சிரியாவுக்கு எதிரான நடவடிக்கை: துனிஷியாவில் உலக மாநாடு
சிரியாவின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் “உலக மாநாடு” துனிஷியாவில் நடைபெறவுள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.
இப்போராட்டத்தில் போராட்டக்காரர்களை இராணுவம் கொன்று குவிக்கிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 7000க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஐ.நா அறிவித்துள்ளது.
சமீபத்தில் சிரியாவின் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சிரியாவுக்கு எதிரான உலக மாநாடு துனிஷியாவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரபு கூட்டமைப்பு நாடுகள் உட்பட 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சேதமடைந்த பகுதிகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வது குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் சிரியாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்தில் கோபி அன்னான் சிரியாவின் தூதுவராக நியமிக்கப்படுவார். இவர் ஐ.நா பொதுச் செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் இந்த மாநாடு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதலில் ஒரே நாளில் மட்டும் 50லிருந்து 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக