புது தில்லி, பிப்.10: நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் படத்தில் தலையில் முடியில்லாமல் அவர் காட்சியளிக்கிறார். புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக அவருடைய முடி முழுவதுமாக உதிர்ந்துவிட்டது.
"இறுதியாக முடி போய்விட்டது, மிகவும் நன்றாக உள்ளேன்' என்று டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதாகவும், நலமாக இருப்பதாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, என்னுடைய நாட்டு மக்களின் பிரார்த்தனை காரணமாக மீண்டும் வலுவான மனிதனாக வருவேன். எனக்கு ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதிலிருந்து மீண்டு, இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஜெய்ஹிந்த்! என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் யுவராஜ். உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு அவருடைய நுரையீரலில் கட்டியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆரம்பத்தில் அது சாதாரணக் கட்டி என்று கூறப்பட்டாலும், பின்னர் புற்றுநோய்க் கட்டி என்பது தெரியவந்தது. இப்போது அவர் அமெரிக்காவின் பாஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக