டெல்லி: பாபர் மசூதியை இடிக்க சதிசெய்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பால்தாக்கரே, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரிடால்மியா, சாத்வி ரிதம்பரா மற்றும் மகந்த் அவைத்ய நாத் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதனை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் இதனை கடந்த மே மாதம் உறுதிசெய்தது.
இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
4 வாரங்களுக்குள் இதுகுறித்து பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர் மற்றும் டி.எஸ்.தாக்கூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த நோட்டீஸில் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக