தமிழக சட்டசபை தேர்தலை கண்காணிப்பதற்காக வெளிமாநில ஐ.ஜி.க்கள் 4 பேர் நேற்று தமிழகம் வந்துள்ளனர். இதில் ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஜிதேந்தர் வட மாவட்டங்களின் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்..........
நேற்று போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை சந்தித்து புகார் கொடுக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் 7598700298 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடு்க்கப்படும்.
தேர்தல் பார்வையாளருடன் வீடியோ குழு மற்றும் பாதுகாப்புக்கு கமாண்டோ வீரர்கள் உள்ளனர். ஜிதேந்தர் இன்று முதல் தினமும் பிற்பகலில் இருந்து இரவு வரை பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ரகசியமாக கண்காணிப்பார். பதட்டமான வாக்குச் சாவடி பகுதிகள், பிரச்சினைக்குரிய பகுதிகள், அரசியல் கட்சியினரின் செயல்பாடுகள், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? போன்றவற்றை ஆய்வு செய்வார். அவர் கண்காணிப்பில் ஈடுபடும்போது தேவைப்படும் காட்சிகளை வீடியோவில் பதிவு செய்வார்கள். அந்த காட்சிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் கட்சியினரின் ரகசிய திட்டங்கள், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பொருட்களை பதுக்கி வைத்திருப்பது பற்றி தகவல் கொடுப்பவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.
சென்னையில் 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அன்பளிப்புகள், பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
நேற்று சென்னையில் போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் பணம், பொருள் ஏதும் சிக்கவில்லை. ஆனால் மத்திய சென்னையில் ஆவணங்கள் இல்லாமல் சென்ற 4 மினி லாரி, 10 மோட்டார் சைக்கிள்கள், தென்சென்னை பகுதியில் 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சோதனையின்போது சைதாப்பேட்டையில் ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஒருவன் பிடிபட்டான். அதேபோல் செம்மஞ்சேரி பகுதியில் நடந்த வாகன சோதனையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய வட இந்திய வாலிபர் ஒருவர் சிக்கினார். தேர்தல் முடியும் வரை தீவிர வாகன சோதனையைத் தொடர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக