ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபிகள்... நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (5892)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (435)
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.
ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3512)
எனவே தாடி வைப்பது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக