÷புவனகிரி அருகே உள்ளது பு.உடையூர். இக்கிராமத்தில் தாமோதர செட்டியார், தனது வீட்டின் வெளியே மளிகை கடை நடத்தி வருகிறார். தாமோதர செட்டியார் உடல்நிலை சரியில்லாததால் சென்னைக்கு சென்றுள்ளார். இதனால் செவ்வாய்க்கிழமை இரவு தாமோதர செட்டியாரின் மனைவி ராஜலட்சுமி (37), அவரது மகள்கள் ஜெயபிரியா, சிவரஞ்சனி ஆகியோர் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
÷அப்போது இரண்டு கொள்ளையர்கள் வீட்டின் வெளியே இருந்த மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடினர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து ராஜலட்சுமியின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.
அப்போது ராஜலட்சுமி எழுந்து திருடன், திருடன் என சத்தம் போட்டுள்ளார். பக்கத்து அறையிலிருந்த இருமகள்களும் அங்கு வந்தனர். அப்போது கொள்ளையரில் ஒருவன் அவர்களை மானபங்கம் செய்யவும் முயற்சித்துள்ளார். இதிலிருந்து தப்பிய சிவரஞ்சனி கொள்ளையனின் தலையில் போர்வையை போட்டு அவரை நிலைகுலைய செய்துள்ளார்.
÷உடனே ராஜலட்சுமி, மண்வெட்டி எடுத்து அந்த கொள்ளையனை தாக்கியுள்ளார். இதனால் காயமுற்ற கொள்ளையன் கீழே விழுந்தான். இதைப் பார்த்த மற்றொருவன் பணம், நகைகளுடன் தப்பி ஓடினாராம். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து தாமோதர செட்டியாரின் அண்ணன் மகன் மோகன் (22) மற்றும் பொதுமக்கள் வந்து கொள்ளையனை பிடித்தனர்.
தகவலறிந்த புவனகிரி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது ரத்த வெள்ளத்தில் கிடந்த கொள்ளையன் நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு கிராமம் தொட்டித் தெருவைச் சேர்ந்த முருகன் (32) என தெரியவந்தது.
÷பின்னர் கொள்ளையன் முருகனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு முருகன் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி துரை, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கொள்ளையனை துணிச்சலுடன் பிடித்த பெண்களை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக