புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமீபத்தில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டது. இதில், அனைத்துவிதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை, மத்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை முன்னிலையில், இந்திய சென்சஸ் கமிஷனர் சி.சந்திர மவுலி நேற்று வெளியிட்டார்.
இதன் விவரம் வருமாறு: * கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011)மட்டும் மக்கள் எண்ணிக்கை 18 கோடி அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 21.15 சதவீதமாக இருந்தது. அது, 2011ம் ஆண்டு, 17.64 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 90 ஆண்டுகளைப் பார்க்கும் போது தற்போது மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் முதல் தடவையாக குறைந்திருக்கிறது.
* இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. இது உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய நாடுகளின் மக்கள்தொகை முழுவதையும் கூட்டினால், அதை விட அதிகமாக நமது நாட்டின் மக்கள்தொகை உள்ளது.
* ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம். பெண்கள் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம்.
* ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் விகிதம் 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இது, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட மிகக்குறைவான விகிதமாகும்.
படித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு: * மக்கள்தொகையில், ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களில் படித்தவர்கள் எண்ணிக்கை 74 சதவீதம். படிக்காதவர்கள் 26 சதவீதம்.
* 2001ம் ஆண்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 64.83 சதவீதமாக இருந்தது, 2011ம் ஆண்டில் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மட்டும் படித்தவர்கள் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெண் கல்வி உயர்வு: * 2001ம் ஆண்டில் பெண்களில் 53.67 சதவீதம் பேர் எழுத, படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர். இது, 2011ம் ஆண்டு 65.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டு எழுத, படிக்க தெரிந்த ஆண்களின் எண்ணிக்கை 75.26 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் ஆண்களை விட பெண்களின் படிப்பறிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
* மாநிலங்களில் அதிகம் எழுத, படிக்க தெரிந்தவர்கள் கேரளாவில் உள்ளனர். இங்கு 93.91 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். குறைவான எண்ணிக்கை உள்ள மாநிலம் பீகார். இங்கு 63.82 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இங்கு, 19 கோடியே 90 லட்சம் மக்கள் உள்ளனர்.
* மிகக்குறைவான மக்கள்தொகை லட்சத்தீவில் உள்ளது. இங்கு, 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர்.
* உ.பி., மகாராஷ்டிரா மாநிலங்களின் மக்கள்தொகையை சேர்த்தால், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகமாகும்.
* அதிக மக்கள் நெருக்கம் உள்ள பகுதியாக டில்லியின் வடகிழக்கு மாவட்டம் உள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 37 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.
* மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது, அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒருவர் மட்டுமே வசிக்கிறார்.
* உ.பி.,க்கு அடுத்தபடியாக மக்கள்தொகை அதிகம்கொண்ட மாநிலங்கள்: மகாராஷ்டிரா- 11 கோடியே 23 லட்சம் , பீகார்-10 கோடியே 38 லட்சம், மேற்கு வங்கம் - 9 கோடியே 13 லட்சம், ஆந்திரா- 8 கோடியே 46 லட்சம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட சீனா. இதன் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் 19.4 சதவீதமாகும்.
27 லட்சம் பேர் பங்கேற்பு: சென்சஸ் 2011, இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும், இரண்டு கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வீடுகள் வாரியாக கணக்கெடுப்பு கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. பின்னர், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தாண்டு பிப்., 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு செலவான தொகை 2,200 கோடி ரூபாய். கணக்கெடுக்கும்பணியில் மொத்தம் 27 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக மொத்தம் 8,000 டன் பேப்பர் செலவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக