அல்லாஹ்வின் திருப்பெயரால்...
திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் ‘நபிமார்களைப்போல் வாழ்க’ என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.
ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரிஸா வஇப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா … இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.
1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க !
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக்கனியை உண்டதற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3. அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.
4. பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக்கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழவேண்டுமா ?
2. நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க !
( நூஹு(அலை) , லூத் (அலை) ஆகிய )இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைதூதர்களால்)அவ்வருவரையும் இறைவனி(ன் தண்டனையி)லிருந்து காப்பாற்ற முடியவில்லை.
இருவரும் நரகிற் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன்: 66: 10)
இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது.
இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரகவாசி யாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிறகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரக வாசியைப் போன்று வாழ்க என வாழ்த்தலாமா ?
3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க !
இப்றாஹீம் நபி – ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை
வரை)குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர்
வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி ) பிள்ளை பெறுவேனா ?
நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார்.
என அல்- குர்ஆன் : 11: 71, 72. கூறுகிறது .
வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத் தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பர்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா ?
5. நபி யூஸுஃப் – ஸுலைஹா போல் வாழ்க !
1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப்பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.இந்த ஸுலைஹா யார் ?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன்வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
4. திருமறையே இவளை நடத்தை கெட்டவள் என வர்ணிக்கிறது. நடத்தை கெட்டவள் நபியின் மனைவியாக முடியுமா?
5. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா ?
6. திருமணம் நடந்ததாக ஆதாரரமே இல்லாத ஒருவளை – ஒரு தம்பதியை – குறிப்பிட்டு வாழ்த்தலாமா ? இது முறையா ?
7. பல தீமைகளை தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவிக்கவேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
8. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப்பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்கவேண்டுமென்ற அவசியம் என்ன?
9. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
10. அஹ்ஸனுல் கஸஸ் அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?
இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்சிகரமான மணவிழாவில் புதுத்தம்பதியரை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்ளவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப்பார்க்கவேண்டும் ?
பாவமென்று தெரிந்தும் வீம்புக்காக இவற்றில் அடம்பிடிப்பதும் பெரும் பாவமல்லவா ? இவையெல்லாம் சரிதானா என்று இன்னும் சிந்தித்துப் பார்க்காமலிருப்பது பத்தாம் பசலித்தனமல்லவா ?
தவறான ஃபத்வாக்கள்
ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ மர்ர்க்கத்தைப்பற்றி எதையும் துணிந்து எழுதுவது இன்று நாகரீகமாகிவிட்டது. தேசிய அளவில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஷாபானு, இம்ரானா போன்றவர்களின் செய்திகளை சமுதாயம் நன்கறியும்.
தமிழகத்திலிருந்து நெடுங்காலமாக தொடர்ந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில் ‘; இஸ்லாமிய சட்ட விளக்கம்’ என்ற பெயரில் யூஸுஃப் நபி , ஸுலைஹாவை மணமுடித்திருந்தார்கள் என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர், அதை நியாயப்படுத்த இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட மக்களால் அறியப்படாத
‘ மஆரிபுல் குர்ஆன் ” என்னும் உருது கிதாபை ஆதாரமாககக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதற்கு வலுவூட்டும் ஆதாரரம் ஏதையேனும் அதில் குறிப்பிட்டுள்ளார்களா என்றால் எதுவுமே இல்லை. குர்ஆன் , ஹதீஸுடைய விளக்கங்களோ அதனை உறுதிப்படுத்தும் சான்றுகளோ குறிப்பிடப்படவில்லை. சில விரிவுரையாளர்கள் இப்படி எழுதியுள்ளார்கள் என மொட்டையாக மேற்கோள் காட்டியுள்ளார்கள்.
இறுதியில் யூஸுஃப் ஸுலைஹா போல் வாழ்த்தலாம் என பத்வாவும் கொடுத்துள்ளார்கள்.
இதனை வரலாற்று ரீதியாக சற்று ஆராய்ந்தாலே இதற்கு துளியும் ஆதாரம் இல்லை என எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இறை தூதர் நபி யூஸுஃப் (அலை) அவர்கள் வாழ்ந்த காலமோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அவர்கள் ஸுலைஹாவை மணமுடித்தார்கள் என்பதை குர்ஆனோ ஹதீஸோ எந்த செய்தியையும் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூலோ கல் வெட்டோ இல்லை. இமாம்கள் ஏவரேனும் இதுபற்றி எழுதியுள்ளார்களா என ஆராய்ந்த போதும் அப்படியும் இல்லை.
இறைவன் ஸூரா யூஸுஃபில் கூறுகிறான் :
நபியே! இந்த குர்ஆனை ( நாம் வஹீ மூலம்) அறிவித்திருப்பதின் வாயிலாக மிக்க அழகான வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் அறியாதவராக இருந்தீர். (; அல்-குர்ஆன் 12 :13)
அல்லாஹ்வின் தூதரே வஹீ வருவதற்கு முன்னர் இந்தச்செய்தியைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று குர்ஆன் கூறும்போது , மற்றவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். ?
நமக்கு அந்த துஆவில் வரும் நபி மார்களைப்பற்றித் தான் தெரியுமே தவிர அவர்களின் மனைவியருடன் நடத்திய இல்லற வாழ்வைப்பற்றி எதுவும் தெரியாது. அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ இவர்களின் இல்லற வாழ்வு பற்றி எதுவும் அறிவிக்காத போது நாம் எவ்வாறு துணிந்து இது பற்றிக் கூறமுடியும் ?
இவையெல்லாம் புனித நபிமார்களைப்பற்றிப் புனையப்படும் கற்பனைகளல்லவா ? பாவங்களல்லவா? நவூதுபில்வாஹ்! (அல்லாஹ் நம்மைக்காப்பானாக!)
ஓவ்வொரு நபிமார்களின் வாழ்வில் பின்பற்றப்படவேண்டிய எத்தனையோ அம்சங்களும், பாடங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் முன்மாதிரியாகக் கொள்ளாமல் குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்படாத எதையும் நாமாக் கற்பனை செய்து, ஆதாரமற்ற செய்திகளை வைத்து மர்க்கமாக்குவதும் முன்மாதிரியாகக் கொள்வதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவே இல்லை.
எனவே நபி (ஸல்) அவர்கள் வாழ்தியவாறே நாமும் வாழ்த்தவேண்டும்;.
எப்படி வாழ்த்தவேண்டும் ? அவர்களே கற்றுத்தந்துள்ளார்கள்:-
‘பாரகல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்களிலும்
(சந்ததிகள் பெருகுமாறு) அருள் பொழிவானாக! நல்லறங்களில் உங்களிருவரையும் ஒன்றிணைத்து (பெருவாழ்வு) வாழச்செய்வானாக.
அருட்செல்வமும் பொருட்செல்வமும் மக்கட்செல்வமும் ஒருங்கே பெற்று பெரு வாழ்வு வாழுமாறு வாழ்த்தும் இந்த அற்புத துஆவை விட்டு விட்டு சம்பிரதாயத்துக்காகவும் சடங்கிற்காகவும் பிடிவாதமாக திருமண வாழ்த்து என்ற பெயரில் இவர்கள் ஓதுவதும் வாழ்த்துவதும் நபி வழிக்கு மாற்றமாக இல்லையா?
சமுதாயமே ! சிந்திப்பீர்!! தெளிவு பெறுவீர்!!!
நன்றி- அல் பாக்கவி.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக