருந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் அறிவர். மேலும், தொழிற்சாலைகளுக்கு 20 சதவீதம் மின் வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான உச்ச மின் தேவை காலத்தில் 90 சதவீதம் மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தேவைக்கேற்ப மின் திட்டங்களை ஏற்படுத்தாததும், நிருவாக சீர்கேடுகளும் தான் இவ்வாறு மின் வெட்டு ஏற்பட முக்கியக் காரணம் ஆகும். கடந்த ஐந்தாண்டு முழுமையும், இவற்றை எல்லாம் மறைத்து, முந்தைய எனது ஆட்சிக் காலத்தில் திட்டங்கள் தீட்டப்படாதது தான் மின் வெட்டுக்குக் காரணம் என உண்மைக்கு மாறான செய்தியை முந்தைய தி.மு.க. அரசு பரப்பி வந்தது. பழுதடைந்த நிலையில் உள்ள மின் நிலையங்களை உடனே சரி செய்ய போர்க்கால அடிப்படையில் எனது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி 2010 முதல் பழுதடைந்த நிலையில் இருந்த வழுதூர் எரிவாயு சுழலி மின் நிலையம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் இந்த ஜூன் மாதம் மீண்டும் இயக்கி வைக்கப்பட்டது. இதே போன்று, ஓராண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த குத்தாலம் எரிவாயு சுழலி மின் நிலையமும் இந்த மாதம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! இந்த இரண்டு மின் திட்டங்களும் ஓராண்டு காலமாக பழுதடைந்த நிலையில் இருந்தும், அவற்றை சரி செய்ய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டே வார காலத்திற்குள் இவற்றை சரி செய்து, இவை இரண்டும் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தற்போது மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை நிலையை மாற்றி அமைக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் எனது அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல பழுதடைந்த மின் நிலையங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளன. குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் முறையை இணைத்து லாபகரமான மற்றும் நிலையான மின் கொள்முதல் கொள்கையை எனது அரசு கடைபிடிக்கும். அடுத்த ஐந்தாண்டுகளில், மின் வாரியத்தின் நிறுவு திறன் மேலும் 10,000 மெகா வாட்டிற்கும் அதிகமாக அதிகரிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது, எனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், வரும் ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டு 2 மணி நேரமாகக் குறைக்கப்படும். படிப்படியாக, மின் வெட்டே இல்லா மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என்பதை இந்த அவையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பற்றி சில உண்மைகளை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழக சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத் துறைகள் அனைத்தும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தே செயல்பட வேண்டும் என்று நான் உத்தரவிட்டதன் அடிப்படையில் 14-வது சட்டமன்றம் தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகின்றது. சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள புதிய கட்டடத்திலிருந்து புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டதற்கு ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். சட்டமன்றமும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாற்றப்பட்ட ஒரு சில துறைகளும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள கட்டடத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டது ஏன் என்பதை 20.5.2011 அன்றே ஒரு அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளேன். எனினும், ஒரு சில அரசியல் கட்சியினர் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இயங்க வேண்டும் எனவும் அந்தப் புதிய கட்டடம் முந்தைய தி.மு.க. அரசால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் தான் நான் அதனை மாற்றுவதற்கு உத்தரவிட்டதாக தவறான கருத்தினை தெரிவித்துள்ளனர். அரசு நிருவாகத்தில் நான் என்றுமே அரசியலை புகுத்தியதில்லை என்பதை நடுநிலையாளர் அனைவரும் ஒப்புக் கொள்வர். தலைமைச் செயலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படுவதை நான் ஒரு போதும் எதிர்த்தது இல்லை. ஆனால் தற்போது கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டடத்திலிருந்து பணியாற்றுவதால் நிருவாக குறைபாடு எதுவும் ஏற்படாது என்றால் நான் அங்கிருந்தே பணியாற்றி இருப்பேன். அவ்வாறு இயலாது என்பதால் தான் அங்கிருந்து பணியாற்றுவது நிருவாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால் தான் சட்டமன்றம் மற்றும் அங்கு மாற்றப்பட்ட ஒரு சில துறைகளை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 4.7.2007 அன்று பொதுப்பணித் துறையால் வெளியிடப்பட்ட அரசாணையில் (ழு.டீ.ஆள.சூடி.209) ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 8 லட்சம் சதுர அடியில், சட்டமன்றம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள், தலைமைச் செயலாளர் அலுவலகம் மற்றும் பொதுத் துறை, உள்துறை மற்றும் நிதித்துறை முதலிய முக்கிய துறைகளுக்காக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! எந்த ஒரு அறிவார்ந்த அரசாவது சட்டமன்றம் மற்றும் முதலமைச்சர் அலுவலகம், ஏனைய அமைச்சர் அலுவலகங்கள் மற்றும் 2, 3 துறைகளுக்கு மட்டும் ஒரு புதிய கட்டடத்தை அதுவும் 2 கிலோ மீட்டர் தொலைவில் கட்டுமா? 200 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்ட இந்த பிளாக் ஹ கட்டடத்திற்கு இன்றைக்கு 600 கோடி ரூபாய்க்கு மேலான செலவுக்கு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிளாக் ஹ கட்டடத்தின் மொத்த உட்பரப்பு 97,829 சதுர மீட்டர்கள் ஆகும். அதில், அலுவலக உபயோகத்திற்காக பயன்படுத்தக் கூடியது 47,491 சதுர மீட்டர்கள் தான். அதாவது, 49 சதவீதத்திற்கும் குறைவான கட்டட உட்பரப்பையே உபயோகப்படுத்த இயலும். ஏனைய கட்டடப் பரப்பு எல்லாம் சுற்றுப் பாதை, நடைக் கூடம், வாஸ்து மீன் தொட்டி போன்ற அலுவலக உபயோகங்கள் அல்லாத வேறு உபயோகங்களுக்கான இடங்கள் தான். அந்தக் கட்டடத்தின் வடிவமைப்பு வணிகக் கட்டடங்களைப் போன்று அமைக்கப்பட்டுள்ளதால் தான், அலுவலகத்திற்காக பயன்படுத்தக் கூடிய இடம் 49 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், 624 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை செலவு செய்து கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் பாதிக்கு மேல் பயன்படுத்த முடியாத வெற்றிடமாக உள்ளது. மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பிளாக் ஏ கட்டுவதற்கு உத்தரவு வழங்கி ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு 21.5.2009-ல் அரசாணை எண்.81-ல் ஏனைய அரசுத் துறைகளுக்காக பிளாக் ஏ கட்டடத்தைக் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சில அரசுத் துறைகள் மற்றும் அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டமன்றம் மட்டும் ஒரு இடத்திலும், ஏனைய அரசுத் துறைகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறு ஒரு இடத்திலும் செயல்பட வேண்டும் என்று அறிவார்ந்த எந்த அரசும் முடிவு செய்ய இயலுமா? அரசு நிருவாகத்தைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காமல் கட்டடம் கட்டப்பட ஆணையிடப்பட்டதால் தான் பெரும் நிருவாக சிக்கல் ஏற்பட காரணமாயிற்று. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள பிளாக் ஏ கட்டடத்தில் கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடையாமலேயே 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறப்பு விழா நடத்தப்பட்டது. அந்தக் கட்டடத்தின் மேற்கூரை கோபுரம் கட்டி முடிக்கப்படாமலேயே தற்காலிக செட்டிங் போட்டு 3 கோடி ரூபாய்க்கு மேல் வீணடிக்கப்பட்டது. கட்டடத் துவக்க விழா நடத்தப்பட்டு விட்டதால் முழுமையடையாத கட்டடத்தில் இருந்து 19.3.2010 அன்று சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற வேண்டியதாயிற்று. அவ்வாறு 19.3.2010 அன்று சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற போது சட்டமன்றத் தரையில் புதிய தரை விரிப்பு தான் போடப்பட்டிருந்தது. காலரிகள் உள்ள முதல் மாடி முடிக்கப்படாததால் பெரிய திரைச்சீலை ஒன்றினால் சுவர்கள் மறைக்கப்பட்டும், தற்காலிக இருக்கைகள் அமைக்கப்பட்டும் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றப் பேரவைத் தலைவர் இருக்கையும் கூட தற்காலிகமாக உயர்த்தப்பட்ட மேடையில் நிறுவப்பட்டது. ஆனால், அரசு நிருவாகம் திறமையாக செயல்படவேண்டும் என்று நினைப்பவர் யாரும் இவ்வாறு இரண்டு வெவ்வேறு கட்டடங்களிலிருந்து செயல்பட முடியாது. செம்மையான நிருவாகம் இருந்தால் தான் மக்கள் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதால் தான், புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட ஆறு துறைகளையும் எஞ்சிய 30 துறைகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு நான் மாற்றியுள்ளேன். நிருவாக வசதிக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவில் அரசியல் காரணம் எங்கிருந்து வந்தது? மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் மத்தியப் பகுதியில் உள்ள அண்ணா சாலையில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மேம்பாலங்கள் கட்டப்பட்டால் தான் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம் என்பதை முந்தைய அரசே உணர்ந்திருந்தது. எனவே தான், அங்கே மேம்பாலங்கள் கட்டப்படும் என 2010-11 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அறிவிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேம்பாலங்கள் கட்டப்படவில்லை. சாலை மேம்பாலம் துவங்கப்படாத நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட கட்டடப் பகுதியிலுள்ள அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே இயலாது. புதிய பிளாக் ஏ கட்டடம் பயன்படுத்தப்படாமல் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு விடும் என்று தி.மு.க.வினர் அங்கலாய்க்கத் தேவையில்லை. இந்தக் கட்டடம் உரிய முறையில் பயன்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஜனவரி மாதம் முந்தைய தி.மு.க. அரசால் ஆறாம் கட்டமாக கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்ட 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இதுவரை கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதலுக்கான உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதாவது, 10 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் இதுவரை கொள்முதல் செய்யப்படாத சுமார் 7 லட்சத்து 48 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதலுக்கான உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்; ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்டு இன்னமும் வழங்கப்படாத 1 லட்சத்து 27 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை, அனாதை இல்லங்கள், அரசு பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், சுகாதார துணை மையங்கள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அமைப்புகளுக்கு வழங்க இந்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமச்சீர் பள்ளிக் கல்வி முறையினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுமே எதிர்த்ததில்லை. 2010 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்ட முன் வடிவு, 2010 குறித்து இப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது கொள்கை அளவிலே சமச்சீர் கல்வி முறையை ஏற்றுக் கொள்வதாகத் தான் தெரிவித்தோம். சமச்சீர் கல்விக்கு இந்த அரசு எதிராக இருப்பது போல சிலர் தவறாக சித்தரிக்க முயல்வது மக்களை திசை திருப்பும் முயற்சி தான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் சீரான, செம்மையான கல்வி பெற வேண்டும் என்பதும், தனியார் பள்ளிகளிலே வழங்கப்படும் உயர்தர கல்வி ஏனைய பிரிவினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும் தான் எங்கள் கொள்கை. இவ்வாறு முதல்வர் ஜெயலிலதா பேசினார்.
ஜூன் 10- ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கவும்; தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும்; விலைவாசியைக் கட்டுப்படுத்தவும்; தமிழ்நாட்டை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்றவும் அயராது பாடுபடு...வேன் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகள் சொல்லி மாளாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக